முக்கியக் கருத்து
- அக்கிரமக்காரன் வஞ்சகமாய் பாவத்தில் விழச்செய்வான். நீதிமானோ கடிந்துகொண்டாலும் பாவத்திற்கு விலகச் செய்வான்.
- அக்கிரமக்காரனிடமிருந்து தான் தப்பவும், தன்னை நன்மைக்காக கடிந்துகொள்ளும் நீதிமானின் பாதுகாப்பிற்காகவும் தாவீது ஜெபிக்கிறான்.
வச.1-4 - தாவீது ஒரு தீவிரமான பதிலை எதிர்பார்த்து கர்த்தரிடம் ஜெபம் ஏறெடுக்கிறான். தனது ஜெபம் சுகந்த வாசனையான தூபவர்க்கம் போலவும் கர்த்தருக்கேற்ற பலியின் காணிக்கையாகவும் அவர் சமூகத்தில் எட்ட விரும்புகிறான். அவசரமான பதில் எதிர்பார்க்கும் இந்த ஜெபம் எதற்காக என்றால், அக்கிரமக்காரர் தன்னை வசீகரமான வார்த்தைகளால் வஞ்சித்து பாவம்செய்ய இணங்க ஒட்டாமல் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக என்று தாவீது குறிப்பிடுகிறான். பிசாசின் வஞ்சகமான தந்திரங்களுக்கு நாம் எத்தனைபேர் தாவீதைப்போல ஜாக்கிரதையாக இருந்து தேவனின் பாதுகாப்பை வேண்டிப் பெற்றுக்கொள்ளுகிறோம்? நம் ஆண்டவரும் ஜெபிக்க கற்றுக்கொடுத்தபோது இதையே
"எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்' என்று மத்தேயு 6:13 ஆம் வசனத்தில் வேண்டிக்கொள்ளும்படியாகச் சொல்லியிருக்கிறார்.
"என் வாய்க்குக் காவல் வையும்' வச.3 என்று தாவீது வேண்டுகிறான். அனேகருடைய வாயின் வார்த்தைகளே அவர்களை பாவத்தில் விழச் செய்கிறது. ஆகவேதான் பவுல் 1 கொரி.15:13 ஆம் வசனத்தில் "ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்' என்று சரியாய் புத்தி சொல்லியிருக்கிறார்.
வச.5,6 - நீதிமானுடைய கடிந்துகொள்ளுதலோ என்னை பாவத்திற்கு விலக்கும். ஆகவே, அவற்றை விருப்பமாய் ஏற்றுக்கொள்வேன் என்று தாவீது கூறுவதை பார்க்கிறோம். கடிந்து கொள்ளுதலை அநேகர் விரும்பாத சூழ்நிலையில் தாவீதின் இந்த அறிக்கை அவனுடைய நேர்மையை நீதியின் மேலுள்ள பசிதாகத்தை காண்பிக்கிறது. இவ்விதமாக, தாவீது அக்கிரமக்காரரின் ஆலோசனையை வெறுத்து நீதிமானின் கடிந்து கொள்ளுதலை விரும்புவதால் தாவீதின் வாயை கர்த்தர் காத்துக்கொண்டார், அதிலிருந்து நன்மையான வார்த்தைகள் வருகிறது (6). அக்கிரமக்காரருடைய அதிபதிகள் தள்ளுண்டுபோவார்கள். அப்போது, தேவபிள்ளையாகிய என் வார்த்தைகளை அனைவரும் விருப்பமாய் கேட்பார்கள் என்று தாவீது தனது அனுபவத்ததிலிருந்து இங்கே கூறுகிறான். சவுல் தள்ளுண்டு போனான். அப்போது இஸ்ரவேலர் தாவீதின் வார்த்தைகளை கேட்டு தாவீதை இராஜாவாக்கினார்கள்.2 சாமு.2:4, 5:3. கர்த்தருக்காகவும், அவர் நீதிக்காகவும் உண்மையாயிருந்து ஞானத்தை சம்பாதிக்கும்போது நமக்கும் அந்த மேன்மை கிடைக்கும். நீதி.4:7-9.
வச.7-10 - துன்மார்க்கன் தொடர்ந்து இந்த அக்கிரம உலகில் கிரியை செய்துகொண்டிருக்கலாம். ஆனாலும், அவன் அழிவு கடைசியில் நிச்சயம் சம்பவிக்கும். அம்மட்டுமாக,நானோ கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து, கர்த்தரை மாத்திரமே ஒத்தாசைக்காக நோக்கிப் பார்த்து துன்மார்க்கனுடைய எல்லாவிதமான கண்ணிகளுக்கும் அவர்களால் வரும் பலவிதமான துன்பங்களுக்கும் தப்புவேன் என்று தாவீது தனது விசுவாசத்தை அறிக்கையிடுகிறான். நாமும் அப்படி அறிக்கை செய்து ஜெயிப்போமா? எரேமியா 17:7,8; கொலோ.1:27.
Author: Rev. Dr. R. Samuel