10:1 கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,
10:2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
10:3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக் கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.
10:4 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,
10:5 அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
10:6 ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
10:7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
10:8 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், Ψியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
10:10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
10:11 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.
10:12 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும், தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.
10:13 ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள்.