தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் சேவைகள் என எல்லாம் தடுக்கப்படலாம். தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால், ஒரு கணவன் தனது மனைவியின் தொலைபேசி எண்களைத் தடை செய்தான். ஒப்புரவாக முடியாத இடத்திலோ அல்லது அவளின் நடத்தையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத இடத்திலோ அவன் வந்திருக்கிறான்.
ஜெபம் அடைக்கப்படல்:
எருசலேமை அவர்களின் நேசத்துக்குரிய ஆலயம் உட்பட நகரத்தை அழிக்க பாபிலோனியர்களை அனுப்புவதன் மூலம் யூதா தேசத்தை தேவன் நியாயந்தீர்த்தபோது, எரேமியா தீர்க்கதரிசி புலம்புகிறார். “நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்” (புலம்பல் 3:8). யூதாவுக்காக அவர் செய்த விண்ணப்பம் கவனிக்கப்படவில்லை. தேவன் எப்போதும் ஜெபங்களைக் கேட்டு தான் ஆக வேண்டிய என்ற கட்டாயம் இல்லை. ஜெபங்கள் தடுக்கப்படுவது குறித்து வேதாகமம் சில நுண்ணறிவுகளை வழங்குகிறது.
ஏழைகள் புறக்கணிக்கப்படல்:
தேவ ஜனங்கள் ஏழைகளின் அழுகையை புறக்கணிக்கும்போது, தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்க வேண்டியதில்லை (நீதிமொழிகள் 21:13). ஏழைகளைப் புறக்கணிப்பது என்றால் ஏழைகளை ஏளனம் செய்வது, இழிவுபடுத்துவது மற்றும் சபிப்பது ஆகியவை அடங்கும்.
சந்தேகப்படல்:
சந்தேகப்படும் மக்களின் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்க வேண்டியதில்லை (யாக்கோபு 1:5-7). “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபிரெயர் 11:6).
பெருமை:
பெருமையுள்ளவர்களை தேவன் எதிர்க்கிறார், எனவே அத்தகைய மக்களின் ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை (யாக்கோபு 4:6). தேவனின் உதவியை நாடுவதற்கு ஒருவரைப் பெருமை அனுமதிப்பதில்லை. விரக்தியில் தேவ உதவியை நாடலாம். பணிவு இல்லாமல், தேவன் அவர்கள் சார்பாக செயல்பட மாட்டார்.
கொடுமை:
“நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது” (ஏசாயா 1:15). சண்டை சச்சரவு மனப்பான்மையும், கொடுமையை ஆமோதிப்பதும், இரத்தம் சிந்த விரைந்த கால்களும் கர்த்தருக்கு அருவருப்பானவை (ஏசாயா 59:7).
துணையுடனான உறவு:
தங்கள் துணையை மதிக்காதவர்களின் ஜெபத்திற்கு இடையூறு ஏற்படும் (1 பேதுரு 3:7). ஜெபங்களுக்கு பதிலளிக்கப்படுவதற்கு, ஒரு மனதுடனான, அன்பான, உடன்படிக்கை உறவு அவசியம்.
சுயநல ஜெபங்கள்:
தவறான நோக்கங்களுடனும், சுயநல நோக்கங்களுடனும், பொல்லாத உள்நோக்கங்களுடனும் செய்யப்படும் ஜெபங்களுக்கு பதில் கிடைக்காது (யாக்கோபு 4:3).
அக்கிரம சிந்தை:
துன்மார்க்கத்தில் மகிழும் அல்லது இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டவர்களின் ஜெபம் கேட்கப்படாது (சங்கீதம் 66:18).
தேவ ஜனங்களை தவறாக நடத்துதல்:
தேவனின் உண்மையும் உத்தமுமான ஊழியர்களை தவறாக நடத்துபவர்கள், துன்புறுத்துபவர்கள் மற்றும் அவமானப்படுத்துபவர்களின் ஜெபங்கள் கேட்கப்படாது (மீகா 3:2-5).
தேவன் என் ஜெபங்களை அடைத்து விட கூடாதே, நான் இன்னும் என்னை சரிசெய்ய வேண்டுமா? ஆராய்ந்து பார்ப்போம்
Author: Rev. Dr. J .N. மனோகரன்