கடவுள் மனிதனாகப் பிறக்கப்போகிறார் என்ற செய்தியை மரியாளும் எலிசபெத்தும் கேட்டபோது அவர்களுக்குள் மிகுந்த மகிழ்ச்சி உண்டாது. இறைமகனை வயிற்றில் சுமந்திருந்த மரியாள் அவருடைய வருகைக்கான வழியை ஆயத்தம் செய்ய வரப்போகிற யோவான் ஸ்நானகனை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த எலிசபெத்தை வாழ்த்தி பாடியதை கேட்ட யோவான் வயிற்றிலிருந்தபடியே துள்ளிக்குதித்தான் (லூக்கா 1:41). இயேசு பிறந்த செய்தியை தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தபோது “அந்தசஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” (லூக்கா 2:13-14). கிறிஸ்மஸ் காலங்களில் கேரல் ரவுன்டஸ் போவதற்கு அடிப்படைக் காரணம் இவைகளே.
அதன் பின்பு கேரல் ரவுன்டஸ் ஏறக்குறைய 3ம் நூற்றாண்டில்; ரோமாவிலும், 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளில் வடக்கு ஐரோப்பியாவிலும், 13ம் நூற்றாண்டில் இத்தாலியிலும், கேரல்ஸ் ஆரம்பமானது. 1426ல் முதன் முதலாக ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் பாடல்கள் எழுதப்பட்டு வீடுவீடாக சென்று பாடப்பட்டது. 1582ல் இன்றும் பாடப்படுகிற கிறிஸ்மஸ் பாடல்கள் லத்தீன் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இவைகள் சீர்த்திருத்த சபைகளாலும் பின்பற்றப்பட்டு 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் மிகவும் பிரபல்யமானது. இசை, பாடல்கள் மற்றும் நடனங்கள் சமயம், பண்டிகைகள் மற்றும் கலாச்சாரங்களில் மிகவும் முக்கியமான இடங்களைப் பிடித்திருக்கிறது. உணர்வுகளை வார்த்தைகளாக இசை வடிவில் உணர்ச்சி பொங்க வெளிப்படுத்துவதில் பாடல்கள் பெரும் பங்கைவகிக்கிறது. கிறிஸ்மஸ் காலம் மகிழ்ச்சியின் காலம் என்பதால் மனிதனாகப் பிறந்ததை பிறர்க்கு வெளிப்படுத்தும் செய்தியாகவும் தாங்களும் மகிழ்வதாகவும் கடவுளைப் புகழ்ந்துபாடி கொண்டாடுவது சிறப்பான ஒன்றாகும்.
கிறிஸ்மஸ் காலம் என்றால் வீடுகளில் ஸ்டார்லைட் கட்டி அழகுப்படுத்தி அலங்காரப்படுத்துவது அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றதாயிருக்கிறது. டிசம்பர் மாதம், முதல் நாளிலிருந்து 24ம் தேதிவரை கிறிஸ்மஸ் பாடல் பவனி நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகவும் பிரபல்யமான கேரல் ரவுன்ட்ஸ் எல்லாதரப்பு கிறிஸ்தவர்களாலும் வரவேற்கப்பட்டது. ஆனால் மிகக்குறைந்த காலத்திலேயே நவீன மற்றும் அதிநவீன காலத்தில் அதன் மேல் மக்களுக்கு வெறுப்பும் ஏற்பட்டுப்போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. கிறிஸ்மஸ் கேரல் மூலம் அநேக நன்மைகள் ஏற்பட்டாலும் பல்வேறு பாதங்களும் நடைமுறை சிக்கல்களும் ஏற்பட்டதால் அதன் மேல் ஒரு தரப்பினருக்கு வெறுப்பு ஏற்படவும் காரணமானது.
கேரல் ரவுன்ட்ஸ் சாதகங்கள்: வீடுகளை சந்திப்பதன் மூலம் உறவுகள் வலுவடைகிறது, வாழ்த்துக்கள் பரிமாற்றப்படுகிறது, மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தவும், உறவுகளை சந்தித்து அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்து ஜெபிப்பதற்கு பயனுள்ளதாயிருக்கிறது. கொண்டாடத்தின் அடையாளமாக இவை இருக்கிறது. சபை மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் சார்பாக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த பவனி சாதகமாக இருக்கிறது. இதனால் ஈட்டப்பெறுகிற வருமானங்கள் கிறிஸ்தவ ஊழியர்களின் குடும்பங்களுக்கு பகிரப்பட்டு அவர்களும் பண்டிகையை சந்தோஷமாக, புத்தாடைகளுடனும், நல்ல பதார்த்தங்களுடனும் கொண்டாட உதவியாக இருக்கிறது. மற்றும் ஏழை கிறிஸ்தவர்களும் பயன்பெறும்வகையில் புத்தாடைகள் வழங்கப்பட்டு சுவை நிறைந்த உணவு கொடுத்து அவர்களை மகிழ்விக்கவும், ஏழை எளியவர்களுக்கு உடைகள், உணவு கொடுத்து கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவிக்க இந்த வருமானம் பயன்படுகிறது. சில சபைகளில் அல்லது சில கிறிஸ்தவ நிறுவனங்களில் இந்த காலத்தை பயன்படுத்தி இல்ல சந்திப்புகள் ஏற்படவும் குடும்பங்களைப்பற்றி அறிந்துகொள்ளவும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவும் பயனுள்ளதாயிருக்கிறது. அத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப்பற்றி புதிய பாடல்கள் எழுதவும் கிறிஸ்து பிறப்பைப்பற்றிய புதிய சிந்தைகள் வெளிவரவும் கிறிஸ்மஸ் கேரல் பயன்படுகிறது.
கேரல் ரவுன்ட்ஸ் பாதகங்கள்: கேரல் ரவுன்ட்ஸ் பல்வேறு பாதகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது அதனால்தான் இன்று அநேக கிறிஸ்தவர்கள் குறிப்பாக பட்டணங்களில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். பணம் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள் எங்கள் வீட்டிற்கு கண்ட நேரத்தில் வராதீர்கள்: இருதய பிரச்சனை, சர்க்கரை வியாதி, அழுத்தம் போன்ற பல்வேறு வியாதிகளைக் கொண்ட வயோதிபர்கள், குழந்தைகள், வீட்டில் இருப்பதால் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. சொன்ன நேரத்திற்கு வருவதில்லை, சொல்லப்படுகிற எண்ணிக்கைக்கு குறைவாக வந்து அவர்களுக்காக செய்து வைத்த பண்டங்கள் வீணாவது, பல இடங்களில் உணவு பண்டங்கள் கொடுக்கப்படுவதால் பல்வேறு வீடுகளில் செய்துவைப்பது வீணாகிறது, மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நள்ளிரவில் இவர்களது பாடல் சப்தம் அவர்களின் தூக்கத்தை பாதிக்கிறது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளிலும், நெருக்கமாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் மற்றவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. மேலும் கேரல் ரவுன்ட்ஸ் செல்கிறவர்கள் அடுத்த நாள் பணிக்கோ பள்ளிக்கோ செல்லமுடியாமல் பணியும் படிப்பும் பாதிப்படைவதுடன் வருமானமும் இழக்கநேர்கிறது. வருமானத்தை மையமாகக்கொண்டு கேரல் ரவுன்ட்ஸ் நோக்கம் மாறிவிட்டதால் அநேகர் அதை வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பணம் ஈட்டுவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்படுவதால் அறம் சார்ந்த மற்றும் ஒழுக்கம் சார்ந்த காரியங்கள் பின்தள்ளப்படுகிறது. மெய்யான வாழ்த்துதல் மற்றும் ஜெபம் வலுவிழந்து பணம் மைய்யப்படுத்தப்படுவதை ஜனங்கள் கண்டு கோபம் அடைகிறார்கள்.
ஓட்டுமொத்தத்தில் கேரல் ரவுன்ட்ஸ் தவறு என்று சொல்லிவிடமுடியாது. அதன் நோக்கத்தை அறிந்து அதனை அதன் ஒழுக்கத்தோடு செய்தால் அதன் பயனை நம்மால் அடையமுடியும். கிறிஸ்துவின் பிறப்பை அறிந்திராத மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் விதமாக அந்நாட்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மைய்யமாகக்கொண்டு அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் நற்செய்தியை வீடுவீடாக சென்று சொல்லி இனிப்புகள் வழங்கி நமது நற்செய்தியை நற்பணி மூலம் செய்யலாம். இவ்வாறாக நான் கடந்த 24 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது குறிப்பிட்ட தொழில் சார்ந்த மக்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு கிறிஸ்மஸ் நற்செய்தியை அறிவித்துவருகிறோம். கிறிஸ்மஸ் பாடல் பவனி கிறிஸ்துவின் பிறப்பை அறிவிப்பதற்காகவே அல்லாமல் அதனால் நமது சபைகளையோ அல்லது நிறுவனங்களையோ பிரபலபடுத்துவதற்காகவோ அல்லது பொருளாதாரத்தை ஈட்டவோ பயன்படுத்தும்போது அதன் நோக்கம் மாறிப்போகிறது. அதனால் கேரல் ரவுன்ட்ஸ் அதன் பொருளை இழந்து மக்களிடையே அதன் மதிப்பை இழந்துபோகிறது. கேரல் ரவுன்ட்ஸ் பல்வேறு வகைகளில் நன்மை பயக்கக்கூடியதாயிருக்கிறதாதலால் அதனை சரியாகவும் முறையாகவும் செய்ய நாம் முற்படவேண்டும். அதற்கான ஒழுங்குகளை நாம் தீட்டவேண்டும். அதன் நோக்கங்களைப்பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தவேண்டும். நோக்கம் மாறிப்போகும் போதும் முறைகேடுகள் மற்றும் ஒழுக்கக்கேடுகள் ஏற்படும்போதும் பொருளாதாரத்தை மையப்படுத்தி அதனை சமரம் செய்யக்கூடாது. மாறாக அதனை சீர்செய்ய முற்பட்டால் கேரல் ரவுன்ட்ஸ் எப்போதும் எல்லோராலும் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
Author. Rev. Dr. C. Rajasekaran