மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், உலகெங்கிலும் மனித உரிமைகள் என்று அழைக்கப்படுவதற்கு எந்த மதிப்பும் இல்லை. பல நாடுகள் தங்கள் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்துவதில்லை. சிலருக்கு அதிக முக்கியத்துவமும் சிலரை முக்கியமற்ற நபர்களாகவும் கருதுவதுண்டு, அப்படிப்பட்ட நபர்கள் ஒடுக்கப்பட வேண்டும், ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், சித்திரவதை செய்யப்பட வேண்டும் மற்றும் அகற்றப்பட வேண்டும் எனச் சொல்லும் சில தத்துவங்கள் உள்ளன. யூதர்களை அழித்தொழிக்கும் படுகொலையை உலகம் கண்டது. மக்களை வகைப்படுத்தி, கீழ் மட்டத்தில் இருப்பவர்களை விலங்குகளாகக் கருதும் மதத் தத்துவங்கள் உள்ளன. பல கலாச்சாரங்களில் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. பல நாடுகள், புலம்பெயர்ந்தவர்களை தவறாக நடத்துகின்றன, அதிலும் குறிப்பாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம், மொழி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவ்வளவு தான். உலகம் நாகரீகமானது என கருதப்பட்டாலும் ரஷ்யா-உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் அதிகமாக இருந்தது.
மேக்னா சார்ட்டா:
17-வது மற்றும் 18-வது நூற்றாண்டுகளில், மக்னா சார்டா போன்ற 13-வது நூற்றாண்டு நிறுவனங்களும், இங்கிலாந்து பாராளுமன்றமும், மனிதரின் சமத்துவம், இயல்பான உரிமைகள், மக்களுடைய ஆட்சியுரிமை ஆகியவற்றைக் குறித்த அரசியல் கொள்கைகளுடன் சேர்ந்து அதிகப்படியான அர்த்தத்தைப் பெறலாயின. சில மக்னா சார்ட்டாவின் படி 1215 இல் மனித உரிமைகளுக்கு உத்வேகம் அளித்தது, இது "சட்டத்தின்படியான ஆட்சி" என்ற அடிப்படைக் கருத்தை அறிமுகப்படுத்தியது. அது நியாயமற்ற வழக்கு மற்றும் சிறையில் இருப்போருக்கும் பாதுகாப்பை வழங்கியது. இருப்பினும், பல நாடுகளில் அத்தகைய உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்காத சட்டங்கள் உள்ளன. எனவே சட்டத்தின் ஆட்சி செல்லாத காசு போலானது.
ஆதாமும் ஏவாளும்:
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். ஆதாமும் ஏவாளும் தேவனிடமிருந்து தங்களை மறைத்துக் கொண்டனர். தாங்கள் பாவம் செய்ததையும் கண்டிக்கப்பட போவதையும் அவர்கள் அறிந்திருந்தனர். இன்னும், தேவன் தெளிவுபடுத்தும்படி கேட்டார். இருவருக்கும் தனித்தனியாக தங்கள் வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது (ஆதியாகமம் 3:9-13). தேவனுக்கு கண்டிக்க முழு அதிகாரம் இருந்தது, ஆனாலும் அன்பான தேவன் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் (தங்களுக்காக தாங்களே வாதாடும்) உரிமையை மனிதர்களுக்குக் கொடுத்தார்.
அடைக்கலப்பட்டணம்:
தஞ்சம் அடைவதற்கு நகரங்களை வழங்கும்படி தேவன் மோசேக்கு கட்டளையிட்டார். ஒரு நபர் தற்செயலாக அதாவது வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்றால், அந்த நபர் அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடலாம், அங்கு அவர் நிரபராதி என்று நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் வரை அவருக்கு தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் உணவு வழங்கப்படும் (எண்ணாகமம் 35:9-15).
உலக பார்வை மற்றும் மனித உரிமைகள்:
மக்கள் பரிணாமத்தை நம்பும்போது, உரிமைகளை வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது? யதேச்சையாக வாழக்கூடியவர்கள் காடுகளில் கூட பிழைத்துக் கொள்வார்கள் என்று சொல்வதுண்டு. வலிமையானவன் பலவீனனுக்கு எப்படி உரிமை கொடுப்பான்? இது சாத்தியமற்றது. மனிதனுக்கு உரிமைகளை வழங்கும் தேவனைப் பற்றிய வேதாகம உலகக் கண்ணோட்டம் இல்லாமல், மனித உரிமைகள் இல்லை.
நீதியைச் செய்யும் நீதியுள்ள தேவனை நான் அறிந்து கொண்ட நபராக நேசிக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்