முக்கியக் கருத்து
- தேவன் தமது ஜனங்களுக்கு செய்த அற்புதங்களைப் பெற்றோர் பிள்ளைகளுக்கு விவரித்தல்.
- தேவன் தமது ஜனத்தை கைவிட்ட நிலையின் குழப்பம்.
- தேவன் தமது ஜனத்தை மீண்டும் மீட்டெடுக்கிறவர்.
இது ஒரு கோராகின் புத்திரர் பாடிய சங்கீதம்.
1. பூர்வ நாட்களில் தேவனின் ஆசீர்வாதம் (வச.1-8)
இஸ்ரவேலருடைய பிள்ளைகள் தங்கள் பெற்றோர் கூறிய சாட்சிகளினிமித்தம் சந்தோஷ அறிக்கை செய்கிறார்கள். தேவன் இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் அவர்களுடைய சத்துருக்களாகிய புறஜாதிகளைக் கீழே விழுத்தாக்கி, துன்பப்படுத்தி, விரட்டி
னார். தமது ஜனமாகிய இஸ்ரவேல்மேல் பிரியமாயிருந்து தேசங்களைச் சுதந்திரமாகக் கட்டிக்கொள்ளச் செய்தார். இதினிமித்தம் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுய பெலத்தில் நம்பிக்கை வைக்காமல் தேவன் பேரிலேயே முழுதுமான நம்பிக்கை வைத்தார்கள். தேவனை என்றென்றைக்கும் துதித்தார்கள். ஏசாயா 59:17-21
(சேலா) இங்கே சற்று நிறுத்திய தியானித்து பிறகு தொடர்வோம்.
விசுவாசிகளுக்கும் இப்படிப்பட்ட ஆசீர்வாதமான நாட்களும் தேவன் ஜெயத்தை கொடுக்கும் காலக்கட்டமும் வாழ்நாளில் வரும்போது, தேவனுக்கே மகிமையைச் செலுத்துவேண்டும்.
பல்லவி
ஆச்சரியமே அதிசயமே
ஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம்
சரணங்கள்
1. செங்கடல் இரண்டாய் பிரிந்துபோக
சொந்த ஜனங்களை கடத்தினாரே
இஸ்ரவேலின் துதிகளாலே
ஈன எரிகோ வீழ்ந்ததுவே - ஆச்சரியமே
2. நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரே
தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி நம்மை ஆதரிப்பார் - ஆச்சரியமே
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
2. தற்போதைய அவமதிப்பும் அவமரியாதையும் (வச.9-22)
இஸ்ரவேல் புத்திரருடைய மகிழ்ச்சியும் தங்கள் தேவனுடைய அதிசய கிரியைகளைக் குறித்த சாட்சியும் தற்போது மாறிய
நிலையில் காணப்படுகிறது. தேவன் இப்போது அவர்களைக் கைவிட்டார் என்றும், தங்கள் சத்துருக்களுடன் செய்யும்
யுத்ததிற்கு அவர் வராமலிருக்கிறார் என்றும் கலங்குகிறார்கள். ஜாதிகள் அவர்களை மேற்கொண்டு நிந்திப்பது மாத்திரமல்லாமல் இவர்களுடைய தேவனின் வாக்குத்தத்தங்கள் உறுதியற்றவை என்றும் ஜனங்கள் பரியாசம் செய்வதாக புலம்புகிறார்கள். இவையெல்லாவற்றிலும், இஸ்ரவேல் தேசம் தங்கள் தேவனுக்கு உண்மையாயிருப்பதையும் தெரிவிக்கிறார்கள்.
தங்கள் தேவனைவிட்டு தாங்கள் விலகாத சூழ்நிலையில் ஏன் இப்படிப்பட்ட அவமதிப்பும் அவமரியாதையும் வருகிறது என்று புலம்புகிறார்கள்.உண்மையான தேவ மக்களுக்கு பகைமை நிறைந்த இவ்வுலகத்தில் துன்பங்கள் வரும் என்று வேதம் சொல்லுகிறது. 2 தீமோத்தேயு 3:12, எபிரெயர் 10:32,33 .
ஆனாலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான
மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'
என்று மத்தேயு 5:11 ஆம் வசனத்தில் கூறியிருக்கிறார். விசுவாசிகள் தேவனுக்கு உண்மையாய் நடக்கும்போதும் துன்பங்கள் வரும்போது சோர்ந்துபோகாமல் ஜெபிக்கவேண்டும்.
"உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்;...' என்ற (வச.22) ஐ அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:35,36 இல் சரியாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இவ்விதம் நேர்ந்தாலும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு எங்களைப் பிரிக்க முடியாது என்று உறுதியாகக் கூறுகிறார். நமது சாட்சியும் இப்படி இருக்கிறதா?
3. தேவனுடைய அவசர உதவிக்கு வேண்டுதல் (வச.23-26)
அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுடைய வழிகளில் நடப்போம், அவர் அன்பில் நிலைத்திருப்போம் என்ற உறுதி இருந்தாலும் கூட, தேவனுடைய விடுதலையின் அவசர உதவி தேவைப்படுகிறது. இதற்காக இங்கே ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது.
இந்த ஜெபத்தின் விசுவாச மையம் தேவனுடைய மாறாத கிருபையே என்று (வச.26) இல் கோராகின் புத்திரர் பாடி
முடிக்கிறார்கள். யோவான் 14:1,18; 16:33
Author: Rev. Dr. R. Samuel