கிறிஸ்மஸ்: தியாகத் திருநாள் (பிலிப்பியர் 2:6-8)
கடவுளின் தியாகம் மனிதர்களுக்கு திருநாள் - அனைவருக்கும் சந்தோஷம். கடவுள் இத்தியாகத்தை செய்யவேண்டும் என்று மனிதனை ஈன்றெடுப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது எபே.1:4. கடவுள் தியாகம் செய்வார் என்று தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டது – ஏசாயா 53:2-12. கடவுள் தனது தீர்மானத்தை தீர்க்கதரிசிகளிடம் அறிவித்தார்: காலம் கணிந்தபோது அதை நிறைவேற்றினார் – கலா.4:5. ஒருவரது மீறுதல் அனைவரின் மரணம்: ஒருவரது தியாக மரணம் அனைவரது உயிர்ப்பு – ரோ.5:15. தியாகம் தாய் மற்றும் தகப்பனுக்கு அடையாளமாக சொல்லப்பட்டது, இன்று கடவுளே தியாகத்திற்கு மூலக்காரணர் என்பதை இயேசு எல்லா உறவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுவின் தியாகம் தனித்தன்மை வாய்ந்தது: இதுவரை இந்த தியாகத்தை யாரும் செய்யவில்லை, இத்தியாகத்திற்கான விளைவுக்கு ஒத்த விளைவு இதுவரை இருந்ததில்லை. இனி ஒருவரும் ஒருபோதும் இத்தியாகத்தை செய்யத் தேவை இல்லாதபடி தியாகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறார் இயேசு. இயேசு எவைகளைத் தியாகம் செய்தார்?
1. ஸ்தலத்தை: பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர் யோவா-3:13. பரிசுத்த தூதர்கள் மத்தியில் பரிசுத்த ஸ்தலமாகிய பரலோகத்தை விட்டு பாவம் நிறைந்த பூலோகத்திற்கு வந்தது அவருடைய தியாகம். இன்றைக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பெருஞ்செல்வந்தர்கள் ஏழைகளின் இடங்களுக்கு சென்று வருவதைப் போன்றல்ல, இயேசு அவருடைய ஸ்தலத்திற்கு திரும்ப நம்மை அழைத்துச்செல்ல அவருடைய ஸ்தலத்தை தியாகம் செய்தார்: யோவான் 14:2-3 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
2. ஸ்தானத்தை: இறைவனுக்கு சமமாக இருந்தவர் – ஆதியிலே வார்த்தையாக, தேவனோடு, தேவனாக இருந்தவர் யோவான் 1:1-2. படைத்தவராக இருந்தவர் படைப்பாக மாறினார் – யோ.1:3 – 3:17. பிலிப்பியர் 2: 6-8 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தெய்வம் என்கிற மேலான ஸ்தானத்தை இழந்து மனிதன் என்னும் கீழான ஸ்தானத்தை ஏற்றார். அதிகார ஸ்தானத்தை இழந்து அடிமை மற்றும் கீழ்படியும் ஸ்தானத்தை ஏற்றார். இன்று ஸ்தானத்திற்காகவே போராட்டம் - ஆனால் இயேசு அவருடைய ஸ்தானத்தை இழந்தார் – ஆனாலும் இழந்த ஸ்தானத்திற்கும் மேலான ஸ்தானத்தைப் பெற்றார் பிலி.2:9-10.
3. ஸ்திரத்தை: சர்வவல்லமையுள்ள தேவன் அவருடைய ஆதிக்க அதிகாரத்தை இழந்தார் – அடிமையானார். அனைத்து சம்பத்துகளுக்கும் சொந்தக்காரர் நமக்காக தரித்திரரானார்: 2கொரி-8:9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. பரிசுத்தம் என்னும் அவருடைய ஸ்தரத்தை இழந்து பாவமானர் - ரோம-8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
4. ஸ்தோத்திரத்தை இழந்து சாபத்தை ஏற்றார்: துதிகளுக்கு பாத்திரரான இயேசு சாபத்தை ஏற்றார்: கலா-3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். மனித பாவங்களை ஏற்றதால் சாபமான மரணத்தை ஏற்றார்: இயேசு சபிக்கப்பட்டார் – சிலுவையில் அறையுங்கள், அதன் பாவம் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் சாரட்டும் என்றார்கள் - மத்தேயு 27:22-25.
Author. Rev. Dr. C. Rajasekaran