அவருக்காக ஒரு வாழ்வு

அவருக்காக ஒரு வாழ்வு

பொன் வ கலைதாசன்

தன் இனத்தின் நீட்சியை உறுதிப்படுத்துவதே இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரினங்களினதும் தலையாய கடமையாகும். ஐந்தறிவுவரை உள்ள உயிரினங்கள் தங்கள் சந்ததியை உருவாக்கிவிட்டு மடிந்துவிடுவதுபோல ஆறறிவுபடைத்த மனிதன் தன் உடல்வழி சந்ததியை (Philosophical Descendants) மட்டும் விட்டுவிட்டுப் போகமுடியாது. அவன் தன் அறிவுவழி சந்ததியையும் (Philosophical Descendants) உருவாக்கி, தான் பெற்ற அறிவுக்கு அர்த்தம் சேர்க்கவேண்டும்! 

விசுவாசிகளைப் பொறுத்தவரை இப்பொறுப்பு இன்னும் அதிகம். நாம் நம் ஆன்மீக சந்ததியை (Spiritual Descendants) உருவாக்க வேண்டியவர்களாவோம். 
நாம் இந்த உலகில் வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் இந்தப் புதிய ஆண்டில் அடியெடுத்துவைக்க அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் இதுவே நோக்கமாகும்! 

இவ்வாறான ஓர் ஆவிக்குரிய சந்ததியை உருவாக்க நாம் முன்மாதிரியுள்ள ஒரு வாழ்வை வாழ்ந்துகாட்டவேண்டும். நாம் வாழவேண்டிய முன்மாதிரி வாழ்வின் மூன்று கூறுகளை இக்கட்டுரையின் வாயிலாக லூக்கா 13:6 - 9 வரையுள்ள வசனங்களிலிருந்து காண்போம்.

1) இனிய கனிதரும் வாழ்வு.
இவ்வசனங்களில், கனிதருதலாகிய தன் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றாமல் வெறுமனே அந்த இடத்தை அடைத்தவாறு நின்றுகொண்டிருந்த ஓர் அத்தி மரத்தைப்பற்றி வாசிக்கிறோம். அது நிலத்தைக் கெடுக்கும் மரம் என்ற அவப்பெயரையும் சுமந்துகொண்டிருந்தது. இந்த வேதப்பகுதியில் மனந்திரும்புதலாகிய கனியைத் தர எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரவேல்தான் அத்திமரமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டுத் திருச்சபையினராகிய நம்மைப் பொறுத்தவரை புதிய மனிதர்களை கிறித்துவிடம் கொண்டுவருவதே கனிதருதலாகும். நம் நேசர் வருகிறார் அவருக்குக் கொடுக்க நம்மிடம் கனிகள் உண்டா? "என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக." (உன். 4:16)

2) இதய உண்மையுள்ள வாழ்வு
அந்த அத்திமரம் திராட்சைத் தோட்டத்தில் நடப்பட்டிருந்தது. தோட்டம் என்பது மிகுந்த பராமரிப்பும் பாதுகாப்பும் உள்ள இடம். அந்த இடத்தில் நடப்பட்டும் கனிதராத மரத்தை என்னவென்று சொல்வது? அது தன் உண்மையில் தவறிவிட்டது என்றுதான் சொல்லமுடியும்! இந்த உண்மையற்ற மரத்தை வெட்டி அகற்றிவிடுவதுதானே நீதி? ஆனால், அவர் இன்னும் ஓர் ஆண்டு காத்திருக்க முடிவுசெய்கிறார். இந்த மரத்திற்கு இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். அது கனிதருவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார். "கொத்தி, எருப்போடுதல்" போல நம்மைச் செதுக்கி வடிவமைக்க நல்ல திருச்சபையையும் ஆவிக்குரிய வழிநடத்துநர்களையும் தருகிறார்.

இவ்வேதப்பகுதியில் வரும் தோட்டக்காரர் நம் கர்த்தராகிய இயேசு கிறித்துவுக்கு அடையாளமாக உள்ளதையும் இச்சம்பவத்தில் வரும் "மூன்று ஆண்டுகள்" நம் கர்த்தர் இந்த பூமியில் செய்த ஊழியத்தையும் குறிப்பதாக இறையியலாளர்கள் கூறுகின்றனர். அன்று அந்த மரம் வெட்டப்படாமல் காக்க பரிந்துபேசியவர் அந்த தோட்டக்காரரே! இன்றும் நம் கர்த்தர் நமக்கான பிரதான ஆசாரியராக பிதாவினிடம் பரிந்து பேசுகிற ஊழியத்தைச் செய்துவருகிறார். இத்தனையையும் கொடுத்துள்ள அவருக்காக ஓர் உண்மையுள்ள வாழ்வை வாழ நாம் வலியுறுத்தப்படுகிறோம்.

3) இறையச்சம் நிறைந்த வாழ்வு.
எங்கோ கிடந்த மரத்தைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வைத்து பொறுமையுடன் காத்திருந்தும், பலன்தராத அந்த அத்தி மரத்திற்கு இன்னுமொரு வாய்ப்பையும் வழங்கி அது பலன்தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்தபின்பு அதனிடம் கனிதேடி வரும்போது கனியற்ற நிலையிலேயே அது நிலத்தைக் கெடுத்துக்கொண்டு நிற்குமானால் அதை என்னதான் செய்வது?

அந்த மரத்திற்கு என்ன முடிவு ஏற்பட்டது என்பது அங்கே சொல்லப்படவில்லை. மேலும், இதுவோர் உண்மை நிகழ்வும் அன்று, ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே! ஆனால், அந்த எடுத்துக்காட்டு நமக்குச் சொல்லும் பாடம் என்ன? நாம் கனிதராவிட்டால், அதற்கான விளைவை நாம் சந்தித்தே ஆகவேண்டும். நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பை நாம் இழக்கமாட்டோம். ஆனால், கிறித்துவின் நியாயாசனத்திற்கு முன்பு நிற்கும்போது எந்தப் பரிசையும் பெறமுடியாமல் வெட்கித் தலைகுனிவோம்.
எப்படியாவது பரலோகத்தில் போய் விழுந்துவிடவேண்டும் என்பதா நம் இலக்கு? இல்லை! தேவன் நமக்காக ஏற்படுத்திவைத்திருப்பனவற்றை (1 கொரி. 2 : 9) அனுபவிப்பதல்லவா நம் ஆவல்?

தேவகரத்திலிருந்து வெகுமதி பெறும் தகுதியை இழந்துவிடாமலிருக்க இவ்வுலகில் மிகுந்த இறையச்சத்துடன் வாழவேண்டும்.

இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை
இறுதியாக, அந்த மரத்திற்கு ஓராண்டுகால ஆயுள் உறுதியளிக்கப்பட்டது. நமக்கோ அவ்வாறான உறுதிமொழி ஏதும் கொடுக்கப்படவில்லை. எப்பொழுது நிகழுமென்றே தெரியாத, அவரது வருகையையோ அல்லது நம்முடைய மரணத்தையோ, ஏதோ ஒன்றை நாம் வெகுவிரைவில் சந்திக்கத்தான் போகிறோம். அதற்குப்பின் அவருக்காக வாழமுடியாது.

எனவே, இப்பொழுதே அவருக்காக வாழ முற்படுவோம்!▪️

Author. PON VA KALAIDASANTopics: Pon Va. Kalaidasan Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download