முக்கியக் கருத்து
- தேவனுடைய வாசஸ்தலம் மிகவும் இன்பமானது, எளிமையானவர்களுக்கும் அங்கு பாதுகாப்பு உண்டு.
- தேவனில் பெலன்கொள்ளுகிறவர்கள் எதிர்ப்புகளையும் சாதகமாக்கிக்கொண்டு முன்னேறுவார்கள்.
1. தேவனுடைய வாசஸ்தலத்தின் மேன்மை (வச.1-4)
இந்த உலகத்தின் அகோரமான சூழ்நிலையில் வாழ்ந்த ஒருவன் தேவனுடைய ஆலயத்தில் பிரவேசித்து அதன் மகா மேன்மையைக் கண்டு விவரிப்பதை இந்த வசனங்களில் கோராகின் புத்திரர் அற்புதமாக வரைந்திருக்கிறார்கள். தேவனை, சேனைகளின் கர்த்தர் என்றழைத்திருப்பது, அவர் வல்லமையுள்ளவரும் தம்மை அண்டிக்கொள்பவர்களைப் பாதுகாப்பவருமாக எடுத்துக் காட்டுகிறது.
2. தேவனுடைய வாசஸ்தலத்தின் மேன்மையில் கோராகின் புத்திரரின் அனுபவம்
1. அது இன்பமானது (1)
2. மேன்மேலும் வாஞ்சையையும் விருப்பத்தையும் தூண்டுகிறது (2)
3. தேவனை கெம்பீரமாய் பாடித் துதிக்கும் உற்சாகம் எழும்புகிறது (2,4)
4. ஒரு சிட்டுக்குருவி போன்ற பெலனற்ற எளியவனுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது (3)
"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப் பாடு; ... நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூறு... உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; ...' (செப்பனியா 3:14-17).
தேவ பிள்ளையே! விசுவாசியே! தேவனுடைய ஆலயத்திலும் தேவனோடு வாழ்வதிலும் இன்றைக்கு உன்னுடைய அனுபவம் என்ன? சிந்திப்பீர்களா!
3. தேவனில் பெலன்கொள்ளுதல் (வச.5-7)
தேவனில் பெலன் கொள்ளுகிறவர்கள்,
1. அழுகையின் பள்ளத்தாக்குப் போன்ற வாழ்க்கைப் பிரச்சனைகள், எதிர்ப்புகள் இவற்றையும்கூட தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள். அவ்விதம் செய்யும்போது, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள்மேல் பொழிந்து மேலும் அவர்களைப் பெலப்படுத்துகிறது (6).
"உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்...' என்று தாவீது சங்கீதம் 18:29, 2 சாமுவேல் 22:30 என்ற வசனங்களில் தனது அனுபவத்தையும் "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலணுன்டு' என்று பிலிப்பியர் 4:13 வசனத்தில் பவுல் தனது விசுவாசத்தையும் கூறுகிறார்கள்.
2. தேவனில் பெலன்கொள்ளும்போது, அவர்கள் பெலன் பெருகுகிறது (7).
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, ...' என்று ஏசாயா 40:31 ஆம் வசனம் வாக்குக்கொடுக்கிறது தேவனில் பெலன்கொள்ள, சீயோன் என்றழைக்கப்படும் தேவசமூகத்திற்கு, தேவனுடைய ஆலயத்திற்கு வரவேண்டும்.(7)தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கவேண்டும் (5).
அருமையான விசுவாசியே, உன்னில் தேவனுடைய பெலன் எவ்வளவு கிரியை செய்கிறது என்று சிந்திப்பாயா? தேவ பெலன் கிரியை செய்யாதபடி தடுக்கும் உலக மாயைகளை வெறுத்துத்தள்ளி, தேவனுடைய ஆலய ஆராதனைகளில் பரிசுத்த வாழ்வைத் தேடி வருவாயோ?
4. தேவனிடம் விண்ணப்பம் (வச.8,9)
நம் கர்த்தர் சேனைகளின் கர்த்தர். ஆகவே, அவரிடம் ஜெபித்து நம் சத்துருவாகிய பிசாசின் தாக்குதலுக்கும், உலகத்தின் தீமைகளுக்கும் நம்மை பாதுகாக்கும் கேடகத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எபேசியர் 6:10-18.
5. ஆயிரம் நாளிலும் ஒரு நாள் மேலானது (வச.10)
ஆகாமியக் கூடாரம் என்று சொல்லப்படும் இவ்வுலக பாவ வாழ்க்கையின் மிகுதியான இச்சை இன்பங்களை ஆயிரம் நாட்கள் அனுபவித்து பின் நரகத்திற்குச் செல்வதைவிட, தேவனுடைய ஆலயத்தில், தேவ பிரசன்னத்தில் ஒரே நாளில் கிடைக்கும்
பேரின்ப சந்தோஷம் பரலோக பாக்கியத்தைக் கொடுக்கும்.
இதை கோராகின் புத்திரர் இந்த சங்கீதத்தில் அனுபவித்துக் கூறுகிறார்கள்.
கோராகு தேவ ஊழியனாகிய மோசேக்கு எதிராக பேசி அழிவை சந்தித்தான் (எண்ணாகமம் 26:9,10). கோராகின் புத்திரர் தங்கள் தகப்பனுடைய துன்மார்க்கத்திற்குக் கை கொடுக்காமல், தேவனுடன் இருப்பதையே தெரிந்துகொண்டார்கள். ஆகவே,
"கோராகின் குமாரரோ சாகவில்லை' எண்ணாகமம் 26:11 என்று வாசிக்கிறோம். மேலும், மோசே
"அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே ... இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, ...' என்று (எபிரெயர் 11:25,26) இல் வாசிக்கிறோம்.
அருமை விசுவாசிகளே, நீங்கள் எதைத் தெரிந்துகொள்கிறீர்கள்! யோசிப்பீர்களா?
6. உத்தம தேவபிள்ளையின் பலன் (வச.11,12)
ஆகவே, நம்முடைய மெய்த்தேவனாகிய கர்த்தரை நம்பி, உத்தமமாய் பரிசுத்தமாய் வாழும் வாழ்க்கையை நாம் தெரிந்து கொண்டு ஜீவிப்போம். கர்த்தர் நமக்கு சூரியனும், கேடகமுமாயிருந்து, நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கிக் கிருபையாய் தமது மகிமையினால் மூடி எல்லா நன்மைகளையும் கொடுப்பார்.
"கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண் ...' (நீதிமொழிகள் 10:29).
Author: Rev. Dr. R. Samuel