முக்கியக் கருத்து
- "தேவர்கள்' என்ற ஸ்தானத்திலுள்ள உலக பிரபுக்கள், நியாயாதிபதிகள் அநியாய தீர்ப்பு செய்கிறார்கள்.
- தேவனாகிய கர்த்தர் எழுந்தருளி நீதியான நியாயத்தீர்ப்பு செய்து பூமியை சுதந்தரித்துக் கொள்வார்.
1. தேவர்கள் நடுவில் தேவனாகிய கர்த்தர் (வச.1-5)
தேவர்கள் என்று ஆசாப் குறிப்பிடும் கூட்டம் தேவ தூதர்களையும், புறஜாதிகள் தவறாக வழிபடும் அசுத்த ஆவிகளையும், பூமியில் அதிகாரங்களைக் கொண்ட ராஜாக்கள், அதிபதிகள், நியாயாதிபதிகள் தலைவர்கள் போன்ற பிரபுக்களையும், தேவபுத்திரர் என்னும் மீட்கப்பட்ட தேவ மக்களையும் விசுவாசிகள் கூட்டத்தையும் குறிக்கிறது உபாகமம் 7:4,5, 2 இராஜா 19:15-18, யோபு 1:6, யோபு 38:7, யோவான் 1:12. தேவர்கள் என்று சொல்லப்படும் இந்த கூட்டத்தின் மத்தியில் பரிசுத்த தேவன் எழுந்தருளி உயர்ந்தவராக இருப்பார் (வச.1).
பெலவீனருக்கும், திக்கற்றவர்களுக்கும் முக தாட்சணியம் பாராமல் நீதியாய் நியாயம் செய்யுங்கள் (வச.3,4) என்று தேவனாகிய கர்த்தர் கட்டளைக் கொடுக்கிறார். ஆனாலும், சாத்தானின் தூதர்களும் இந்த உலகத்தின் அதிபதிகளும் தேவ கட்டளையை உணராமல் அநியாயத்தீர்ப்பு செய்கிறார்கள் (வச.2,5). ஆகவே, இந்த உலகத்தின் அஸ்திபாரம் நீதியிலிருந்து அசைகிறது (வச.5).
இன்றைக்கு நாம் உலகத்தின் எல்லா தேசங்களிலும் பஞ்சம், பொருளாதார வீழ்ச்சி, கடன் பாரம், பற்றாக்குறைகள் போன்றவைகள் பெருகக் காரணம் பிரபுக்களும் அதிபதிகளும் அநியாயமாக ஊழல்களில் ஈடுபடுவதால் தான் என்பதை நன்றாகவே உணருகிறோம்.
2. தேவனாகிய கர்த்தர் எழும்பி நியாயம் செய்வார் (வச.6-8)
நீங்கள் தேவர்கள், உன்னதமானவரின் மக்கள் என்று மனிதனுக்கு தேவனாகிய கர்த்தர் உரைத்து, அந்த உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்பிரியப்படுகிறார் என்று ஆசாப் (வச.6) இல் தேவசித்தத்தை தெரியப்படுத்துகிறார். யோவான் 1:12, யோவான் 10:34,35 இந்த வசனங்களில் இந்த சத்தியம் தெளிவாய் விளக்கப்பட்டுள்ளது. ஆகவே, தேவபுத்திரர்களாக "தேவர்கள்' என்றழைக்கப்படுகிற விசுவாசிகளாகிய நாம் நியாயத்திற்கு கை கொடுக்கவேண்டும். இந்தப் பூமியில் நீதி நிலைநாட்டப்பட பிரயாசப்படவேண்டும் (வச.6).
"உம்முடைய ராஜ்யம் வருவதாக; ...' (மத்தேயு 6:10) என்று ஆண்டவராகிய இயேசு நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்ததன் நோக்கம் இதுவே. உலக பிரபுக்கள் செய்யும் அநியாயத்திற்கு நாம் கை கொடுத்தால் நமது ஸ்தானத்தை இழந்துவிடுவோம் (7). எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.
"நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது' என்று நீதிமொழிகள் 23:18 வசனத்திலும் "அவர் நீதியோடே சீக்கிரமாய் ... கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே ... நிறைவேற்றி முடிப்பார்' என்று ரோமர் 9:28 வசனத்திலும் வாசிக்கிறோம். ஆசாபும் கூட "தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்' (வச.8) என்று கடைசி வசனத்தில் ஜெபித்து முடிக்கிறான்.
Author: Rev. Dr. R. Samuel