குருநாதர் சொற்பொழிவு ஆற்றியபோது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை எழுப்பினார், அற்புதங்கள் செய்தார் என்று நம்பப்படுகிறது. அவர் பாரம்பரியமாக உடை அணியாமல் மற்றவர்களைப் போல் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-சர்ட் அணிவார். அந்த துயரம் நடந்த நாளில், அவர் தனது காரில் மெய்க்காப்பாளர்களுடன் இடத்தை விட்டு வெளியேறியதும், அவரது காலடிப்பட்ட இடங்களிலும், காரிலும் படிந்திருந்த தூசியைத் திரட்ட மக்கள் விரைந்தனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் அவர் வந்து குணப்படுத்துவார் என்று எதிர்பார்த்தனர், மற்றவர்கள் அவர் மீது நம்பிக்கை இழந்தனர். இருப்பினும், குரு வரவில்லை, அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை. தலைவர்கள் மேய்ப்பர்களைப் போல இருக்க வேண்டும் என்று பேதுரு அறிவுறுத்துகிறார் (1 பேதுரு 5:1-4).
கண்காணித்தல்:
ஆடுகளுக்கு அன்பைக் காட்டுதல், உணவளித்தல், வழிநடத்துதல், பாதுகாத்தல், சுத்தம் செய்தல் மற்றும் ஆறுதல் அளிப்பதன் மூலம் மேய்ப்பர்களாக தங்கள் ஆணையைப் பயன்படுத்துமாறு பேதுரு மூப்பர்களை அறிவுறுத்தினார் (யோவான் 21:15-17). இந்த வார்த்தைக்கு ஆளோட்டி என்றும் பொருள்படும், அதாவது கண்காணிப்பவர், மேலாளர் அல்லது மேற்பார்வையாளர் என்பதாகும் (அப்போஸ்தலர் 20:28; . இந்த பணி ஒரு வேலை என்று அல்ல, மாறாக ஒரு விருப்பமான சேவை. இந்த சேவை கடவுள் மீதும் கடவுளின் மக்கள் மீதும் உள்ள அன்பின் வெளிப்பாடாகும். அவர்கள் கூலிப்படையினர் அல்ல, ஆனால் அவருடைய ராஜ்யத்தில் படைவீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஆவல்:
மூப்பர்கள் நல்ல மேய்ப்பனின் இதயத்தைக் கொண்டிருக்க வேண்டும், உண்மையான மேய்ப்பன் ஆடுகளை வேறு எதுவும் அணுகாதபடி தன் ஜீவனைக்கூட பொருட்படுத்தாமல் பராமரிக்கிறார், பாதுகாக்கிறார் (யோவான் 10:11-14). இதன் நோக்கம் செழுமையாகவும், பிரபலமாகவும், வல்லமையாகவும் மாறுவது அல்ல. இது உலக ஆதாயத்துக்காகவோ அல்லது மகத்துவத்திற்காகவோ அல்ல என்று பேதுரு கூறுகிறார். பவுல் குறிப்பிடுவது போல, தேவனின் அன்பு அப்படி நெருக்கி ஏவுகிறது (2 கொரிந்தியர் 5:14).
உதாரணம்:
கர்த்தர் தம் சிம்மாசனத்திலிருந்து இறங்கி, தம்முடைய எல்லா மகிமையையும் ஒதுக்கிவிட்டு, மனிதரானார். அருட்பணி என்பது தன் ஸ்தானத்தில் இருந்து இறங்கி ஆட்டோடு ஆடாக அதாவது மக்களோடு மக்களாக அடையாளம் காட்ட வேண்டும். பெரிய பிரபு போல, ஆதிக்கம் செலுத்துவது, ஆணையிடுவது மற்றும் அதிகாரமிடுவது அல்ல; இது ஒரு சேவை (ஊழியம்).
ஒப்பளிக்கப்படல்:
மூப்பர்கள் மந்தையைக் கவனித்துக்கொள்ளும்படி ஒப்படைக்கப்பட்டது.
நிலையான கிரீடம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தலைமை, நல்ல மற்றும் மாபெரும் மேய்ப்பன். அவர் தோன்றும்போது, உண்மையுள்ள மேய்ப்பர்களுக்கு நீடித்த நிலையான கிரீடம் வழங்கப்படும்.
பேதுரு கூறுகிறபடி நான் தேவ பக்தியுள்ள மேய்ப்பனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்