வரலாற்றில் மூன்று மிக நீதியுள்ள மனிதர்களில், நோவா மற்றும் யோபுவுடன் சேர்ந்து தானியேலும் பட்டியலிடப்பட்டார். "நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்" (எசேக்கியேல் 14:20) என எசேக்கியேல் எழுதியபோது தானியேல் உயிருடன் இருந்தார். பொதுவாக, உண்மையான புகழுக்கு மயங்காத ஜனங்களும் இருக்கிறார்கள். மறுபுறம், ஒரு சிலர் ஒன்றுமில்லாததை மிகைப்படுத்தி முகஸ்துதி செய்யும் ஜனங்களும் இருக்கிறார்கள். இன்னும் சில நீதிமான்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று தெரியாமல் முட்டாள்தனமாகத் துன்பப்படுகிறார்கள். பொல்லாதவர்கள் அவர்களை வெறுப்பின் பொருளாக ஆக்குகிறார்கள். ஒரு நபர் தேவனின் உண்மையான மனிதராக மதிக்கப்படுகிறார், பொருட்படுத்தப்படுகிறார், அங்கீகரிக்கப்படுகிறார் என்றால், அது ஒரு பெரிய சாதனையாக தான் இருக்கும். ஆம், தானியேல் அத்தகைய ஒருவரே.
தைரியம்:
மிரட்டும் வல்லரசு பேரரசரின் கீழ் அடிமையாக இருப்பது என்பது ஒரு பயங்கரமான அனுபவம். தானியேல் ஒரு புத்திசாலித்தனமான இளைஞனாகக் காணப்பட்டான், மேலும் அவன் ராஜ்யத்திற்குச் சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டான். அடிமையாக இருப்பதற்குப் பதிலாக நல்ல உயர்ந்த அந்தஸ்து தானியலுக்கு இருந்தது. அப்படி இருந்தபோதிலும், அவன் அந்த அமைப்புக்குள்ளாக கட்டுப்பட்டு இருக்கவில்லை அல்லது அவர்களின் கலாச்சாரத்தால் பாதிக்கப்படவும் இல்லை. பாபிலோனிய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப யூதர்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற முயன்றபோது, தானியேல் அடிபணியவில்லை. இதைக் குறித்து பிரதானிகளின் தலைவனிடம் முறையிட்டான், தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைத்தது, அது தானியேலின் தெய்வீக ஆசீர்வாதத்தை நிரூபிக்கிறது, அவனுக்கு விருப்பமான உணவைப் பெற்றான் (தானியேல் 1:8-16).
நம்பிக்கை:
தானியேலுக்கு ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது. நேபுகாத்நேச்சாரின் கோரிக்கைக்கு மந்திரவாதிகள் பதிலளிக்கத் தவறியபோது, அக்கோரிக்கையை தன்னால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் நேபுகாத்நேச்சாரிடம் அனுமதி பெற்றான். இந்த நம்பிக்கை எப்படியென்றால் தான் விசுவாசிக்கும் தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருந்ததின் அடிப்படையில் இருந்தது, அவர் இரகசியங்களையும் மர்மங்களையும் வெளிப்படுத்துபவர் என்ற நம்பிக்கை. ஜெபம் செய்யக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது, அவன் நம்பிக்கையுடன் தனது வழக்கமான இடத்திற்குச் சென்றான், ஜெபித்தான். அது பொதுமக்களுக்குத் தெரியும். அதற்கு பின்பு அதே நம்பிக்கையுடன் தான், அவன் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தான் (எபிரெயர் 11:33).
மக்கள் மீது அக்கறை:
தானியேல் தன் சக அடிமைகளின் நலனில் அக்கறை கொண்டவனாக இருந்தான். எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை மேற்கோள் காட்டி நாடுகடத்தப்பட்டவர்கள் திரும்புவதற்கு அவன் பரிந்துரைத்தான் (தானியேல் 9).
ராஜாக்களின் ஆலோசகர்:
தானியேல் இதுவரை வாழ்ந்த ஞானமானவர்களில் அவனும் ஒருவனாக கருதப்பட்டான். அவன் கனவுகளை விளக்கினான், மன்னர்களுக்கு அறிவுரை வழங்கினான் மற்றும் வரலாற்று துல்லியத்துடன் எதிர்காலத்தை முன்னறிவித்தான். தானியேல் குறைந்தது நான்கு சக்திவாய்ந்த பேரரசர்களின் கீழ் தலைமை நிர்வாகியாக பணியாற்றினான்; நேபுகாத்நேச்சார், பெல்ஷாத்சார், தரியு மற்றும் கோரேசு ஆவார்கள்.
நான் தானியேலைப் போல, நீதியுள்ள, தைரியமான, பரிசுத்தமான, உண்மையுள்ள சாட்சியா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்