முக்கியக் கருத்து
- தேவனுடைய பூர்வ நாட்களின் கிரியைகளின் நினைவு கூறுதல் நம்பிக்கையைக் கொடுக்கும்.
- ஆபத்து நாட்களில், தளராமல் தேவனைத் தேடுவது வீண்போகாது.
1. ஆபத்து நாளில் தேவனைத் தேடும் கதறல் (வச.1-9)
ஆசாப் தனது சொந்த துயரத்தைக்குறித்தும், ஆபத்தைக் குறித்தும் இந்த சங்கீதத்தில் கதறுவதைப்போலக் காணப்பட்டாலும், இந்த அலறலின் சத்தம், கெஞ்சும் கூக்குரல் சர்வ இஸ்ரவேல் மக்களுடைய பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் ஏறெடுக்கப்பட்ட ஜெபமாக இருக்கிறது. ஆசாப் தனது ஆவி தொய்ந்துபோன நிலமை தேவனை தியானிக்கும்போது ஏற்பட்டது (வச.3) என்றும் தேவனுடைய பூர்வகாலத்து வருடங்களின் வழி நடத்துதலை சிந்தித்தபோது (வச.5) ஏற்பட்டது என்றும் கதறுகிறான். ஆகவே, தேவனுடைய அன்பு, கிருபை இவை மாறாதது என்ற நம்பிக்கையின் சின்னம் அந்த கூக்குரலில் காணப்படுகிறது. மேலும், தேவனே தன்னுடைய சஞ்சல நேரத்தில் இரவில் தூங்காதபடி செய்தார் (4) என்றும் கூறுகிறான். ஆனாலும், தனது அல்லது இஸ்ரவேல் புத்திரராகிய தங்களது தற்கால வருத்தத்தில் தேவன் ஏன் உதவிகரம் நீட்டவில்லை என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்கும்போது தேவன் (1) தங்களை மறந்து விட்டாரோ (2) தேவன் தங்கள் மேல் கோபப்பட்டு இருக்கிறாரோ என்ற கேள்விகள் தனக்குள் எழுவதை வெளிப்படுத்துகிறான்.
ஒரு விசுவாசி தன்னுடைய வருத்தத்தின் நாட்களில், கைவிடப்பட்டது போன்ற நிலைமையில், இருதயம் தொய்ந்து போகும் காலங்களில் தனது நேரங்களையும் நாட்களையும் தேவனை அதிகமாக தியானித்து, தனது நிலைமைக்கான காரணங்களை ஆராய்ச்சி செய்வதுடன் தேவன் கருணை மிகுந்தவர், அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் என்பதை நினைவுகூறுவது சரியான பாதையில் நடத்தும் என்பதற்கு இந்த ஆசாபின் வார்த்தைகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.
"விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்' என்று எபிரெயர் 11:1,2 இல் வாசிக்கிறோம்.
2. நினைவுகூருதலின் பெலன் (வச.10-12)
ஆசாபின் நேர்முகமான கதறல், சரியான எண்ணத்தில் கொண்டுபோய் விடுவதைப் பார்க்கிறோம். ஆசாப், தேவன் தங்களை மறந்தாரோ என்று எண்ணியது தவறு என்பதை, தேவனுடைய முந்தின வருஷங்களின் அதிசய செய்கைகள் சுட்டிக்காட்டுவதை தெரிவிக்கிறான். தேவன் ஒரு வேளை தங்கள்மேல் கோபப்பட்டாலும்கூட, முந்தின நாட்களில் தங்களை தயவாய் மன்னித்து வழிநடத்திய செயல்களின் யோசனை, தனது ஆபத்தில் தங்கள் எல்லா வருத்தங்களையும் தள்ளிவிட்டு தேவனையே தங்கள் விடுதலைக்காக நோக்கிப் பார்க்கவேண்டும் என்று தூண்டுகிறது என்கிறான்.
"ஆகையால், மேகம்போன்ற இத்தனைத் திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;' (எபிரெயர் 12:1).
3. முந்தின நாட்களின் அதிசயங்களின் அறிக்கை (வச.13-20)
தேவன் முந்தின நாட்களில் தங்கள் முற்பிதாக்களின் வாழ்க்கை சரித்திரத்தில் செய்த அதிசய அற்புதங்களை விவரிப்பது, ஆசாபுக்கு ஒரு ஆரோக்கிய பெலனைக் கொடுக்கும் மருந்தாக (வீலிஐஷ்உ) இருப்பதை உணர்ந்து தேவனின் மகத்துவ வல்லமைகள் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுச் சொல்லி நினைவுகூறுகிறான்.
1. தேவனுடைய வல்லமைக்கு எதிராக எந்த மனித வல்லமையும் செயல்பட முடியாது (வச.13-14).
2. முற்பிதாக்களாகிய யாக்கோபு, யோசேப்பு இவர்கள் வாழ்க்கையில் தேவன் மீட்கும் தேவனாகவே செயல்பட்டார் (வச.15).
3. இயற்கை சக்திகளெல்லாம் தேவனுக்கு முன்பாக அடங்கி அமர்ந்தது (வச.16-19).
"அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்' மத்தேயு 5:27 என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்தும் சீடர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
4. மந்தையின் நல் மேய்ப்பன் (வச.20)
கடைசியாக ஆசாப், தேவன் தங்களை தங்களுடைய முற்பிதாக்களாகிய மோசே, ஆரோன் மூலம் ஒரு மந்தையின் நல் மேய்ப்பனாக பாதுகாத்து, பராமரித்து, போஷித்து நடத்திய நன்னாட்களை நினைவுகூர்ந்து நம்பிக்கைக் கொள்கிறான்.
"மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்' (ஏசாயா 40:11).
Author: Rev. Dr. R. Samuel