கர்த்தர் ஏன் இஸ்ரவேலைத் தேர்ந்தெடுத்தார், வேறு எந்த நாட்டையும் தேர்ந்தெடுக்கவில்லை என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
சிருஷ்டிப்பு:
தேவன் மனித வாழ்வுக்குத் தேவையான வானங்களையும் பூமியையும் படைத்தார், பின்னர் ஆதாமையும் ஏவாளையும் தனது சாயலில் உருவாக்கி ஏதேன் தோட்டத்தில் வைத்தார். தேவன் அவர்களை அனுதினமும் சந்தித்து அவர்களுடன் ஐக்கியம் கொண்டார் (ஆதியாகமம் 1).
வீழ்ச்சி:
ஆதாமும் ஏவாளும் ஒரு மரத்தின் கனியை மாத்திரம் உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டார். பாம்பின் வடிவில் இருந்த சாத்தான் ஆதாமையும் ஏவாளையும் மயக்கியது, அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அக்கனியைச் சாப்பிட்டார்கள். எனவே, அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் (ஆதியாகமம் 3).
வெகுஜன கலகம்:
வெள்ளத்திற்குப் பிறகு, மனிதகுலம் பூமியின் எல்லாப் பகுதிகளிலும் சிதறப்பட்டது, அப்படி புலம்பெயர்ந்தவர்கள் தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. மாறாக, உயரமான கோபுரத்துடன் கூடிய நகரத்தை உருவாக்கி, எதிர்கால வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க முயற்சித்தனர். தேவன் அவர்களின் மொழிகளைக் குழப்பி, மொழிகளால் உலகளாவிய இடம்பெயர்வு நிகழ்ந்தது (ஆதியாகமம் 11).
வெள்ளம்:
உலகில் பாவம் அதிகரித்தது, உலகம் முழுவதும் பொல்லாததால் நிறைந்தது, அவர்களின் எண்ணங்கள் கூட தொடர்ந்து தீயதாக காணப்பட்டது (ஆதியாகமம் 6:5). எல்லா மனித இனத்திலும் ஒரே ஒரு நபர் மட்டுமே நீதியுள்ளவர் அல்லது எல்லாரிலும் சிறந்தவராக இருந்தார் (ஆதியாகமம் 6:9).
ஆபிரகாம்:
மீண்டும், உலகம் பாவத்திலும் இருளிலும் மூழ்கியது. தேவன் ஆபிரகாமை அழைத்தார், அவர் விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் பேர்பெற்றவர் (ஆதியாகமம் 12). ஒருவேளை, தேவன் மற்ற நாடுகளிலோ அல்லது இடங்களிலோ இருந்து மற்றவர்களை அழைத்திருக்கலாம், மேலும் அவர்கள் அவருடைய அழைப்பிற்கு பதிலளிக்காமல் இருந்திருக்கலாம். ஆபிரகாமுக்கு ஒரு வாக்குறுதியும் உடன்படிக்கையும் கொடுக்கப்பட்டது. "கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள்" (ஆதியாகமம் 18:19) என கற்பிப்பான் என்று தேவன் எதிர்பார்த்தார்.
இஸ்ரவேல்:
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததியினர் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்தபோது தேவன் அவர்களை ஒரு தேசமாக வடிவமைத்தார். மோசே மூலம் தேவன் அவர்களை விடுவித்து, அவர்களுக்கு நியாயப்பிரமாணம், உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் ஆகியவற்றைக் கொடுத்ததால், அடிமைகள் ஒரு தேசமாக மாறினர். இவ்வாறு, மனிதகுலத்திற்கான இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இஸ்ரவேல் ஒரு பாக்கியம் பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாக மாறியது.
குயவன் மற்றும் களிமண்:
தேவன் ஒரு படைப்பாளர், நீதியுள்ள நீதிபதி மற்றும் இறையாண்மையுள்ள ஆட்சியாளர் தம் விருப்பத்தைச் செய்வதற்கும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் யாரையும் தேர்ந்தெடுக்க முடியும். ஆகையால் களிமண்ணாகிய மனிதர்கள் தேவனிடம் வாதிடவோ அல்லது கட்டளையிடவோ அல்லது அவரைப் பற்றி புறம் பேசவோ முடியாது (ரோமர் 9:21).
என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் தேவனுக்கு நன்றியுள்ள நபராக இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்