முக்கியக் கருத்து
- தேவனோடு தேவ ஜனம் ஒப்புரவாக விண்ணப்பம்.
- தேவனுடைய வாக்குத்தத்த ஆசீர்வாதங்கள்.
1. கர்த்தருடைய பிரியம் நினைவுகூறப்படுதல் (வச.1-3)
தேவன் செய்த நன்மையை அவருடைய ஜனங்கள் நினைவுகூறும் வார்த்தைகளை கோராகின் புத்திரர் இந்த வசனங்களில் பாடுகிறார்கள்.
"கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, ... அக்கிரமத்தை மன்னித்து, எங்கள் சிறையிருப்பைத் திரும்பினீர்' (வச.1,2) என்று அறிக்கையிட்டு நன்றி செலுத்தும் வகையில் பாடுகிறார்கள். கர்த்தர் நம் சிறையிருப்பை, கட்டுண்ட நிலையை மாற்ற வேண்டுமானால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு நம்மேல் அவர் பிரியமாயிருக்கும்படி நாம் நடந்து கொள்ளவேண்டும்.
"இயேசு ... திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். ... உடனே, அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு ...' போனான் (மாற்கு 2:5-12). திமிர்வாதக்காரனின் கட்டுகளை மாற்ற இயேசு அவன் பாவங்களை மன்னித்தார்.
2. தற்போதைய சிறையிருப்பிலிருந்து விடுதலை தேவனோடு ஒப்புரவாக விண்ணப்பம் (வச.4-7)
தங்கள் சிறையிருப்பை ஒருமுறை மாற்றிய கர்த்தர் தற்போதைய சிறையிருப்பிலிருந்து விடுவிப்பார் என்ற நம்பிக்கை தேவ ஜனத்தின் உள்ளத்திலிருப்பதை கோராகின் புத்திரர் இந்த வசனங்களில் வெளிப்படுத்துகிறார்கள். தேவ ஜனம் மீண்டும் தேவனுடைய வழிகளைவிட்டு விலகி, தேவ கோபத்திற்கு ஆளாகி, மீண்டும் சிறையிருப்பின் அனுபவத்தில் தற்போது இருப்பதுஇங்கே தெளிவாகிறது.
"... கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும் ...' (ஆபகூக் 3:2). வசனத்தில் தேவன் தங்களை உயிர்ப்பிக்கும்படி ஏறெடுத்த ஜெபத்தை கோராகின் புத்திரர் (வச.6) இல் கேட்பதை பார்க்கிறோம்.
விசுவாசிகளாகிய நாம் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் தாழ்மையான நிலையிலிருக்கும்போது, தனிப்பட்ட வாழ்க்கையிலோ, சபையாகவோ உயிர்ப்பிக்கப்பட்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மீண்டும் பெற்று அனுபவிக்க நேர்மையாய், நமது ஏழ்மை நிலையை அறிக்கையிட்டு தேவ கோபம் மாறி அவர் இரக்கமும் இரட்சிப்பையும் அருள ஜெபிக்க நமக்கு உரிமை
உண்டு. இஸ்ரவேல் மக்களில் தேவபக்தியுடைய கோராகின் புத்திரர் போன்றவர்களும் இதை செய்தார்கள் என்பது நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. "தேவனோடு ஒப்புரவாகுங்கள்' 2 கொரி.5:20 வசனத்தில் பவுல் புத்திசொல்கிறான்.
3. கர்த்தருடைய வாக்குத்தத்தம் (வச.8-13)
தேவனோடு ஒப்புரவாக, தங்களைத் தாழ்த்தி மீண்டும் அவரிடம் வரும் தேவ மக்களை கர்த்தர் அன்பால் ஏற்றுக்கொண்டு வாக்குத்தத்தங்களைக் கொடுத்து ஆசீர்வதித்து அவர்கள் சிறையிருப்பை மாற்றுகிறார்.
"நான் ... சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்'
என்று கர்த்தர் சொல்லுகிறார் சகரியா 2:5.
இவ்விதமாக கர்த்தர் தமது தேசத்தில் மகிமையாகவும் (9) சமீபமாகவும் இருந்து இரட்சித்து, பூமியிலிருந்தே சத்தியத்தை
அளித்து, நீதிசெய்து (11) கிருபை சமாதானம் (10) இவற்றை அருளி நன்மையானவைகளைத் தருவேன் (12) என்று
வாக்களிக்கிறார்.
Author: Rev. Dr. R. Samuel