முக்கியக் கருத்து
- தேவனை வெற்றி சிறந்த, என்றென்றைக்கும் அரசாளுகிற இராஜாவாக போற்றி பாடும் சங்கீதம்.
- கடைசி கால தீர்க்கதரிசனங்கள் (கோராகின் புத்திரரின் பாடல்).
வச.1 - தேவ மக்கள் தேவனை மகிழ்ச்சியோடு கெம்பீரமாக கைக்கொட்டி துதித்துப் பாடவேண்டும். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே கை கொட்டுவது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக இருந்தது.
"... ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்' என்று 2 இராஜா.11:12. வசனத்திலும்
"... பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்' என்று (ஏசாயா 55:12).வசனத்திலும் வாசிக்கிறோம்.
பல்லவி
சகல தேவ ஜனங்களோ
கைக்கொட்டி கர்த்தரை
கெம்பீரமாய்ப் பாடுவோம்
அனுபல்லவி
அவர் இரட்சிப்பை சுவிசேஷமாக
அகில உலகமெங்கும் சாற்றிடுவோம் - சகல
சரணங்கள்
2. தேவன் உன்னதமானவரே
அவர் மீட்டெடுத்த ஜனமே நாம்
நமக்கோ இது பாக்கியமே
நாம் கர்த்தரை சொந்தமாய் கொண்டதினால் - சகல
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
புதிய ஏற்பாட்டு சபைகளிலும் இவ்விதமாக கைகொட்டி பாடி கர்த்தரை ஆராதிப்பது மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
வச.2,5-7 - நமது தேவன் பூமியின் மீதெங்கும் இராஜாவாக இருப்பதால் அவரைக் கருத்துடனே உண்மையாகப் போற்றிப்பாடி அறிவிக்கவேண்டும்.
"வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக'
(1 நாளாகமம் 16:31).
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தேவன் மனித அவதாரம் எடுத்து இயேசு கிறிஸ்துவாய் ஜீவித்தபோது தம்மை ராஜாவாய் காண்பித்தார். மக்கள் அவரை போற்றித் துதித்தார்கள்.
"... தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்' (மத்தேயு 21:9).
வச.3,4 - பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களுக்கு யேகோவா தேவன் கானான் தேசத்தை மோசே, யோசுவா இவர்களின் தலைமையில் சுதந்திரமாகக் கொடுத்தார் என்று யோசுவா 21:43-45 இலும், நெகேமியா 9:7-8 வசனங்களிலும் வாசிக்கிறோம்.
புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவின் சபையாகிய விசுவாசிகளுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது ஆயிர வருட அரசாட்சியில் இப்பூமியை ஆள சுதந்திரமாக கொடுப்பார் என்பதை ஏசாயா 35:1,2,10இல் தீர்க்கதரிசனமாகவும் வெளி.2:26,27இல் வெளிப்பாடாகவும் கூறப்பட்டிருக்கிறது.
"ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ ... அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; ...' வெளி.2:26,27
வச.8 - பூமியில் கொடுமைகள் அநியாயங்கள் நடந்தாலும் நாம் சோர்ந்துபோகவேண்டிய அவசியமில்லை. நமது தேவன் சதாகாலங்களிலும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.
"நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்;'(தானியேல் 7:9).
"நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்' (வெளி.3:21).
வச.9 - ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் கிறிஸ்துவின் மூலம் புறஜாதிகளாகிய நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று (கலாத்தியர் 3:14) இலும், ஆபிரகாமின் ஆசீர்வாதத்தைவிட மேலான ஆசீர்வாதம் நமக்கு உண்டு என்று (எபிரேயர் 11:10) இலும் வாசிக்கிறோம்.
Author: Rev. Dr. R. Samuel