16:1 ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதடிக்கு ராமாவைக் கட்டினான்.
16:2 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:
16:3 எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
16:4 பெனாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.
16:5 இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
16:6 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
16:7 அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.
16:8 மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்களல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் புத்தியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
16:10 அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான்.