முக்கியக் கருத்து
- தாவீதுக்கு தேவன் பல வெற்றிகளை தந்தபோது பாடிய பாடல்.
- இஸ்ரவேலரை தேவன் தள்ளிவிட்டிருந்த நாட்கள் நினைவு கூறப்படுகிறது.
- மனித உதவியினாலல்ல தேவனே தமது வாக்குத்தத்தத்தின்படி இஸ்ரவேலருக்கு சுதந்திரம் கொடுக்கமுடியும்.
1. தாவீது தனது சத்துருக்களாகிய பெலிஸ்தியர், மோவாபியர், சீரியர் போன்றவர்கள்மேல் பெற்ற வெற்றி கர்த்தரால் மாத்திரமே வந்தது என்பதை தெரிவிக்கும்போது, தனக்கு திடீரென கிடைத்த தோல்வி அல்லது சத்துருவின் கை மோலோங்குவதற்குக் காரணம் தேவன் இஸ்ரவேலரை கைவிட்டதினால் தான் என்று (வச.1-3) வரை கூறுவதைப் பார்க்கிறோம்.
தேவ ஜனம் தேவனைவிட்டு விலகிப்போன நாட்களில் கர்த்தர் அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை மேற்கொள்ளவிட்டார். ஆனாலும், தம்மிடம் மனந்திரும்பி வந்த போதோ மீண்டும் வெற்றியைக் கொடுத்தார் (வச.4).
"தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். ...' என்று புதிய ஏற்பாட்டில் யாக்கோபு 4:8 ஆம் வசனத்திலும் வாசிக்கிறோம்.
நம்முடைய வாழ்க்கையில் தேவனைவிட்டு தூரம் போகும் சூழ்நிலையில் பல தோல்விகளை நாம் சந்திக்க நேரிடும்.
தேவனே நமக்கு வெற்றியைத் தருகிறவர் என்பதை விசுவாசிகள் மறந்து போகக்கூடாது.
தேவனிடம் நாம் திரும்பி வரும்போது, தேவன் நமது சத்துருக்களுக்கு எதிராக வெற்றிக்கொடியை ஏற்றுவார் என்று
ஏசாயா 59:19 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
2. இஸ்ரவேல் மக்களுக்கு கர்த்தர் தாம் அழைத்துக் கொண்டுவந்த பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் யோசுவா
தலைமையில் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சுதந்திரவீதமாக பங்கிட்டு கொடுத்ததை யோசுவா 11,12,13 ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறோம். சீகோம், சுக்கோத், கீலேயாத் போன்ற செழிப்பான தேசங்களைக் கர்த்தர் வாக்குத்தத்தமாக கொடுத்திருந்தாலும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் கீழ்ப்படியாமையினாலே இழந்துபோன சூழ்நிலைகள் வந்தது. ஆனாலும்
தாவீது ராஜாவின் நாட்களில் அவற்றைத் திரும்ப பெற்றுக்கொண்டார்கள் (வச.5-7).
பெலிஸ்தியாவையும், மோவாபையும் கூட தாவீது கீழ்ப்படுத்தி பெற்ற வெற்றியை (வச.8) இல் வாசிக்கிறோம்.
2 சாமுவேல் 8:1,2 வசனங்களில் இவை எழுதப்பட்டுள்ளது.
3. இக்கட்டு நேரங்களில் மனிதர் உதவி அற்றுப் போகும் சூழ்நிலையில் நிச்சயமான மாறாத உதவி கர்த்தரே கொடுப்பார்.
தேவனால் நாம் பராக்கிரமமுள்ள காரியங்களை செய்து சத்துருக்களை முறியடிப்போம் என்று தாவீது தனது அசையா நம்பிக்கையை தனது அனுபவ ரீதியாக உணர்ந்து இந்த சங்கீதத்தை முடிக்கிறார்
"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்'
(1 கொரிந்தியர் 15:57).
சரணம்
1. இக்கட்டில் மனிதர் உதவி
இல்லாமலே அற்றுப்போனாலும்
எனக்கொத்தாசையே தினம் தப்பாமலே
ஏசு நாமத்தில் கிடைத்திடுமே.
பல்லவி
எந்த நேரமும் எப்போதுமே
ஏசு எனக்கு ஒத்தாசை
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
Author: Rev. Dr. R. Samuel