முக்கியக் கருத்து
- தேவ ஜனத்தை தேவன் ஆசீர்வதிப்பதன்மூலம் பூமியின் குடிகள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்.
- தேவன் மீண்டும் இந்த பூமியை சீர்ப்படுத்தி அது தன் முழு பலனைத் தரும்படி செய்வார்.
1. தேவ மக்கள் ஆசீர்வதிக்கப்படுதலின் நோக்கம் (வச.1-3)
தேவன் தாம் தெரிந்துகொண்ட ஜனங்களை ஆசீர்வதிப்பதன் நோக்கம், அவர்கள் மூலமாக பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படவேண்டும் என்பதே.
"... எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், தேவரீர் ..., எங்களை ஆசீர்வதித்து, ...' (வச.1,2) இல் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தேவன் ஆபிரகாமை அழைத்தபோது, "நான் ... உன்னை ஆசீர்வதித்து, ... பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்' (ஆதியாகமம் 12:2,3).
இஸ்ரவேல் மக்களை தேவன் தமது சொந்த ஜனமாக தெரிந்துகொண்டதன் நோக்கம், யேகோவா தேவன் அவர்களுக்குள் செய்த மகத்தான கிரியைகளை உலகத்தின் ஜாதிகள் கண்டு அவரே மெய்யான ஒரே தேவன் என்று அறிந்து கொள்வதற்காகத்தான்.
"இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்' என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் ஏசாயா 43:21 இல் யேகோவா தேவன் திருவுளம்பற்றினார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் இந்தப் பூமியில் திருச்சபையை ஸ்தாபித்து, விசுவாசிகளாகிய நம்மை இரட்சித்ததன் நோக்கம் பூமியில் உள்ள அனைத்து ஜாதிகளும்,தேசங்களும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை அன்புக்கொண்டு அவரைத் துதிக்க வேண்டும் என்பதே. இந்த தெளிவான நோக்கத்தை எபேசியர் 3 ஆம் அதிகாரத்தில் பவுல் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
"... பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற
... இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக' (எபேசியர் 3:14,15,21).
"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்' (1 தீமோத்தேயு 2:4).
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ...' (மத்தேயு 28:19).
இந்த வசனங்களின் மூலம் கர்த்தர் திருச்சபையை ஸ்தாபித்து, நம்மை இரட்சித்து ஆசீர்வதித்துள்ளதின் நோக்கம், நம் மூலம் பூமியின் சகல ஜாதிகளும் இரட்சிக்கப்படவேண்டும் என்பதை ஒவ்வொரு விசுவாசியும் தீர்க்கமாக தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே,
"... நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, ... ஜாக்கிரதையாயிருங்கள்' என்று எபேசியர் 4:1,2,3 வசனங்களில் பவுல் வேண்டுதல் விடுக்கிறார்.
2. மீண்டும் பூமி தனது முழு பலனைத் தரும் (வச.4-7)
இவ்விதமாக திருச்சபை தன் பணியை ஆற்றும்போது, தேவன் இந்த பூமியிலுள்ள ஜாதிகளில் ஒரு பெருங்கூட்ட மக்களை
இரட்சிப்பார். ஏதேன் தோட்டத்தில் முதல் ஆதாமினால் வந்த சாபத்தை இரண்டாம் ஆதாமாகிய இயேசுகிறிஸ்து மாற்றினார். (ரோமர் 5:15-21). தனது முழுப்பலனையும் கொடுக்க முடியாமலிருக்கிற இந்த பூமியை மீண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது ஆயிர வருட அரசாட்சியில் "பூமி தன் பலனைத் தரும், ...' (வச.6) என்ற நிலைக்குக் கொண்டு வருவார். அப்போது, "சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்கள்' (வச.5). பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும் (வச.7)
என்ற உன்னதமான நிலமைக்கு இந்த பூமி திரும்பும். இந்த காரியங்களை தீர்க்கதரிசியாகிய ஏசாயா, ஏசாயா 11 ஆம் அதிகாரம் முழுவதிலும் மிக இனிமையாக தெளிவாக எழுதியிருப்பதை நாம் வாசித்துத் தெரிந்துகொள்ளலாம்.
Author: Rev. Dr. R. Samuel