முக்கியக் கருத்து
- கர்த்தர் ஒருவரே மகா ராஜனும் எல்லா வல்லமைகளுக்கும் உயர்ந்தவர்.
- நமது மேய்ப்பனாகிய கர்த்தரை நாம் கெம்பீரமாய்த் துதித்து பக்தியாய் பணிந்துகொள்ளவேண்டும்.
- தேவ கோபம் நம்மேல் வரும்படியாக நம்முடைய கீழ்ப்படியாமையால் இருதயத்தை கடினப்படுத்தக்கூடாது.
- அவருடைய சந்நிதியில் துதியோடு பிரவேசிக்கவேண்டும்.
1. கர்த்தர் ஒருவரே மகாராஜன் - அவரை கெம்பீரமாய் துதிக்கவேண்டும் (வச.1-5)
கர்த்தர் நம்மை இரட்சித்தபடியால் அவரை கெம்பீரமாய் மகிழ்ச்சியாக துதிக்கவேண்டும். உலகங்களைப் படைத்தவராகிய கர்த்தர் ஒருவரே மெய்யான தேவன். மனிதர்கள் பல பொருட்களை, தெய்வமல்லாதவற்றை தேவர்களாக வணங்குகிறார்கள். இவையெல்லாவற்றைக் காட்டிலும் மகா வல்லமையும், பெலனும் கொண்ட மகா தேவனும், மகா ராஜனுமாகிய தேவன் நம் கர்த்தர் (வச.3).
"கர்த்தரோ மெய்யான ... தேவன் ... வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள் ... அழிந்துபோகும்...'
எரேமியா 10:10-12 ஆம் வசனங்களில்கூட இந்த சத்தியத்தைக்குறித்து தீர்க்கதரிசியின்மூலம் வாசிக்கிறோம்.
கர்த்தருடைய சந்நிதிக்கு வரும்போது துதித்தலுடன் வரவேண்டும் (வச.2).
2. நம் மேய்ப்பராகிய கர்த்தர் பணிவாய், அவரை தொழுதுகொள்ளவேண்டும் (வச.6,7)
இப்படிப்பட்ட மகா தேவன் தமது ஜனங்களாகிய நமக்கு ஒரு மந்தையின் மேய்ப்பனைப்போல கிருபையாய் இருக்கிறார். ஆகவே, நாம் அவரை பக்தியாய், பணிந்து தொழுதுகொள்ளவேண்டும். அவர் தான் நம்மைப் படைத்தவர்.
யோவான் 10:11, ஏசாயா 40:11.
3. தேவ கோபத்திற்கு ஆளாகாமல் இருக்கவேண்டும் (வச.8-11)
மகா தேவனுடைய கிருபை, இரக்கம் இவற்றை நாம் பெற்றுக்கொள்ள கீழ்ப்படிதல் தேவை. இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் கீழ்ப்படியாமல் முறுமுறுத்து, வணங்கா கழுத்துள்ள ஜனம் என்று கர்த்தரால் அழைக்கப்பட்டார்கள். தேவனுடைய பரிசுத்த தேவ கோபத்திற்குளாகி அவர்கள் தங்களுக்காக கொடுக்கப்பட்ட இளைப்பாறுதலை பெற்றுக்கொள்ளமுடியாமல் போனார்கள்.
"பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: ... இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்' என்று யாத்.32:9 இல் கூறியதை வாசிக்கிறோம்.
நாமும் அப்படி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து ஆசீர்வாதங்களை இழந்து போகாமல் இருக்க எபிரெயர் 3:7-14 ஆம் வசனங்களில் புத்தி சொல்லப்படுகிறோம்.
"... வனாந்தரத்திலே கோபமூட்டினதுபோல ... உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் .. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை ... பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்'.
Author: Rev. Dr. R. Samuel