முக்கியக் கருத்து
- கர்த்தரால் மீட்கப்பட்ட அவருடைய பரிசுத்தவான்கள் அவரை புதுப்பாட்டுடன் துதிக்கவேண்டும்.
- கர்த்தரால் மீட்கப்பட்ட அவருடைய பரிசுத்தவான்கள் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தால் சாத்தானின் ராஜ்ஜியத்தைத் தண்டிக்கவேண்டும்.
வச.1-5 - தனிப்பட்ட நபர், கூட்டமான ஜனம், சர்வ சிருஷ்டி இவையெல்லாம் கர்த்தரைத் துதிக்கும் வேளையில், கர்த்தரால் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள் புதுப்பாட்டுடன் கர்த்தரைத் துதிக்கவேண்டும் (வச.1). இந்தப் புதுப்பாட்டு அவரால் மீட்கப்பட்ட சீயோன் என்னும் தேவ ஜனங்கள் மாத்திரமே பாட முடியும் வெளி.5:9,10, 14:3. இஸ்ரவேல் என்ற இந்த தேவ ஜனம் தன்னை உண்டாக்கினவரில் மகிழ்ந்து பாடி துதிக்கவேண்டும், உண்டாக்கினவர் என்பது இரண்டு விதங்களில் உண்டாக்கினவரைக் குறிக்கிறது. ஒன்று, தங்களை எல்லா மனிதரைப்போல படைத்தவர். ஆதி.2:7 இரண்டாவது தங்களை இரட்சித்ததினால் தேவ புத்திரர்களாக படைத்தவர் (வச.2) ஏசாயா 43:21; யோவான் 1:12,13. இந்த மகாபெரிய பாக்கியத்தைப் பெற்ற அவருடைய ஜனம் அவரை ஆவியில் களிகூர்ந்து இசையோடு இருதயம் களிகூர்ந்து உள்ளான குதூகளிப்பினால் பாடும். லூக்கா 1:46-48; ரோமர் 14:17 (3). இவர்கள் மேல் தேவன் மகா பிரியம் வைத்திருக்கிறார் (4). ஏசாயா 62:4; எபேசியர் 5:9,10
இந்தப் பரிசுத்தவான்கள் படுக்கையிலும் கெம்பீரிப்பார்கள். இரவு தூக்கத்திலும் தங்கள் தேவனை துதிக்கும் பாடல் வாயில் இருக்கும் சங்.4:3-5. வியாதிப்படுக்கையிலும் கூட சோர்ந்து போகாமல் கெம்பீரிப்பார்கள் சங்.41:3; யோபு 35:11.
வச.6-7 - கர்த்தரால் மீட்கப்பட்ட இந்தப் பரிசுத்தவான்கள் தங்கள் வாயில் எப்போதும் கர்த்தருடைய வசனமாகிய இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை வைத்திருப்பதால் இந்த ஆவிக்குரிய பட்டயத்துடன் சாத்தானின் ராஜ்ஜியத்தோடும், எல்லா பொல்லாப்புகளுடனும் போரிடுவார்கள். காலத்தின் முடிவில் மனந்திரும்பாத அந்திக்கிறிஸ்துவின் உலகத்தின் மேல் நியாயத்தீர்ப்பு செலுத்துவார்கள். 1 கொரி.6:2,3; எபேசி.6:17; எபிரெயர் 4:12; வெளி.2:26,27; வெளி.19:13,14,15, 20:4.
வச.8, 9 - ஆகவே, மீட்கப்பட்டவர்களாகிய தேவ புத்திரர் என்னும் பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் இரண்டு விதமான கனத்தைக் கொடுக்கிறார்.
1. அவரைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர்கள் வாயில் கொடுக்கிறார்.
2. பொல்லாத உலகத்தைத் தண்டித்து நியாயந்தீர்க்கும் இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய வேத வசனத்தையும்
அவர்கள் வாயில் கொடுக்கிறார்.
ராஜ்ஜியங்கள் மேல் அதிகாரம் பெற்று கர்த்தரோடு இவர்கள் சதாகாலமும் ஆளுகை செய்வார்கள்.
இந்த ஆளுகை செய்ய நாமும் ஆயத்தப்படுவோம்!
Author: Rev. Dr. R. Samuel