சமீபத்தில் ஒரு மிதமிஞ்சிய கிருபை பற்றி போதிக்கும் செழிப்பு போதகரின் வீடியோவைக் காண முடிந்தது. அதில் ஜனங்கள் காணிக்கைகளைக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சகோதரி வந்து 1000 ரூபாயை காணிக்கைப் பெட்டியில் போடுவதைத் கவனித்தவர்; "சகோதரி, நீங்கள் 1000 ரூபாய் கொடுத்தீர்கள். உங்களுக்கு 1000 கோடி ரூபாய் (பத்து பில்லியன்) திரும்பக் கிடைக்கும்" என்றார். இது என்ன தீர்க்கதரிசன அறிக்கையா? அல்லது வாக்குறுதியா? அல்லது திரும்பச் கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் பாலிசியா? அல்லது சீட்டுப் பணமா?
தியாகம்:
தாங்கள் எல்லாவற்றையும் (குடும்பம், வீடு, பரம்பரை சொத்து, வேலை, வணிகம்) விட்டுவிட்டு அவரைப் பின்பற்றியதால், தங்களின் தியாகத்திற்கு தேவன் எவ்வாறு வெகுமதி அளிப்பார் என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். அதற்கு ஆண்டவர் அவர்களுக்கு நூறு மடங்கு பலன் இம்மையிலும் நித்திய வாழ்விலும் கிடைக்கும் என்று பதிலளித்தார் (மாற்கு 10:28-31). அது ஒரு நூறு கோடி பணம் அல்ல.
கொடுத்தல்:
கர்த்தர் மக்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொடுத்து ஊக்குவித்தார், "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்" (லூக்கா 6:38). மகிழ்ச்சியுடன் கொடுப்பவர்களை தேவன் நேசிக்கிறார்.
ஏழை விதவையின் காணிக்கை:
எருசலேம் ஆலயத்தில் காணிக்கை செலுத்த வந்தவர்களை ஆண்டவர் கவனித்தார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், தன் வறுமையிலும் தானம் செய்தவள் என்று விதவையை ஆண்டவர் போற்றினார். அவர்களின் மிகுதியிலிருந்து பங்களித்த பணக்காரர்களை விட அவள் சிறந்தவளாக மதிக்கப்பட்டாள் (மாற்கு 12:43-44).
அறிவுரையும் இல்லை:
சீஷர்களின் குழுவின் பொருளாளரான யூதாஸிடம், அனைத்தையும் கொடுத்து விட்ட ஏழைப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கும்படி ஆண்டவர் கட்டளையிடவில்லை. ஆம், விதவையானவள் அவளுக்கு இருந்த எல்லாவற்றையும் கொடுத்தாள். அப்படியென்றால் அடுத்த உணவுக்கு அவள் என்ன செய்வாள்?
வாக்குறுதி இல்லை:
ஏழை விதவைக்கோ அல்லது பணக்காரருக்கோ எந்த செழிப்பிற்கான வாக்குறுதியையும் ஆண்டவர் வழங்கவில்லை. அவளுக்கு நூறு மடங்கு கிடைக்குமா என்ன? ஆனால் விதவைக்கான ஆண்டவரின் பாராட்டு பல தலைமுறை சீஷர்களுக்கும் உத்வேகம் அளித்துள்ளது அல்லவா.
பணத்தில் பணக்காரரா அல்லது விசுவாசத்தில் பணக்காரரா?
நிச்சயமாக, விதவை விசுவாசத்தில் ஐசுவரியமுள்ளவளாக இருந்தாள் (யாக்கோபு 2:5). பரிதாபகரமான செழிப்பு போதகர்கள் பெரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள், அவர்களுக்கு கொடுக்கும் அனைவரும் பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் என உறுதியளிக்கிறார்கள்.
நோக்கம்:
உண்மையான தேவ ஜனங்கள் தங்களுடைய அன்பு, நன்றியுணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றை காணிக்கையாக வெளிப்படுத்துகிறார்கள். பல மடங்காக திரும்ப கிடைக்கும் என எண்ணி கொடுப்பவர்கள் பேராசைக்கு ஆளாகிறார்கள்.
பச்சாதாபமும் பரிதாபமும்:
"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" (1 கொரிந்தியர் 15:19).
தேவன் மீதான என் அன்பு நான் கொடுப்பதில் ஊடுருவுகிறதா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்