முக்கியக் கருத்து
- தேவன் தாவீதுக்கு அருளிய வாக்குத்தத்தம்.
- உன் சந்ததி என்றைக்கும் நீதியாய் அரசாளும் என்பதன் நிறைவேற்றம் - சாலமோன், இயேசு கிறிஸ்து மூலம்.
முன்னுரை
தாவீதினுடைய உண்மை, பக்தி இவற்றினிமித்தம் தேவன் தாவீதுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தார். உனக்குப்பின் உன் குமாரன் என்றென்றைக்கும் நீதியாய் அரசாளுவான் என்பதே. இந்த வாக்குத்தத்தம் 2 சாமுவேல் 7:12,16 ஆம் வசனங்களில் வாசிக்கிறோம். இந்த வாக்குத்தத்தம் எழுத்தின்படி தாவீதின் குமாரனாகிய சாலொமோனிலும் ஆவிக்குரிய பிரகாரமாக தாவீதின் குமாரன் என்றழைக்கப்படும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலும் நிறைவேறுகிறது.
தேவனை முழுமனதாய் நேசித்து முழுபலத்துடன் அவரை பின்பற்றி அவர் வழிகளில் நடந்தால், நம் சந்ததியையும் கர்த்தர் தலைமுறை தலைமுறையாய் ஆசீர்வதிப்பார் என்பது நிச்சயம்.
1. தாவீதின் ஜெபம் (வச.1,20)
தேவன் தனக்காகக் கொடுத்த இந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படியாக தேவனிடம் பணிவாக தாவீது மன்றாடி ஜெபிக்கிறான். கர்த்தர் நமக்கு அநேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ள நாம் ஜெபிக்கவேண்டியது தேவ சித்தமாயிருக்கிறது.
"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; ...' என்று தான் மத்தேயு 7:7 இல் ஆண்டவர் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
தாவீது தேவன் தனக்கு வாக்குப்பண்ணியபடி தனது குமாரன் நீதியாகவும், நியாயமாகவும், எளியோரைக் கனிவுடனும் அரசாண்டு, இடுக்கண் செய்கிறவர்களைத் தண்டித்து பூமியின் எல்லையெங்கும் தனது அரசாட்சியைப் பரப்பவேண்டும் என்று வேண்டிக்கொள்வதைப் பார்க்கிறோம். தனது குமாரனுக்கு பூமியின் இராஜாக்கள் பரிசுகளை கொண்டுவந்து வாழ்த்த வேண்டும் என்றும் ஜெபிக்கிறான். இந்த ஜெபம் சாலொமோன் அரசாண்டபோது நிறைவேறினாலும்கூட, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் முற்றிலும் நிறைவேறும் தீர்க்கதரிசன வார்த்தைகளாகும்.
"உம்முடைய ராஜ்யம் வருவதாக; ...' மத்தேயு 6:10 என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபிக்க கற்றுக்கொடுத்ததற்கு ஏற்ப, தாவீது தனது குமாரன் மூலம் தேவனுடைய ராஜ்ஜியம் எப்படியெல்லாம் இப்பூமியில் அரசாளப்படவேண்டும் என்பதை விவரித்து ஜெபிப்பதை பின்வரும் வசனங்களில் நாம் தியானிக்கும்போது தாவீதுக்கு தேவநீதி நியாயத்தின்மேல் இருந்தப் பற்று விளங்குகிறது. விசுவாசிகளாகிய நமக்கும் அந்த உள்ளான பற்று இருக்கிறதா என்று யோசிப்போமா?
2. தேவனுடைய ராஜ்ஜியத்தின் தன்மைகள் (வச.2-17)
1. ஏழைகளும், சிறுமையானவர்களும் நீதியையும் நியாயத்தையும் பெறுவார்கள் (வச.2-4, 12-14) ஏசாயா 11:1-9.
2. சூரியன், சந்திரன் உள்ள வரைக்கும் அவருடைய ராஜ்ஜியம் நீடித்திருக்கும் (வச.5), தானியேல் 2:44, லூக்கா 1:33.
3. அவர் ஆளுகையில் பூமி செழித்திருந்து, தனது முழு பலனையும் கொடுக்கும் (வச.6,16) ஏசாயா 35:1-10
4. அவர் ஆளுகையில் நீதி நிலைநிற்கும் (வச.7).
5. பூமியின் எல்லைகளெல்லாம் அவருடைய அரசாட்சியிலிருக்கும். சகல இராஜாக்களும் அவருக்கு காணிக்கைகளையும், பரிசுகளையும் கொண்டுவருவார்கள் (வச.8-11), 1 இராஜா.10:1-15, சகரியா 14:9-21.
6. அவர் ஆளுகையில் அவர் வணங்கப்படுவார் (வச.15) ஏசாயா 2:2, மல்கியா 1:11.
7. அவர் ஆளுகையில் நித்திய தலைமுறையாக ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (வச.17), வெளி.11:15.
8. மேசியாவின் நித்திய ராஜ்யத்திற்காக அவருக்குத் துதி (வச.18, 19)
இப்படிப்பட்ட மகா மகத்துவமாக கனிவோடும், நீதியோடும், செழிப்போடும் இப்பூமியை அரசாளப்போகும் நித்திய இராஜாவாகிய தாவீதின் குமாரனும் (மத்தேயு 1:1) தேவனுடைய குமாரனுமாகிய (மாற்கு 1:1) இயேசு கிறிஸ்துவுக்கு பூமியெங்கும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று நாம் தாவீதுடன் சேர்ந்து சொல்லி அவரை துதித்து வணங்கிஆராதிப்போமா! ஆமென்.
ஆபகூக் 3:3, 2 பேதுரு 3:18
Author: Rev. Dr. R. Samuel