முக்கிய கருத்து :
- கர்த்தருக்கு விரோதமாக உலக ஜாதிகள் கொந்தளிக்கிறது.
- பிதாவானவரோ குமாரனுக்கு ராஜ்ஜியங்களின் ஆளுகையை வாக்குப்பண்ணியிருக்கிறார்.
- குமாரனாகிய மேசியாவை பற்றிக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அவரை கோபப்படுத்துகிறவர்கள் அழிவார்கள்.
சங்கீத புத்தகத்தின் இந்த இரண்டாம் அதிகாரத்தை தாவீது எழுதியுள்ளதாக அப்போஸ்தலர் 4:25, 26 ஆம் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வச.-1,2,3 : இந்த உலகத்தின் அதிபதிகளும் இராஜாக்களும் தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய குமாரனாகிய மேசியாவுக்கும் விரோதமாக கலகம் செய்கிறார்கள். யாத்திராகமம் 5:2 ஆம் வசனத்தில் எகிப்தின் இராஜாவாகிய பார்வோன், மோசேயிடம், நான் 'கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?' என்று இறுமாப்பாய் கொக்கரித்தான். அதே போல லூக்கா 7:49 ஆம் வசனத்தில், 'பாவங்களை மன்னிக்கிற இவன் யார்?' என்று கூறி யூத மதத் தலைவர்கள் மேசியா கிறிஸ்துவை நிராகரித்ததையும் வாசிக்கிறோம். ஆனால் இவர்களுடைய எதிர்ப்பு வீணானது என்று (வச.-1,2) இல் வாசிக்கிறோம். உலக சரித்திரத்தில் அநேக இராஜாக்களும், அதிபதிகளும் மதத் தலைவர்களும் கிறிஸ்துவாகிய இயேசுவையும் அவருடைய விசுவாசிகளாகிய கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவ மார்க்கத்தையும் பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். இன்றைய நாட்களிலும்கூட அநேக தேசத்தலைவர்களும், அரசாங்கங்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் புறக்கணித்து இந்த மெய்வழிக்கு எதிராக செயல்பட்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் கிறிஸ்துவின் நற்செய்திக்கும் அருட்பணிகளுக்கும் விரோதமாக எத்தனை சக்திகள் உலகில் அன்று முதல் இன்று வரை எழும்பினாலும், எண்ணற்ற மக்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஒரு பரிசுத்த வாழ்க்கைக்குத் தங்களை நேர்ந்துகொண்டு பரலோக பாக்கியத்தின் நம்பிக்கையுடன் வாழ்வதையும் கிறிஸ்தவ ஆலயங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல பாகங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம்.
வச.4 9 : பிதாவாகிய தேவன் இந்த எதிர்ப்பு சக்திகளை இகழ்ந்து, கீழ்ப்படியாத தேசங்களை தண்டித்து குமாரனாகிய மேசியாவை அவர்களுக்கு மேல் இராஜாவாக அபிஷேகிப்பார். இதன் விளைவாக இந்த நாட்களில் அநேக தேசங்களின் மீது இயற்கை செயற்கை சீரழிவுகளால் தேவ கோபாக்கினை ஊற்றப்படுவதைக் காண்கிறோம். மேலும், எபேசியர் 1:17-23 வசனங்களில், 'மகிமையின் பிதாவானவர் ... அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்' என்று பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவை உயர்த்தியுள்ளதை குறித்துத் தெளிவாக வாசிக்கிறோம்.
மற்றும், 'கர்த்தராகிய தேவனே, ... தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது, ... பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது ...' என்றும் வெளி.11:17,18 ஆம் வசனங்களில் வாசிக்கிறோம்.
வச.10 12 : குமாரனாகிய மேசியா கிறிஸ்துவை கோபப்படுத்தி அழிந்துவிடாமல் அவருக்கு பயந்து அவரை அண்டிக்கொண்டு பாக்கியவான்களாக மாற பூமியின் ராஜாக்களை பரிசுத்த ஆவியாகிய தேவன் எச்சரித்து அழைப்பு விடுக்கிறார். 2 பேதுரு 3:10-14 வசனங்களில் பேதுரு அப்போஸ்தலர், 'சமாதானத்தோடே அவர் (கிறிஸ்து) சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்' என்று கூறுவதை பார்க்கலாம்.
Author: Rev. Dr. R. Samuel