பலர் பெரும் துன்பத்தையும் வேதனையையும் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் உணர்வு ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்து, ஆவிக்குரிய ரீதியாகவும் வெறுமையாக உள்ளனர். அப்போது, அவர்கள் நற்செய்தியைக் கேட்கும்போது, அதை நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்ரவேல் புத்திரர் எகிப்தில் நானூறு வருடங்கள் கொடுங்கோன்மையின் கீழ் இருந்தார்கள். தேவன் தன்னை விடுவிக்க அனுப்பியதாக மோசே அறிவித்தபோது, அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும், பார்வோன் கோபமடைந்து, வைக்கோல் வழங்காமல் எபிரேய அடிமைகளிடம் அதே அளவு செங்கற்களைக் கேட்டான். மோசே அவர்களிடம் இரண்டாவது முறை பேசியபோது, ஆவியின் வேதனையினாலும் கொடூரமான அடிமைத்தனத்தினாலும் அவர்கள் கேட்கவில்லை (யாத்திராகமம் 6:9).
கசப்பான அனுபவம்
அவர்கள் தேவனை நம்புவதாகச் சொன்னார்கள், ஆனால் மோசேயையும் ஆரோனையும் நம்ப முடியவில்லை. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிப்பதாக பொய்யான வாக்கு அளித்ததால் தான் தங்கள் சுமை அதிகரித்ததாக அவர்கள் நினைத்திருக்கலாம், ஆனால் அடிமைகளாக, மூலப்பொருட்கள் வழங்கப்படாத போதும் செங்கல்களை இந்த ஜனங்கள் வழங்க வேண்டியிருந்தது.
சோகத்தில் மூழ்குதல்
அடக்குமுறையை சகித்துக்கொண்டும், புலம்பிக்கொண்டும், தேவனை வேண்டிக்கொண்டும் இருந்த அடிமைகளுக்கு ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி ஏற்பட்டது (யாத்திராகமம் 2:23-25). மூலப்பொருள் வழங்கப்படாமல், அவர்கள் உற்பத்தி செய்த செங்கற்களின் ஒதுக்கீடு குறையக்கூடாது என்றும், பணி சாத்தியமில்லாததால், பணி அதிகாரிகள் அவர்களை இரக்கமின்றி தண்டித்துள்ளனர். இப்போது அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
குறுகிய பார்வை
இஸ்ரவேல் ஜங்களால் எதிர்காலத்தை கணிக்க முடியவில்லை. "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்" (ரோமர் 8:18) என்பதாக பவுல் எழுதுகிறார். உணவுக்காக தன் பிறப்புரிமையை விட்டுக்கொடுத்தான் ஏசா; இவர்களைக் குறித்து வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களுக்கு நித்திய கண்ணோட்டம் இல்லை.
பொய் தெய்வங்கள்
எசேக்கியேல் தீர்க்கதரிசி நமக்கு அதிக நுண்ணறிவைத் தருகிறார். அவர்கள் பார்வோனின் அரசியல் அடிமைகள் மட்டுமல்ல, சாத்தானுக்கு ஆன்மீக அடிமைகளாகவும் இருந்தனர். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தியர்களின் கடவுள்களை வணங்கி, அவர்களை ஒடுக்குபவர்களின் கடவுள்களை நம்பினர் (எசேக்கியேல் 20:5-9). அநேகமாக, தங்களை அடிமைப்படுத்தும் எகிப்தியர்கள் பலசாலிகள் மற்றும் பணக்காரர்களாக இருப்பதற்கு அவர்கள் தங்கள் தெய்வங்களை வழிபடுவது தான் காரணமோ என்று நினைக்கிறார்கள்.
கருத்தில் கொள்ளுங்கள்
காரியங்கள் சரியாக நடக்காதபோது அல்லது எதிர்பாராத விஷயங்கள் நடக்கும்போது அல்லது யோபுக்கு நேர்ந்தது போல் இழப்புகள் நடந்தாலும், தேவபக்தியுள்ளவர்கள் எந்த காரியத்தையும் சிந்திக்கவும், ஆராயவும், நிதானிக்கவும், சோதிக்கவும், மதிப்பீடு செய்யவும் எதிர் பார்க்கப்படுகிறார்கள் (ஆகாய் 1:7).
வேதனை என் நம்பிக்கையைத் தணிக்கிறதா அல்லது தேவனுக்காக என் ஏக்கத்தைத் துரிதப்படுத்துகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்