அதிகாரம்- 7
‘1,44,000 யூதர்கள்(இஸ்ரவேலர்) முத்திரையிடப்படுதல்
‘Sealing of 1,44,000 Jews (Israelites)’
1,44,000 இஸ்ரவேலர் முத்திரையிடப்படுதலும் உபத்திரவகால இரத்தசாட்சிகள் மீட்பும்
‘இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் 1,44,000 பேர்’ (வச 4)
வச: 1- 8 - இந்த உபத்திரவ காலத்தில் 1,44,000 இஸ்ரவேலர் அவர்களது நெற்றியில் முத்திரையிடப்படுவார்கள். ஓவ்வொரு கோத்திரத்திலும் 12,000 பேராக இருப்பார்கள். கடைசி நாட்களில் தங்கள் தேவனை உத்தமமாய் தேடி, மேசியா கிறிஸ்து இயேவை ஏற்றுக்கொள்ளும் இஸ்ரவேலர் இவர்களே. இவர்கள் மேசியாவின் 1000 வருட அரசாட்சிவரை உயிருடன் இருப்பார்கள். சகரியா 13: 8, 9. ஏசாயா 48: 10. சங்கீதம் 94: 14
வச: 9- 17 – அந்தி கிறிஸ்துவின் காலத்தில் அவனுடைய 666 முத்திரையை வாங்க மறுப்பவர்கள் இரத்த சாட்சியாக மரிக்க வேண்டும்.இவர்கள் சகல ஜாதிகளிலுமிருந்து வரும் ஒருவரும் எண்ணக்கூடாதவர்களாயிருப்பார்கள். இவர்கள் வெள்ளையங்கி தரித்து, குருத்தோலைகளை தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு ‘இரட்சிப்பு…எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக’ என்று சத்தமிட்டு பாடினார்கள். இவர்கள் கிறிஸ்துவுடனே இருக்க பின்வரும் வசனங்களின்படி சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வெளி 13: 15- 17, மத் 24: 29- 31, ரோமர் 11: 25, 26. எபி 9: 14
ஆனால், இவர்கள் கர்த்தரின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட ஜெயங்கொண்டவர்கள் சபையில் சேர்ந்த கூட்டமல்ல. சகல ஜாதிகளிலுமிருந்து வந்து குருத்தோலைகளை கைகளில் பிடித்துக்கொண்டு
பாடும் எண்ணமுடியாத திரள் கூட்ட ஜனங்கள்.
Author: Rev. Dr. R. Samuel
அதிகாரம் 7 பாடுகளும் பாடல்களும்
7:9 ல் மூன்று காரியங்கள்
1. எச்சரிப்பு : கொடுந்துன்ப காலம் வருகிறது.
2. நம்பிக்கை : விசுவாசிகள் சொல்லொணா துன்பம் அனுபவித்து சொல்லொணா சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
3. வாக்குத்தத்தம் : துன்ப காலத்தில் விசுவாசத்தைக் காத்துக்கொண்டால் நித்திய சந்தோஷமும், சமாதானமும் தேவனோடிருக்கும் பாக்கியமும் நிச்சயமும்.
வ 1: நான்கு தூதர்கள்
அந்தக்காலத்தில் பூமி தட்டையாகவும், சதுரமாகவும் இருப்பதாக நினைத்திருந்தனர். (ஏசா. 11:12; எசேக், 7:2) ஆகவே நான்கு பக்கங்களுக்கு நான்கு தூதர்கள் இந்தத் தூதர்கள் பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். அந்தக்காலத்தில் இயற்கை தூதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததென்று யூதர்கள் நம்பினார்கள். (வெளி. 14:18; 16:5, ஆதி,19:22),
வ 2: ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் இசையினின்று ஏறிவரக்கண்டேன். அவன் பூமியையும், சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி கொஞ்ச நேரத்திற்கு, ஒன்றையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.
அவன் வந்த இசையைக் கவனியுங்கள்; அது கிழக்குத்திசை, வெளி. 16:12 ஆர்மகெதோன் யுத்தத்திற்கும், பேரழிவிற்கும் வருகிற சாத்தானின் சேனை சூரியன் உதிக்கும் திசையிலிருந்துதான் வரும், யூதருக்கு ராஜாவாகப் பிறந்தவரின் நட்சத்திரமும் கிழக்கேதான் தோன்றியது. மத். 2:2
வ 3; நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் சேதப்படுத்தாதிருங்கள்.
நமது தேவனுக்கு, தம்மைப் புறக்கணித்தவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுப்பதைவிட தம்மை விசுவாசித்த பிள்ளைகளைப் பாதுகாப்பதுதான் அதிக முக்கியம். இதேபோன்ற ஒரு சம்பவத்தை எசேக்கியேல் 9:4,5ல் வாசிக்கிறோம், நகரத்தில் செய்யப்படுகிற அருவருப்புகளின் நிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். இவர்கள் மட்டுமே சங்காரத்திற்குத் தப்பினார்கள் எசேக்,9:6 அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள் என்று சங்காரம் பண்ணுகிறவர்களுக்குச் சொல்லப்பட்டது.
இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இவர்கள் துன்பக்காலத்தின் ஆரம்பத்திலே தாங்கள் சிலுவையிலறைந்த இயேசுவே மேசியா என்றறிந்து, இரட்சிக்கப்பட்டு தீவிரமாக இயேசுவே இரட்சகர்' என்று. அந்திக் கிறிஸ்துவின் ஆட்சியிலுள்ளவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவித்து ஒருவரும் எண்ணக்கூடாத அளவு ஜனங்களை தேவனுடைய இரட்சிப்புக்குள் வழி நடத்தினவர்கள், பவுல் ரோமர் 11:11-27வரை வாசித்துப்பார்ப்போமென்றால் ஏன் இவர்கள் துன்பக்காலத்திலே தெரிந்து கொள்ளப்பட்டார்களென்பது, விளங்கும். அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது (வ11),. அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்ககரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது? மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவா?(வ 15) புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும் (வ25). அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில், புறஜாதியாரின்காலம் நிறைவேறினதால் யூதர்களின் இரட்சிப்பு உண்டானது, பன்னிரண்டு யூதர்களால் உலகம் கலக்கப்பட்டிருக்க, 1,44,000 யூதர்களால் எவ்வளவு பெரிய அறுவடை உண்டாயிருக்கும்? அவர்கள்தான் வெள்ளையங்கிகளைத்தரித்துக் கொண்டு கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு. பரலோகத்தில் நிற்பவர்கள்!
1. மூத்த மகனாகிய ரூபனின் பெயர், முத்திரையிடப்பட்டவர்களில் ஏன் முதலாவது வரவில்லை? ரூபன் தன் ஒழுக்கக் கேட்டினால் சேஷ்டபுத்திர பாகத்தை இழந்தான். அது, யோசேப்புக்குக் கொடுக்கப்பட்டது. ஆகவே யூதாவின் பெயர் முதலில் வருகிறது
2. கானானில் சுதந்தரம் கொடுக்கப்படாத லேவி கோத்திரம் ஏன் சேர்க்கப்பட்டது?
ஆசாரிய ஊழியமும், தசம பாகமும் பூலோகத்தோடு முடிந்து போனதினால் முத்திரை இடப்பட்டவர்களில் சேர்க்கப்பட்டது.
3. எப்பிராயீம் கோத்திரத்தின் பெயர் விடப்பட்டு யோசேப்பின் பேர் சேர்க்கப்பட்டது ஏன்?
1 ராஜா 12: 28 - 30 பத்துக் கோத்திரங்களாகிய இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய யெரோபெயாம் எப்பிராயீம் கோத்திரத்தான். அவன் இரண்டு பொன் கன்றுகுட்டிகளை உண்டாக்கி, தாணிலும், பெத்தேலிலும் வைத்து இஸ்ரவேலிலே விக்கிரக ஆராதனையை உண்டாக்கி ஜனங்களை பாவம் செய்யப்பண்ணி இஸ்ரவேல் தேசம் இல்லாமற் போவதற்குக் காரணமானதினால், எப்பிராயீம் கோத்திரத்தில் முத்தரையிடவில்லை. ஆதி. 48:5, 6ன்படி யோசேப்புக்கு வேறுபிள்ளைகள் பிறந்து அவர்கள் யோசேப்பின் கோத்திரமாக முத்திரையிடப்பட்டிருக்கலாம்..
4, தாண் கோத்திரம் ஏன் விடப்பட்டுள்ளது? ஆதி. 49:17ல் யாக்கோபு தன் பிள்ளைகளை: ஆசீர்வதிக்கும் பொழுது, “தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்" என்றான், வேதத்தில் சர்ப்பமானது, பிசாசைக் குறிப்பது. அந்திக் கிறிஸ்து சாத்தானின் பிரதிநிதி. 2 தெச. 2:9ல் “அந்த: அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும், அடையாளங்களோடும், பொய்யான அற்புதங்களோடும்!” இருக்கும். ஆகவே, தாண் கோத்திரத்திலிருந்து அந்திக்கிறிஸ்து வருவதால் அந்தக் கோத்திரம் விடப்பட்டுள்ளது.
வ 9 இவைகளுக்குப்பின்பு தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் அடையாளம் (முத்திரை) போட்டபின்பு ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக நிற்கக் கண்டேன்.
வ10: அவர்கள் மகா சத்தமிட்டு; இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.
இரட்சிக்கப்பட்டவர்களால் தேவனை துதித்துப் பாடாமல் இருக்க முடியாது. பரலோகம் வந்த பின்புதான் “இவ்வளவு பெரிதான இரட்சிப்பின்! முழுமையான மகிமையை அறிந்து அனுபவிக்க முடியும். அது துதியும் பாடலுமாகத்தான் வெளிப்படும்!
வ11,12: மீட்கப்பட்ட திரளான கூட்டத்தைக்கண்ட துதர்கள் முகங்குப்புற விழுந்து தேவனைத்தொழுதுகொண்டு ஆமென் எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் என்றார்கள்.
லூக்கா 15:10ன்படி மனந்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். எனவே இரட்சிக்கப்பட்ட திரளான கூட்டத்தைக் கண்டு தூதர்கள் ஆர்ப்பரித்ததில் ஆச்சரியமொன்றில்லை,
வ 13-14: மூப்பர்களில் ஒருவன் யோவானைப் பார்த்து,வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான் யோவான். அது உமக்கேதெரியும் என்றபோது, அந்த மூப்பன் இவர்கள் மிகுந்த உபத்திரவத்தினின்று வந்தவர்கள்.இவர்கள் தங்கள் ௮ங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள் என்றான்.
இவர்கள் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி நடந்த துன்பகாலத்தில் 1,444,000. யூத ஊழியர்களின் ஊழியத்தால் இரட்சிக்கப்பட்டவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்துப் பரலோகத்திற்கு வந்தவர்கள்.
2 கொரி. 4:17 சொல்வதென்னவென்றால் காணப்படுகிறவைகளையல்ல (பூமிக்குரியவைகளை) , காணப்படாதவைகளை (பரலோகத்தை) நோக்கியிருக்கிற நமக்கு அதிஏக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. அப், 14:22ஐ வாசியுங்கள். நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும். கிறிஸ்துவுக்காக நாம் படும் பாடுகளே, நம்மைப் பரலோகத்திற்கு கொண்டு செல்லும்படிகள். உபத்திரவங்களை சந்தோஷமாகசகிக்கப் பழகிக்கொள்ளுங்கள். பரலோக நன்மைகளை பூமியிலேயே அனுபவிப்பீர்கள்.
வ 15- 17: பாடுகளினூடாகப் பரலோகம் வந்தவர்களின் பாக்கியமென்ன?
எப்பொழுதும் தேவனோடும் அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாகவும் இருப்பார்கள்; இரவும் பகலும் அவரை சேவிப்பார்கள்; தேவன் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்; இனி பசியுமில்லை, தாகமுமில்லை; ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து ஜீவதண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார். தேவன்தாமே இவர்களுடையகண்ணீர் யாவையும் துடைப்பார்.
Author: Rev. S.C. Edison