நெகேமியா புத்தகம் ஆவிக்குரிய வளர்ச்சி, ஜெபம், தலைமைத்துவம், அணிதிரட்டல் மற்றும் ஆராதனை என ஒரு சிறந்த ஆதார புத்தகமாகும். நெகேமியா ஒரு ஆசாரியன் அல்ல, ஆனால் ராஜாவுக்கு பானபாத்திரக்காரராக அல்லது தனிப்பட்ட சமையல்காரராக சேவை செய்து வந்தான். அவனது அற்புதமான வாழ்க்கை மற்றும் சுமார் 150 ஆண்டுகளாக இடிந்து கிடந்த எருசலேமைச் சுற்றி 52 நாட்களில் சுவர்களைக் கட்டியது, அதுவும் ஒரு விரோதமான சூழலில் இவை நடந்தது ஒரு சாதனையே (நெகேமியா 6:15).
ஜெபம்:
நெகேமியா தனது உறவினரான ஆனானியின் மூலமாக எருசலேமின் அவலநிலையைக் கேட்டபோது, அவன் சோகமாகவும், கவலையாகவும், பாரமாகவும் இருந்தான். அந்த தகவல் ஒரு பாரமாக மாறியது, இந்த பாரம் நான்கு மாதங்களாக ஜெபங்களானது மற்றும் கிருபையுள்ள தேவன் அவனது ஜெபங்களுக்கு பதிலளித்தார் (நெகேமியா 1:4-6). நெகேமியா, ராஜா முன்னிலையிலும், பல்வேறு இடங்களில் இருந்து ஜெபம் செய்தான்.
வழங்கல் மற்றும் நோக்கம்:
தேவன் தனது நோக்கங்களை நிறைவேற்ற அரசியல் ஆட்சியாளர்கள் மூலம் வேலை செய்கிறார் (நெகேமியா 2:8). மனிதர்களின் எல்லா விவகாரங்கள் மீதும் இறையாண்மையுள்ள தேவனுக்கு முழு அதிகாரம் உள்ளது. "ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்" (நீதிமொழிகள் 21:1)
பாதுகாப்பு:
தேவன் தம் மக்களைப் பாதுகாக்கிறார், அவர்கள் பயப்படத் தேவையில்லை (நெகேமியா 4:14). ஆனால் தேவன் பாவத்துடன் ஒப்புரவு செய்து கொள்வதில்லை. அவருடைய மக்கள் பாவம் செய்யும்போது; அவர்கள் மனந்திரும்புவதற்கு எச்சரிக்கப்படுகிறார்கள், கண்டிக்கப்படுகிறார்கள், தண்டிக்கப்படுகிறார்கள், சிட்சிக்கப்படுகிறார்கள். கலகம் தொடர்ந்தால், தேவனும் நியாயந்தீர்ப்பார்.
வாக்குத்தத்தங்கள்:
மக்கள் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் தம் வாக்குத்ததீதை நிறைவேற்ற தேவன் இரக்கமும் உண்மையும் கொண்டவர் (நெகேமியா 9:32-35). தேவ திட்டங்களும், நோக்கங்களும், வாக்குத்தத்தங்களும் அவருடைய சித்தத்தின் படி (மனவாஞ்சையின்படி) நிறைவேற்றப்படும். மனித பாவங்கள், கலகம் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை அவரது திட்டத்தையோ அல்லது விசுவாசத்தையோ அழிக்க முடியாது.
துதி, ஆராதனை, கொடுத்தல்:
தேவ ஜனங்கள் தேவனை துதிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் மற்றும் அவருடைய மகிமைக்காக விருப்பத்துடன் வளங்களை வழங்குவதற்கும் அழைக்கப்படுகிறார்கள் (நெகேமியா 10:32-39). கர்த்தர் மீதான தனது பேரார்வத்தின் மூலம் நெகேமியா தேவனைத் துதித்தார் மற்றும் தனது உணர்வை வெளிப்படுத்தினார், மேலும் தான் அரண்மனையில் சேவை செய்து கொண்டிருந்த பதவியைத் தியாகம் செய்தார், அனைத்தையும் தேவனுக்காக அர்ப்பணித்தார்.
உலக காரியங்களுக்கு தடை:
தேவ ஜனங்கள் தார்மீக பலவீனத்திற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் உலகப்போக்குகள் அல்லது பாரம்பரியங்களைப் பின்பற்றக்கூடாது (நெகேமியா 13). தேவ ஜனங்கள் பரிசுத்த வாழ்க்கை நடத்த அழைக்கப்பட்டுள்ளனர். அதற்காக கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்கள் சமுதாயத்தில் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். உலகத்தால் ஈர்க்கப்படுவதற்கு பதிலாக, அவர்கள் உலகை மாற்றியமைக்க வேண்டும்.
நான் நெகேமியாவால் ஈர்க்கப்படுகிறேனா? சவாலை எதிர்கொள்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்