36:14 ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.
36:15 அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
36:16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
36:17 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
36:18 அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
36:19 அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.
36:20 பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.
36:21 கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.