முக்கியக் கருத்து :
- மேசியா கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளும் அவர் பிதாவிடம் ஏறெடுத்த ஜெபங்களும்.
- சிலுவைப்பாடுகள் மூலம் பெற்ற வெற்றியால் வரும் மேன்மைகள்.
இது ஒரு சிலுவையின் சங்கீதம்.
1. தாவீது ஒரு தீர்க்கதரிசி. மேசியா கிறிஸ்து இந்த உலகத்தில் உதித்து மனுக்குல மீட்புக்காக தம்மையே சிலுவையில் பலியாக செலுத்தினபோது அவர் அனுபவித்த பாடுகளையும், அந்த மகாவேதனை நேரத்தில் பிதாவாகிய தேவனிடம் அவர் ஏறெடுத்த ஜெபங்களையும், அவரை சுற்றி நின்றவர்கள் அவரை ஏளனம் செய்து பரிகசித்ததையும் தத்ரூபமாக தாவீது இந்த சங்கீதத்தில் படம் பிடித்துக் காட்டியிருப்பது, தாவீது ஒரு பெரிய தீர்க்கதரிசி என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு சில வசனங்களில் தாவீது, தனது துன்பங்களையும் வேதனைகளையும் கூட இந்த சங்கீதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் விட்டுவிடக் கூடாது. ஆனால் மேசியா கிறிஸ்துவின் மகா கொடிய வேதனைக்கு முன் தாவீதின் துன்பங்கள் மறைந்தே காணப்படுகின்றன.
2. "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?' (வச.1) என்ற வார்த்தைகள்
"ஏலி! ஏலி! லாமா சபக்தானி' (மத்தேயு 27:46) என்று இயேசு சிலுவையில் கதறப்போவதை எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் தாவீது துல்யமாக எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியது. இயேசு தாம் இவ்விதமான கதறிய போதும் தன் தேவனிடமிருந்த நம்பிக்கையும், அவருடைய காக்கும் வல்லமையின் மேல் இருந்த விசுவாசமும் குறையவில்லை. ஆனால், நீர் என் தேவனாக இருந்தும் நான் உம் நேச பிள்ளையாக இருந்தும் எனது இந்த மகா கொடிய நேரத்தில் "ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்பது தான் கேள்வி.
3. வச.2 முதல் 5 வரை தாவீது தனது அனுபவத்தை கூறுகிறார்,
"என் தேவனே, ... கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்' (வச.2) என்பது மேசியாவின் வார்த்தை அல்ல.
மேசியாவுக்கு தேவன் எப்போதும் உத்தரவு கொடுத்துக் கொண்டுதான் இருந்தார் (யோவான் 11-12). தாவீது, தனது முற்பிதாக்கள் கூப்பிட்டபோது தேவன் உத்தரவு கொடுத்து அவர்களுடைய ஆபத்திலிருந்து தப்புவித்ததை எடுத்துக்கூறி, தன்னை அவ்விதமாக விடுவிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறான் (வச.3-5).
4. (வச.6-10) தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக தம்மை தாழ்த்தி பூமியில் வந்து பிறந்தபோதே பிதாவின் சித்தத்தில் தான் வந்தார் என்பதை
"நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;' (வச.9,10) என்று அறிக்கையிடுகிறார்.
"... அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது' மத்.1:20
என்று யோசேப்புக்கு தேவதூதன் சொன்னது இதை உறுதிப்படுத்துகிறது.
தான் தமது சொந்த ஜனங்களால் அவமதிக்கப்பட்டதையும், சாதாரண மனிதனைவிட, பெலனற்ற ஒரு புழுவைப்போல சிலுவையில் கை கால்களில் ஆணிகளடிக்கப்பட்ட தனது உதவியற்ற நிலைமையையும் (வச.6-8) மேசியா பிதாவினிடம் கூறிக்கதறுகிறார். இயேசு சிலுவையில் தொங்கினபோது,
"அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ... தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் ... இவனை இரட்சிக்கக்கூடும்' மத்தேயு 27:39-43
என்ற ஏளன வார்த்தைகள் மேசியாவை நோக்கி கூறிப்பட்டதை தாவீது தத்ரூபமாகக் காட்சியாக எழுதியிருக்கிறான்.
5. (வச.11-17) சிலுவையில் இயேசு முற்றிலும் நொறுக்கப்பட்டு எலும்புகள் எண்ணப்படக்கூடிய நிலையில் இருந்ததை ஒவ்வொன்றாக தாவீது விளக்கியிருக்கிறான்.
"... சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்' 1 யோவான் 2:2 என்று யோவான் எழுதியதின் ஆழமான அர்த்தம் இங்கே விளங்குகிறது. சர்வலோகத்தின் பாவம் அவருடைய இரத்தத்தையும், தண்ணீரையும் தமது சரீரத்திலிருந்து பலியாக வார்த்து விடச் செய்தது . இப்போது அவர் எலும்புகளையும் எண்ணிவிடலாம்.
"போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது' (யோவான் 19:34).
6. (வச.18-21) சிலுவையில் இயேசு தனது சரீரம் கிழிக்கப்படவும் தனது இரத்தம் முழுவதும் சிந்தப்படவும் அளித்தது மாத்திரமல்லாமல் தாம் உடுத்தியிருந்த வஸ்திரத்தையும் தன்னைக் கொலை செய்தவர்கள் எடுத்துக் கொள்ளவிட்டார்.
"அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள்' மத்தேயு 27:35 என்ற நிகழ்வு (வச.18) இல் தாவீது படம்பிடித்துக் காட்டியிருக்கிறான். இப்படி முற்றும் இழந்து உதவியற்ற நிலையில், தன்னைத் தமது சீடர்களும்கூட விட்டு ஓடிய நிலையில் பிதா தனக்கு சகாயம் பண்ணவேண்டும் என்று குமாரன் விண்ணப்பம் செய்கிறார்.
7. (வச.22-31) குமாரனின் விண்ணப்பம் கேட்கப்பட்டது. பிதா குமாரனை எப்போதுமாக கைவிடவில்லை.
"உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் ... தம்முடைய முகத்தை ... மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்' (வச.24) என்று குமாரன் சாட்சியாயிருக்கிறார்.
குமாரனுடைய உபத்திரவத்தின் பலனாக பிதா குமாரனுக்கு இராஜ்ஜியத்தைக் கொடுத்தார் (வச.27,28,29).
பிதாவே இவற்றை வாய்க்கப்பண்ணினார் என்ற சந்தோஷமான வார்த்தைகளோடு 31ஆம் வசனத்துடன் இந்த சங்கீதம் முடிகிறது.
"அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் (நாம்) அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்' (2 தீமோத்.2:12).
Author: Rev. Dr. R. Samuel