முக்கியக் கருத்து
- தாவீது கர்த்தருக்கு பொருத்தனை செய்தான்.
- கர்த்தர் தாவீதுக்கு வாக்குத்தத்தம் அருளினார்.
தாவீதின் வாழ்க்கையில் தாவீதுக்கும் கர்த்தருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த பொருத்தனையும் வாக்குத்தத்தமும் எல்லா
விசுவாசிகளுக்கும் அருமையான நடைமுறை சத்தியங்களை போதிக்கிறது.
1. (வச.1-10) - தாவீதின் பொருத்தனை
தாவீது தான் எருசலேமை கைப்பற்றவும், கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை திரும்பவும் பெலிஸ்தியர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அதன் உரிய இடத்திற்குக்கொண்டுவரவும் எடுத்துக்கொண்ட சிரமங்கள் உபத்திரவங்கள் இவற்றை கர்த்தர் நினைவு கூறும்படி வேண்டிக்கொள்ளுகிறான். அதுமாத்திரமல்ல கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற வாஞ்சை, பாரம் தாவீதின் மனதில் எழும்பி அதற்காக கர்த்தரிடம் பொருத்தனையும் செய்கிறான். இந்த பின்னணி 2 சாமுவேல் 6,7 அதிகாரங்களில வாசிக்கிறோம்.
ஆகவே, இந்த காரியங்களை நினைவு கூர்ந்து கர்த்தர் தனது சந்ததியை ஆசீர்வதிக்க வேண்டுமென்று பொருத்தனையோடு கூடிய ஜெபமன்றாட்டை தாவீது ஏறெடுப்பதை பார்க்கிறோம்.
விசுவாசிகளாகிய நாம் இந்த பூமியில் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்படும்படியாக தேவ சபைகள் பல தேசங்களிலும் எழும்ப பாரப்பட்டு, பிரயாசப்பட்டு கர்த்தருக்கு ஊழியம் செய்ய பொருத்தனையுடன் செயல்பட வேண்டும் என்ற சத்தியத்தை நமக்கு இந்த தாவீதின் செயல் உணர்த்துகிறது.
2. (வச.11,12) - கர்த்தரின் வாக்குத்தத்தம்
கர்த்தர் தாவீதுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் நிபந்தனையுடன் கூடியதாக இருந்தது. தாவீதின் குமாரர் கர்த்தருடைய உடன்படிக்கையை காத்து அவர் கட்டளைகளின்படி நடந்துகொண்டால், என்றென்றைக்கும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி தாவீதுக்கு நிரந்தர சந்ததியை கொடுப்பேன் என்றார். 1 இராஜா.8:25, உபா.28:1, மத்தேயு 5.:1-10.
3. (வச.13-18) - கர்த்தரின் நிறைவேறிய வாக்குத்தத்தம்
கர்த்தர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் அவனது மாம்ச பிரகாரமான குமாரனாகிய சாலெமோன் மூலம் நிறைவேறவில்லை. காரணம், சாலெமோன் கர்த்தருடைய உடன்படிக்கையை காத்துக்கொள்ளவில்லை. 1 இராஜா.11:4-6, 32,33, 2 நாளா.36:17 தாவீதின் குமாரர் சிங்காசனத்தை இழந்தார்கள். ஆனால், வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ள தேவன் தாவீதின் ஆவிக்குரிய ரீதியான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தாவீதின் சிங்காசனம் நிலைபெறுகிறது. ஆவிக்குரிய சந்ததி உடன்படிக்கையை காத்துக் கொள்ளும்.
மத்தேயு 1:11, ஆதி.49:11, ஏசாயா 9:6, சகரியா 6:12,13, 7:9 எபேசியர் 1:19-23, 2:7, வெளி.2:25,26,27.
Author: Rev. Dr. R. Samuel