பந்தயத்தின் போது தடம் மாறிய சில விளையாட்டு வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பலர் முதலிடம் பிடித்தாலும் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். அதுபோல கடைசியில் தடுமாறிய சில கதாபாத்திரங்கள் வேதாகமத்தில் உள்ளன.
ஆசா
ஆசா ராஜா யூதாவின் மூன்றாவது அரசன். அவன் பொதுவாக நல்லதையும் தேவனின் பார்வையில் சரியானதையும் செய்தான், மேலும் தேவனிடம் முழுமையாக அர்ப்பணித்தான் (1 இராஜாக்கள் 15:10; 2 நாளாகமம் 15:17). துரதிர்ஷ்டவசமாக, அவனது ஆட்சியின் முப்பத்தைந்தாவது ஆண்டில் சில தவறுகளைச் செய்தான். இஸ்ரவேலின் ராஜா பாஷாவை எதிர்க்க, ஆசா ஆராமின் ராஜாவான பென்னாதாத்துடன் ஒப்பந்தம் செய்தான் (1 இராஜாக்கள் 15:16-22; 2 நாளாகமம் 16:1-10). அனானி தீர்க்கதரிசி ஆசாவை எச்சரித்தார், ஆனால் ஆசா மனந்திரும்பவில்லை; அதிகமான மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். கடுமையான கால் நோயால் பாதிக்கப்பட்ட அவன் கர்த்தரை நாடவில்லை, மருத்துவர்களை மட்டுமே நாடினான்.
யோசபாத்
இஸ்ரவேலின் பொல்லாத அரசன் ஆகாப். அவனுடைய திருமண உறவு மிகவும் மோசமானது, அவனுடைய மகன் யோராம் அவனைப் பின்பற்றவில்லை. யோராம் ஆட்சிக்கு வந்ததும் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான் (2 நாளாகமம் 21:4-6). ஆகாப் யோசபாத்தை தன்னுடன் போரில் சேர அழைத்தான். தீர்க்கதரிசிகள் வெற்றியடைவாய் என வாக்களித்தனர். இருப்பினும், யோசபாத் அது தவறானது என்பதை உணர்ந்தான், மேலும் மிகாயாவை வரவழைத்தான், அவர் தோல்வி மற்றும் மரணத்தை எச்சரித்தார். ஆனாலும், யோசபாத் ஆகாபுடன் சேர்ந்து போரில் இறந்தான் (1 இராஜாக்கள் 22:15-18).
யோசியா
யோசியா ஒரு நல்ல ராஜா, ஆனால் அவனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் தவறு செய்தான். எகிப்தின் ராஜாவாகிய நேகோ பாபிலோனியர்களுக்கு எதிராக கர்கேமிஸ் பட்டணத்தின் மேல் யுத்தம் பண்ண வந்தான், ஆனால் யூதா வழியாக செல்ல வேண்டும். யோசியா நேகோரை எதிர்த்தான். இருப்பினும், யோசியாவிற்கு எதிராக போராட வரவில்லை என்று நேகோ தெளிவுபடுத்தினான். மேலும் யோசியா ஊரிம் மற்றும் தும்மீமிடம் கலந்தாலோசிக்கவில்லை அல்லது ஒரு தீர்க்கதரிசியிடம் கேட்கவில்லை. இறுதியில் யோசியா படுகாயமடைந்து பின்னர் 39 வயதில் இறந்தான் (2 நாளாகமம் 35:25; 2 இராஜாக்கள் 23:25).
உசியா
அவன் பதினாறு வயதாக இருந்தபோது ஆட்சிக்கு வந்தான், கிமு 792 முதல் 740 வரை 52 ஆண்டுகள் ஆட்சி செய்தான் (2 நாளாகமம் 26). அவன் ஒரு வலிமையான மற்றும் நல்ல அரசராக இருந்தான், ஆனால் அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். இது ஆசாரியர்களால் எதிர்க்கப்பட்டது. தேவன் அவனைத் துண்டித்தார், அவன் ஒரு குஷ்டரோகியாக இறந்தான், தனது அரச பதவியை இழந்தான்.
நான் பெற்ற இரட்சிப்பை இறுதிவரை காத்துக் கொள்கிறேனா? (மத்தேயு 24:13)
Author: Rev. Dr. J .N. மனோகரன்