சங்கீதம் 7- விளக்கவுரை

முக்கிய கருத்து :

 - தாவீதின் சத்துருக்கள் தீமை செய்த போதிலும், தாவீது பதிலுக்கு தீமை செய்யவில்லை.
 - தன்னை துன்பப்படுத்தும் சத்துருக்களிடமிருந்து இரட்சிக்குமாறு கர்த்தரிடம் தாவீது செய்யும் ஜெபம்.

1. தாவீதின் தேவன் 

தாவீது தேவனை, "என் தேவன்' என்று அழைத்து தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான் (வச.1). நீதியுள்ள தேவன் செம்மையான இருதயமுள்ள நீதிமானை இரட்சிக்கும்படியும் துன்மார்க்கனை நியாயந்தீர்க்கும்படியும் தாவீது மன்றாடுவதை பார்க்கிறோம் (வச.6-11). பேதுரு அப்போஸ்தலன். 
"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள்  வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது'  என்று 1 பேதுரு 3:12 இல் எழுதியிருக்கிறார்.
ஆனாலும், துன்மார்க்கன் மனந்திரும்பாத பட்சத்தில் மாத்திரமே கர்த்தர் தண்டிப்பார் (வச.12).   "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்'  என்று மாற்கு 16:16 ஆம் வசனத்திலும் வாசிக்கிறோம்.

2. தாவீதின் சத்துருக்கள்

சிங்கம் போல சத்துருக்கள் தன்னை வேட்டையாடுகிறார்கள் என்று தாவீது கூறுகிறார் (வச.2). சவுல் ராஜாவும் தாவீதின் குமாரனாகிய அப்சலோமுமே தாவீதின் எதிரிகளாக இருந்து அவனை அழிக்க விரும்பினார்கள்  (1 சாமு.26:1-3; 2 சாமு.15,16 அதி.).

ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இது உண்மையாயிருக்கிறது. 
"... உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்'  என்று 1 பேதுரு 5:8-இல் வாசிக்கிறோம்.
(வச.15,16)-இல் தாவீதின் சத்துருக்கள் தாங்கள் தாவீதுக்கு எத்தனம் செய்த அழிவைத் தாங்களே சந்தித்தார்கள் என்று எழுதியிருப்பதைப்போல, சவுல் தாவீது இல்லாமல் பெலிஸ்தியரோடு போரிட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டான் (1 சாமுவேல் 31 ஆம் அதிகாரம்). அப்சலோமும் தாவீதுக்கு எதிராகத் தொடுத்த யுத்தத்தில் தானே கொல்லப்பட்டான் (2 சாமுவேல் அதி.18).

"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், ...' (ஏசாயா 54:17).

ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தம் உண்மையானது என்பதில் சந்தேகமில்லை.

3. தாவீதின் சாட்சி

தான் சமாதானமாய் இருந்தபோது தனக்குத் தீமை செய்த தன் சத்துருக்களுக்கு தான் பதில் தீமை செய்யவில்லையென்று தாவீது தனது நியாயத்தை நிலைநிறுத்துகிறான் (வச.3,4,5).

சவுல் தாவீதை கொல்ல பலமுறை முயற்சித்தான். ஆனால் தாவீதுக்கு சவுலை கொல்ல நல்ல தருணம் கிடைத்தபோதும் 
"... என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே' என்று 1 சாமு.24:10-இல் தாவீது கூறி சவுலைக் கொல்லாமல் விட்டுவிட்டான். அதேபோல அப்சலோம் தனது தகப்பனாகிய தாவீதுக்கு விரோதமாக இரக்கமின்றி கையெடுத்தபோதும், அப்சலோம் யுத்தத்தில் கொல்லப்பட்ட செய்தி கேட்டவுடனே தாவீது, 
"... என் மகனாகிய அப்சலோமே, ... நான் உனக்குப்பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்' 
 என்று 2 சாமு.18:33-இல் சொல்லி அழுகிறான்.
"பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது'  என்று உபாகமம் 32:32-இல் சொல்லப்பட்ட கர்த்தருடைய கட்டளைக்கு இணங்க தாவீது தனது சத்துருக்களுக்குக் கர்த்தரே பதிலளிக்குமாறு ஜெபிக்கிறான். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும்கூட, 
"... உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; ... உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; ...' என்று மத்தேயு 5:44 ஆம் வசனத்தில் ஒவ்வொரு விசுவாசிக்கும் கட்டளையிட்டிருக்கிறார்.

Author: Rev. Dr. R. Samuel



Topics: Tamil Reference Bible Psalm

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download