கடவுளின் நேரடி படைப்புதான் ஆதாம். கடவுளின் மனதில் இருந்த உருவத்தை மண்ணில் வடித்து உருவாக்கப்பட்டு அவருடைய உயிரையும் உணர்வையும் ஊதியதால் மனிதனான். அம்மனிதன் பூமியின் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் பெயர் வைத்தான். அவனுடைய தனிமையின் கொடுமையைக் கண்ட கடவுள் அது நல்லதல்ல என்று உணர்ந்து அவனுக்கு ஏற்ற துணையை அவனுடைய மாம்சத்திலிருந்து உருவாக்கி அதற்கும் அவருடைய உயிரையும் உணர்வையும் கொடுத்து உண்டாக்கினார். ஆதாம் எந்த மனித துணையின்றி பிறந்தான். இயேசு மாம்சத்திலிருந்து ஆவியால் கர்ப்பந்தரிக்கப்பட்டுப் பிறந்தார். ஆதாம் பாவம் செய்து அதனை மறைத்ததால் “பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய் நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.” (ஆதியாகமம் 3:17-19).
சபிக்கப்பட்ட பூமியை புண்ணிய பூமியாக்கும்படி கடவுளே மனிதனாகப் பிறந்தார்: அவரை பவுல் இரண்டாம் ஆதாம் என்று ஒப்புமைப்படுத்துகிறார்: முந்திய ஆதாமால் மரணத்திற்கேதுவான மீறுதலுக்கு ஒப்பான பாவம் செய்தான் ஆதனால் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டு அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவதுவுமல்லாமல், ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ஒருவன் பாவஞ்செய்து உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவரது கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.” (ரோமர் 5:10:21).
மேலும் பவுல் “மனுஷனால் மரணம் உண்டானதால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள்” என்கிறார் (1 கொரிந்தியர் 15:21-22). நாம் ஒவ்வொருவரும் ஆதாமின் பாவத்தின் சாபத்தை பெற்றவர்களாகவே பிறக்கிறோம், வளர்கிறோம், வாழ்கிறோம் மற்றும் மரிக்கிறோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசுவின் பிறப்பால் நாம் சாபம் நீங்கப்பெற்ற வாழ்வில் பரிசுத்த ஆவியானவரால் அவர் பிறந்ததுபோலவே நாமும் மீண்டும் மாமிச பிறப்பிலிருந்து மரித்து ஆவியில் பிறந்து, ஆவியில் வளர்ந்து, ஆவியின் கனியுடன் இவ்வுலகில் அவருக்கு சாட்சியாக ஆவியின் கனியுடன் வாழும் வாழ்வை நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசு தம் ஜனங்களின் (யூதர்கள் உட்பட அனைத்து மனிதர்களின்) பாவங்களை நீக்கி இரட்சிப்பார் என்றும் (மத்தேயு 1:21), ஆவியாக மற்றும் வார்த்தைகயாக இருந்தால் மட்டும் மனிதர்களிடம் வாழ்கிறவராக இல்லாமல் அவர் மனித மாம்சத்தில் பிறந்தாலும் அவர் மனிதர்கள் மத்தியிலும் மனிதர்கள் உள்ளேயும் உயிராக உடலாக என்றும் வாழ்கிற இம்மாணுவேல் என்பதை உலகத்திற்கு உறுதிசெய்கிறார் (மத்தேயு 1:23).
ஆதாமின் குணங்கள் நம் வாழ்வில் முன்னோர்களின் இரத்தத்தின் வழியே வந்தது போலவே இயேசுவின் இரத்தத்தால் நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு புதிய மனிதர்களாக அவருக்குள் பிறக்கிறோம் (1 யோவான் 1:7). மேலும் இயேசு “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.” (யோவான் 6:53-57)
ஆதாமின் ஆவிக்குரிய மரணத்தால் மனிதன் ஆவிக்குரிய மரணத்திலேயே பிறக்கிறான் (சங்கீதம் 51:5). ஆவிக்குரிய மரணத்தை ஆவியின் பிறப்பால் வென்று ஆவிக்குரிய பிறப்பை அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்து அவருடைய பிள்ளைகள் என்னும் அதிகாரத்தைக் கொடுக்கிறார் (யோவான் 1:12, 3:16). இயேசுவின் மாமிசப் பிறப்பை மறுதலிக்கிறவர்கள் கடவுளால் உண்டானவர்கள் அல்ல, கடவுளால் உண்டான ஆதாம் பிசாசால் வஞ்சிக்கப்பட்டு அவனுடைய தன்மைகளால் நிறைந்து இந்த உலகை பாவத்தால் நிறைத்தது போலவே கடவுளால் மற்றும் கடவுளாகவே மனிதனாகப் பிறந்த கடவுள் அவருடைய தன்மைகளால் நம்மை நிறைத்து பாவத்தையம் அதன் சாபத்தையும் நம்மைவிட்டு நீக்கி நமக்கு சமாதானம் தருகிறார். அதனால்தான் அவருக்கு சமாதான பிரபு என்றும் சமாதானம் பண்ணுகிறவர்கள் என்றும் அவருடைய பிறப்பில் தேவதூதர்கள் பாடினார்கள் (லூக்கா 2:14). பாவத்தின் சாபத்தால் சமாதானம் மற்றும் சந்தோஷத்தை இழந்து தவிக்கிற நமக்கு இயேசுவின் பிறப்பு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு பெத்தலகேமில் பிறந்ததால் மாத்திரம் அல்ல இன்றும் நம் உள்ளத்தில் பிறந்தால் நம் வாழ்வில் சாபங்கள் நீங்கள் சமாதானமும் சந்தோஷமும் பிறக்கும். ஆகவே சாபம் நீங்கி சமாதானம் மற்றும் சந்தோஷம் நம் வாழ்வில் பிறந்த மனநிறைவுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
Author. Rev. Dr. C. Rajasekaran