ஒரு நபர் தனது வீட்டு பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பெருமையாகக் கூறினார். அலுவலகத்தில் இருந்தாலும் சரி அல்லது வேறு நகரத்தில் இருந்தாலும் சரி எங்கிருந்தாலும் அவரால் சிசிடிவியை இயக்க முடியும். ஆக, வீடு முழுவதும் அவருடைய கண்காணிப்பில் இருந்தது, எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. பிறகு அவர்; “எந்தவொரு மனிதனையும் பாவம் செய்வதைத் தடுக்கும் அளவுக்கு தேவனுக்கு ஏன் ரிமோட் கண்ட்ரோல் இருக்க கூடாது? அவருக்கு அதிகாரம் அல்லது தொழில்நுட்பம் இல்லையா? இல்லையென்றால், அவர் ஏன் பாவிகளை தண்டிக்க வேண்டும்?'' என்பதாக கூறினார். சில நாட்களுக்கு பிறகு அவரது புத்திசாலி டீனேஜ் மகன் அவரின் கட்டுப்பாடுகளை குறைந்த மின்னழுத்தத்தை (ஷார்ட் சர்க்யூட்) உருவாக்கி அவன் என்ன செய்ய விரும்புகிறானோ அதைச் செய்தான்.
மனிதன், ரோபோ அல்ல:
தேவன் தன் சாயலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார். அனைத்து விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைக்க ஆதாமுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது (ஆதியாகமம் 2:19). ஏதேன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் வைத்து, பலவிதமான பழங்களில் இருந்து அவர்கள் விரும்புவதைத் தெரிவு செய்யும் சுதந்திரத்தை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். ஒரே ஒரு மரத்திற்கு மாத்திரம் தடை செய்யப்பட்டு இருந்தது. ஏவாள் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிடத் தேர்ந்தெடுத்தபோது, தேவன் அதை தடுக்கவோ அல்லது ஆதாமிடம் கொடுக்கும் போது அதை நிறுத்தவோ இல்லை (ஆதியாகமம் 3:6).
தெரிவு சுதந்திரம்:
சுதந்திரம் மனிதர்களுக்கு தேவன் அளித்த வரம், அதாவது சுயாதீனம். ஆதாமும் ஏவாளும் தவறான தேர்வு செய்தபோது தேவன் கொடுத்த இந்த வரம் ரத்து செய்யப்படவில்லை அல்லது முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்களின் சந்ததியினரும் இந்த சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர்.
விலங்குகளில் இருக்கும் உள்ளுணர்வு:
இதற்கு நேர்மாறாக, விலங்குகளுக்கு தெரிவு சுதந்திரம், தார்மீக திறன் அல்லது ஆவிக்குரிய நாட்டம் இல்லை. அவர்கள் உள்ளுணர்வால் செயல்படுகிறார்கள்; எனவே ஒரு விலங்கு இனம் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியாக நடந்து கொள்ளும்.
பொறுப்பு:
மனிதர்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரமும் ஒரு அற்புதமான தார்மீகப் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. தர்க்கரீதியாக சிந்திக்கவும், விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு ஒரு மனம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித மனம் பின்விளைவுகளை முன்னறிவித்தாலும், விளைவுகளைப் புறக்கணித்து பாவச் செயலைச் செய்ய முடிகிறது.
நல்ல விசுவாசம்:
ஒரு ஓட்டுநர் உரிமம் பெற்றவர் சரியான நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்துவார், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அதன் பயன்பாட்டில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் வழங்கப்படுகிறது. விபத்துகளை ஏற்படுத்துவதற்கோ, மக்கள் மீது ஏற்றுவதற்கோ, மற்ற வாகனங்களை சேதப்படுத்துவதற்கோ அரசு உரிமம் வழங்குவதில்லை.
சுயாதீனம் அல்லது தெரிவு சுதந்திரத்தை நான் கொண்டாடுகிறேனா மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்