முக்கியக் கருத்து
- ஆதியும் அந்தமுமான தேவனே நிலையற்ற மனிதனுக்கு அடைக்கலம்.
- மனிதன் தன் வாழ்க்கையின் சொற்ப நாட்களை கணக்கிட்டுக் கொள்ளும் தேவ அறிவை பெறவேண்டும்.
- கர்த்தர் தாமே மனிதனை மன்னித்து மகிழ்ச்சியாக்கவேண்டும்.
முன்னுரை
தேவ மனிதனாகிய மோசே எழுதினது இந்த சங்கீதம் என்பதில் ஐயமில்லை. மோசே, இஸ்ரவேல் மக்களை வனாந்திர வழியில் நடத்திக்கொண்டு வந்த காலக்கட்டத்தில் ஏறெடுத்த ஜெபப் பாடலாக இருக்கக்கூடும். ஏனெனில், இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய வாழ்நாளின் அருமையை கணக்கிடாமல் தேவகோபத்திற்கு ஆளாகி, 40 நாட்களில் கடக்க வேண்டிய வனாந்திரத்தை 40 ஆண்டுகளாக கடந்தும், வாக்குப்பண்ணப்பட்ட கானான் தேசத்தை அடைய முடியவில்லை. தேவனிடம் ஞானம் பெற்ற யோசுவாவும் காலேபும் மாத்திரமே கானானுக்குள் பிரவேசித்தார்கள்.
ஒவ்வொரு மனிதனும், விசேஷமாக விசுவாசிகள் தங்கள் விசுவாச ஓட்டத்தின் நாட்களை கணக்கிட்டு பிரயோசனப்படுத்திக் கொள்ள தேவ ஞானத்தை கேட்டுப் பெற்றுக்கொண்டால் இகத்திலும் பரத்திலும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வை தேவ கிருபையால் பெறுவார்கள்.
1. அநாதி தேவனே வலிமையற்ற மனிதனுக்கு நித்திய அடைக்கலம் (வச.1-6)
வலிமையற்ற, நிலையற்ற மனிதனுக்கு (வச.6). இந்த உலக வாழ்க்கையில், நீண்ட ஆயுசுள்ளவரும், உலகங்களை படைத்தவருமாகிய தேவனே அடைக்கலம் கொடுத்து தலைமுறை தலைமுறையாகக் காக்க வல்லவர் (வச.2). மனிதனுக்கு இந்த சத்தியத்தை உணர்த்தும்படியாக, சில சிட்சைகளுக்குள்ளாக்கி மனந்திரும்பும்படி அழைக்கிறார் (வச.3).
உபாகமம் 33:27 வெளிப்படுத்தல் 3:19
மனிதனுக்கு நீண்ட நாட்களாக தோன்றுவது தேவனுடைய நித்தியத்தின் காலங்களுக்கு முன்பாக மிகக் குறுகிய காலமாகும். ஆறுநாட்களில் தேவன் உலகங்களையே படைத்து ஏழாவதுநாள் ஓய்ந்திருந்தார். அதன் அடிப்படையில் ஆறு ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகத்தில் மனிதனை தேவ ராஜ்ஜியத்திற்காக உருவாக்கும் பணியை செய்து, ஏழாவது ஆயிர ஆண்டில் இதே உலகில் தமது ஆயிர வருட அரசாட்சியை, இளைப்பாறும் சமாதானத்தின் வருடங்களாக இந்த உலகத்திற்கு தேவன் அருளுவார் (வச.4).
ஆதியாகமம் 1,2:1-3, 2 பேதுரு 3:8.
2. மனிதனின் வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது, காரணம்? (வச.7-11)
மனிதனின் வாழ்க்கை எவ்வளவு நாட்களாக இருந்தாலும், மேன்மையாக இருந்தாலும் சஞ்சலம் நிறைந்ததாகவே இருக்கிறது என்று மோசே (வச.10) இல் கூறுகிறார். பிரசங்கி 1:2-4, 14, 2:22,23
நீண்ட ஆயுசுள்ள தேவனுக்கு முன்பாக மனிதனுடைய உலக வாழ்க்கை எண்பது வருடங்களாக இருந்தாலும் அவை மிகக் குறைவானதே. மோசே இவ்வாறு கூறுவதற்கு காரணம், இஸ்ரவேல் மக்கள் வனாந்திர பிரயாணத்தில் தங்கள் கீழ்ப்படி யாமையினாலும், முறுமுறுப்பாலும் தேவ கோபத்திற்கு ஆளாகி தங்கள் வாழ்க்கையை சஞ்சலத்தால் நிறைத்துக்கொண்டார்கள்.விவாசிகளாகிய நாம் தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்திற்கும், வழிநடத்துதலுக்கும் கீழப்படியாமல் போகும்போது, ஆசீர்வாதமாக இருக்கவேண்டிய வாழ்க்கை சஞ்சலம் நிறைந்ததாக மாறிவிடுகிறது. எபிரெயர் 10:29,36; 12:28,29.
3. தேவனோடு ஒப்புரவாக ஜெபம் (வச.12-17)
தேவன் மனிதனுக்கு இவ்வுலகத்தில் கொடுத்திருக்கும் கொஞ்ச நாட்களை பிரயோசனப்படுத்தி தேவ சித்தத்தின்படி வாழ, தேவனிடம் ஞானம் கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டும் (வச.12)
கொலேசெயர் 4:5
விசுவாசிகளுக்கு தங்கள் எதிர்காலத்தைக் குறித்த ஒரு தரிசனம் தேவை. அதுவே, நாட்களை கணக்கிட்டு பிரயோசனப்படுத்திக் கொள்ள உதவும்.
நீதிமொழிகள் 11:14, 29:18
தேவனே, நீர்தான் எங்களுக்கு உமது கிருபையால் மகிழ்ச்சி உண்டாகச் செய்யவேண்டும் என்று மோசே தனது ஜெபத்துடன் இந்த சங்கீதத்தை முடிக்கிறார்.
ஏசாயா 26:12; ஆபகூக் 3:2
Author: Rev. Dr. R. Samuel