முக்கியக் கருத்து
- ஆசாபின் புலம்பலுடன் கூடிய ஜெபம்.
- தேவ ஜனம், தேவனுடைய பரிசுத்த ஸ்தலம் சத்துருக்களால் பாழாக்கப்பட்டுள்ளது .சீர்திருத்தப்பட்ட ஜெபம்.
முன்னுரை
இஸ்ரவேல் மக்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் (ஏசாயா 43:21). அவர்களுடைய செழிப்பான தேசமும், அலங்கார ஆலயமும் இஸ்ரவேல் இராஜாக்களால் தேவனுடைய ஆலோசனையின் பேரில் கட்டப்பட்டது (வச.1,2). ஆனால், இஸ்ரவேலர் தங்கள் தேவனை புறக்கணித்தபோது, சத்துருக்களின் கையில் தேவன் இஸ்ரவேலரை ஒப்புக்கொடுத்தார். பாபிலோனிய ராஜா தேசத்தைப் பாழாக்கி, ஆலயத்தை இடித்துப் போட்டான் (யாத்.25). இது தேவனால் வந்த தண்டனையே. இதினின்று தங்கள் தேசத்தை மீண்டும் விடுவிக்கும்படி, தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தினிமித்தமும், தமது சொந்த நாமத்தின் மேன்மையினிமித்தமும் தமது ஜனத்தையும், தேசத்தையும், ஆலயத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப ஆசாப் செய்யும் ஜெபம்.
1. தேவன் தெரிந்துகொண்ட ஜனம் தள்ளப்பட்டது (வச.1-2)
தேவன் தாமே தமக்கென்று மீட்டுக்கொண்ட தமது ஜனத்தை (யாத்.15:13, 1 கொரி.6:20) அவரே தள்ளிவிட்டார்.
"தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்' (வச.1) என்று ஆசாப் புலம்புகிறான். கிருபை கூர்ந்து நீர் வாசம் செய்த ஆலயத்தையும், உமது சுதந்திரமான கோத்திரங்களையும் நினைத்தருளும் என்று ஜெபிக்கிறான் (வச.2).
2. சத்துரு பாழக்கின தேவ ஜனமும், ஆலயமும் எதுவரைக்கும் நீடிக்கும்? (வச.3-11)
ஆசாப் தேவனிடத்தில் அங்கலாய்த்து, முறையிட்டு கேட்கும் கேள்வி இந்த வசனங்களில் கொட்டப்பட்டுள்ளது. தேவனுடைய அலங்காரமான ஆலயத்தில் சத்துரு தனது சேனையின் கொடியை நாட்டி, முற்றிலும் ஆலயத்தை சுட்டெரித்துப் போட்டான் (வச.3,4). பரிசுத்த ஸ்தலத்தை தகர்த்துப் போட்டான். எங்களுக்கு எந்த ஒரு அடையாளமும், எங்கள் தீர்க்கதரிசிகளும் இல்லாமல் ஆக்கிப்போட்டான் (வச.9). அது மாத்திரமல்ல, எங்களையும் இல்லாமல் ஆக்கிப்போட்டு, தேவனே, உமது மகத்துவமான நாமத்தையும் நிந்திக்கிறான் (வச.8,10). இது எது வரைக்கும் நீடிக்கும்? தேவனே நீர் ஏன் கிரியை செய்யாமல் இருக்கிறீர்? நீர் சத்துருவை நிர்மூலமாக்கும் (வச.10,11) என்று ஆசாப் புலம்பி முறையிட்டு ஜெபிக்கிறான். இந்த பாழ்க்கடிப்பு, பாபிலோன் இராஜாவாகிய நேபுகாத்நேச்சார் மூலம் நடந்தது. இதற்குக் காரணம் தேவ ஜனம் தேவனை புறக்கணித்ததே என்பதை 2 நாளாகமம் 36:14 -21 ஆம் வசனங்களில் நாம் வாசிக்கலாம். தானியேல் 9:2,3 விசுவாசிகளாகிய நாமும் கூட, நம்மை மீட்டுக்கொண்ட கர்த்தரை விட்டு விலகிப்போவோமானால் நமக்கும் நமது வாழ்க்கையில் பாழ்க்கடிப்புகள் வரும். "தேவனுடைய நல்வார்த்தையையும் ... ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள் மறுபடியும் ... புதுப்பிக்கிறது கூடாதகாரியம்' (எபிரெயர் 6:5-6).
3. தேவனே உமது வல்லமையினிமித்தம் எழுந்தருளும் (வச.12-23)
தேவன் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு செய்த அதிசயங்கள் நிமித்தம் மாத்திரமல்லாது, பூமியனைத்திலும் பூர்வ கால முதல் இரட்சிப்பின் வல்ல கிரியை செய்து (வச.12) வருகிறபடியால் சத்துருவின் இந்த இழிச்செயலை இனியும் பொறுக்காமல் தேவன் கிரியை செய்யவேண்டும் என்பது ஆசாபின் ஜெபம். விசேஷமாக, தேவன் தமது ஜனத்திற்கு செய்த வல்லமையான காரியங்களை ஒவ்வொன்றாய் ஆசாப் நினைவுபடுத்துவதைப் பார்க்கிறோம். செங்கடலைப் பிளந்த தேவன், கடலின் அடியிலிருந்த பிசாசின் தலையை நொறுக்கி சமுத்திரத்தை வெட்டாந்தரையாக்கி (வச.13) தமது ஜனத்தைக் கடக்கப்பண்ணினார் என்று யாத்.14:21 இல் நடந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறான். மேலும் இஸ்ரவேல் ஜனத்தை வனாந்திரத்தில் நடத்தியபோது பகலில் மேகஸ்தம்பமும், இரவில் அக்கினித் தூண்கள் மூலமும் வெளிச்சம் காட்டி, அவர்களுக்குத் தேவையான உணவும், இறைச்சியும், தண்ணீரும் கொடுத்து போஷித்து நடத்திய அற்புத செயல்கள் அனைத்தையும் (வச.14-15) விவரிக்கிறார். அது மாத்திரமல்ல, தமது ஜனத்தோடே அவர் செய்த நித்திய உடன்படிக்கைகளையும் நினைவுபடுத்துகிறான் (ஆதி.6:18). தேவ ஜனத்தோடே மாத்திரமல்ல பூமியின் எல்லையெங்கும் தேவனுடைய வல்லமையான கிரியைகள், ஏழை எளியவர்களை துன்மார்க்கர், சத்துருக்கள் கைகளினின்று பாதுகாக்கும் செயலை நினைவுபடுத்தி, இப்பொழுது "தேவனே, எழுந்தருளும், ...' (வச.22) என்றழைத்து எளிமையான நாங்கள் மீண்டும் "உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும்' (வச.21) என்று ஆசாப் ஜெபிக்கிறான். தேவனை புறக்கணித்த நிலையில் இருப்பவர்கள் மீண்டும் அவரிடம் மனந்திரும்பி வந்தால், நிச்சயம் அவர் இரக்கம் பாராட்டி, இரட்சிப்பார்.
Author: Rev. Dr. R. Samuel