முக்கியக் கருத்து :
- உண்மையை பேசி நீதியை நடப்பிக்கிற மனிதன் மாத்திரமே கர்த்தருடன் ஐக்கியமாக இருக்கமுடியும்.
(வச.1-3) தூய்மையாய் பேசி, மற்றவர்களைப் புண்படுத்தாமல். நேர்மையாய் நடக்கிறவர்கள் மாத்திரமே கர்த்தருடைய பரிசுத்த பர்வதம் என்றழைக்கப்படும் பரலோக ராஜ்ஜியத்திலே தங்கி வாசம் செய்யமுடியும்.
"நீ ... தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு;...' (2 தீமோத்தேயு 2:15,16).
(வச.5-6) இப்படிப்பட்ட நீதிமான் தீமை செய்கிறவர்களை வெறுத்து, கர்த்தருக்குப் பயந்தவர்களை மதிக்கிறான். தன்னுடைய பணத்தை லஞ்சம் பெறுவது மூலமோ, அநியாய வட்டியின் மூலமோ ஏழைகளை ஏமாற்றி பெருக்குவதில்லை. ஆகவே, அப்படிப்பட்ட நீதிமானுடைய வாழ்க்கை என்றென்றைக்கும் பாதுகாப்பாய் நிலைநிற்கும். நம்முடைய பணத்தை நாட்டிற்கும், குடும்பத்திற்கும் நன்மை பயக்கும்படி நல்ல வியாபாரத்தில் செலவிட்டு விருத்தி செய்யவேண்டும் என்பதை உவமை மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (மத்தேயு 25:14-30) வசனங்களில் விளக்கியிருக்கிறார்.
நாம் அறிந்துகொள்ளவேண்டியது, ஒரு மனிதன் தனது சொந்த நீதியான கிரியைகளில் நீதிமானாவதில்லை. பாவத்தின் கூரை ஒடித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தனது வாழ்க்கையை கர்த்தருக்கு அர்ப்பணம் செய்யும்போது நீதிமானாக்கப்படுகிறான்.
"நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்' (ரோமர் 5:1).
Author: Rev. Dr. R. Samuel