முக்கியக் கருத்து:
- தேவனுடைய பிரசன்னத்தில் வெளிச்சமும், இரட்சிப்பும் கிடைக்கிறது.
- சத்துரு தேவபிரசன்னத்திற்குள் நுழைந்து என்னை தாக்க முடியாது.
முழுமனதான நம்பிக்கை
கர்த்தர் என் வெளிச்சமும், இரட்சிப்புமானவர் என் உயிருக்கு பெலன் (வச.1)
இப்படி இருக்கும்போது என்னை சுற்றி வருகிற சத்துருவின் சேனைக்கு நான் பயப்படவேண்டிய அவசியமில்லை.
அவர்களைச் சுற்றி இருள் இருப்பதால் அவர்கள்தான் இடறுவார்கள் (வச.2).
வெளிச்சம் என்று சொல்லும்போது தெளிவு என்று பொருள்படுகிறது. தனது ஆவிக்குரிய ஜீவியத்திலும் மாம்ச ரீதியான உலக வாழ்க்கையிலும் கர்த்தர் தன்னை இரட்சித்து தனது ஆத்துமாவுக்கு பெலன் கொடுத்திருப்பதால் தேவனைப்பற்றிய அறிவு தெளிவு ஒரு தேவ மனிதனுக்கு உண்டாயிருக்கிறது. ஆகவே. தெளிவற்ற இருளில் வாழும் தேவபயமற்ற மனிதனுக்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என்பதை தெளிவுற தாவீது விáக்குகிறார் (வச.1-3).
"... ராஜாவின் ஜெயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. ...
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை;'
என்று எண்ணாகமம் 23:21,22,23 வசனங்களில் வாசிக்கிறோம்.
முழுமனதான வேட்கை
தாவீது தேவனுடைய ஆலயத்தில், தேவனுடைய பிரசன்னத்தில் அடைக்கலமாக தங்கியிருப்பதையும், அங்கே தேவனைப் பற்றியும் அவருடைய வார்த்தைகளையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் தேவனுடைய மகிமையை காண்பதையும் விரும்புகிறான். ஒரு விசுவாசி, அதிகமாக தேவனுடைய வார்த்தைகளை தியானிப்பதன் மூலமாகத்தான் தேவனையும் அவருடைய மகிமையையும் காணமுடியும் (வச.4).
"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே'
என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யோவான் 5:39 ஆம் வசனத்தில் கூறியுள்ளார்.
அவ்விதமாக தேவனுடைய ஆலயத்திற்குள் தங்கி இருக்கும்போது, சத்துரு உட்புக முடியாது.
"தீங்குநாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து, ... ஒளித்துவைத்து, ...' (வச.5) என்று தாவீது கூறுகிறார். நான் கர்த்தருக்கு சந்தோஷமாக ஆனந்த பலிகளைச் செலுத்துவேன் என்று (வச.6) இல்
மகிழ்ச்சியாய் அறிவிக்கிறான் தாவீது.
கைவிடப்பட்ட சூழ்நிலையிலும் பாதுகாப்பு
தனக்குக் கைவிடப்பட்ட சூழ்நிலைகள் வந்தாலும்கூட தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படி பாதுகாப்பு அருளவேண்டுமென்று தாவீது ஜெபிக்கிறான்.
"என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,' என்று (வச.8) இல் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் தனக்கு வரும் எதிர்பாராத சூழ்நிலைகளில் தான் கூப்பிடும்போது கர்த்தர் தனக்கு செவிகொடுக்க ஜெபிக்கிறான். தாய் தகப்பன் தன்னை மறக்கும் சூழ்நிலை, எதிராளிகள் தன்னை சுற்றி வளைக்கும் சூழ்நிலை, பொய்சாட்சி கள் தனக்கு விரோதமாக ஆக்கிரமித்து சீறும் சூழ்நிலை (வச.10-12). எல்லாவற்றிலுமிருந்து தேவன் தனக்கு பாதுகாப்பு கொடுக்க ஜெபிக்கிறான். ஆகவே, திடமனதாயிருந்து, விசுவாசத்தோடே கர்த்தருக்கு அவர் விடுதலை அருளும் நேரத்திற்குக் காத்திருந்ததால்,
"...ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்' (வச.13) என்று தாவீது அறிக்கையிடுகிறான்.
"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை' என்று ஏசாயா 49:15 ஆம் வசனத்தில் கர்த்தருடைய ஆவியானவர் அருளிய வாக்குத்தத்தத்தை முழுதுமாய் விசுவாசித்து அனுபவித்த தாவீதைப்போல நாமும் அனுபவிப்போமா?
Author: Rev. Dr. R. Samuel