முக்கியக் கருத்து :
- கர்த்தர் வாழ்வில் குறைவில்லாமல் பார்த்துக் கொள்வார்.
- கர்த்தர் வழியில் வரும் பயங்கரங்களினின்று காப்பார்.
- நீடித்த வாழ்வைக் கொடுப்பார்.
1. வச.1 தாவீது கர்த்தரை மேய்ப்பராக பார்த்தான். இஸ்ரவேலர் அனைவருமே கர்த்தரை தங்களுக்கு மேய்ப்பராகப் பார்ப்பது அவர்களுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது.
"இஸ்ரவேலின் மேய்ப்பரே, ... செவிகொடும்' (சங்கீதம் 80:1).
"மேய்ப்பனைப்போல தமது மந்தையை ... நடத்துவார்' (ஏசாயா 40:11)
என்றும் யேகோவா தேவன் அழைக்கப்பட்டார்.
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறபடியால் நான் தாழ்ச்சியடையேன் என்ற நம்பிக்கையும், வாழ்க்கையில் தாழ்ச்சியடையாத நிலை வேண்டுமானால் கர்த்தர் மேய்ப்பராக இருக்க வேண்டும் என்றதுமான தாவீதின் கருத்து இந்த வசனத்தில் விளங்குகிறது.
கர்த்தர் நம் மேய்ப்பராக இருந்தால் நாம் அவருடைய சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படியவேண்டும். அந்நிய சத்தங்களுக்குச் செவிகொடுத்தால் தாழ்ச்சியடைந்துவிடுவோம்.
"வாசல்வழியாய் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான் ... ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. ... அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம்' (யோவான் 10:2-5).
2. 1 முதல் 3 வசனம் வரை தாவீது தனது நம்பிக்கையை மற்றவர்களுக்கு அறிவிக்கிறான். 4 முதல் 5 வசனம் வரை தாவீது தனது நம்பிக்கையை கர்த்தரிடமே அறிவிக்கிறான். 6வது வசனத்தில் கர்த்தர் மீதுள்ள தனது நம்பிக்கையை தனக்கே சொல்லிக் கொண்டு விசுவாச அறிக்கை செய்கிறான்.
3. வச.2,3 இவற்றில் கர்த்தர் தன்னை புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீர்களண்டையிலும் நடத்தி தன்னை பரிபூரண ஆசீர்வாதங்களினால் நிரப்பி, சமாதானம் அமைதியை தருகிறார் என்றும், நீதியின் பாதையில் நடத்துகிறார் என்றும் சாட்சி கொடுக்கிறார். கர்த்தர் தரும் எல்லா ஆசீர்வாதங்களும் நீதியின் வழியால் பெறப்படும். அநீதியான வழியில் எந்த செழிப்பும் தரமாட்டார் என்று தாவீது அறிக்கையிடுகிறார்.
"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், ... அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்' என்று ஏசாயா 32:17,18-இல் கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்திருக்கிறார்.
4. வச.4 தாவீது தான் மேய்ப்பனாக ஆடுகளை நடத்திச் சென்றபோது தன் தேசத்திலிருந்த பல இருண்ட பள்áத்தாக்குகளுள்ள வழியில் சென்ற போதும் கர்த்தர் தன்னுடன் இருந்ததால் பயப்படவில்லை என்ற அனுபவ சாட்சியை இந்த வசனத்தில் கூறி இருக்கிறான். ஆகவே, தான் ஒருமுறை சிங்கமும் மற்றொரு முறை கரடியும் வந்தபோது பயப்படாமல் அதை கொன்று தன் ஆடுகளை காப்பாற்றியதாக தாவீது சவுல் இராஜாவிடம் சொன்னான். கர்த்தருடைய கோல்தன்னை எதிர்க்கும் சத்துருவை விரட்டவும். அவருடைய வளை தடி தான் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும்போது தன்னை மெதுவாக மீட்டெடுக்கவும் உபயோகப்படுத்தி ஒரு நல்ல மேய்ப்பனைப்போல கர்த்தர் தன்னை நடத்துவார் என்கிறான் தாவீது.
5. வச.5 தாவீது அப்சலோமுக்கு பயந்து தன்னுடன் தனது சேவகரை அழைத்துக் கொண்டு வனாந்திரத்திற்கு ஓடிச் சென்றபோது, பசியும், இளைப்பும், தவனமுமாக இருந்த அவர்களுக்கு கர்த்தர் ஒரு பெரிய பந்தியை அந்த வனாந்திரத்தில் ஆயத்தப்படுத்திக் கொடுத்தார் என்பதை 2 சாமுவேல் 17:27,28,29 ஆம் வசனங்களில் வாசிக்கிறோம். அந்த அனுபவ சாட்சியினிமித்தம் தாவீது 5ஆம் வசனத்தில், கர்த்தர் தனது சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்தி தன்னைப் பாதுகாப்பார் என்று கூறுகிறான். நம்மையும் கூட பயங்கர சத்துருக்கள் சூழ்ந்திருக்கும்போது, நம் தேவைகளை சந்தித்து நிறைவாய் வேண்டியவற்றை அளித்துப் பாதுகாப்பார்.
6. வச.6 உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தர் நன்மையையும் கிருபையையும் கொடுத்து, அதற்குப் பிறகு நித்திய ஜீவனையும் பரலோக இராஜ்ஜியத்தில் கொடுப்பார் என்று சொல்லி தாவீது சங்கீதத்தை இனிமையாக முடிக்கிறார்.
"இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், ... பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்' (1 கொரி.15:19).
Author: Rev. Dr. R. Samuel