முக்கியக் கருத்து
- தேவ மக்கள் விசுவாச ஜீவியத்திலும் ஒழுக்கத்திலும் தாழ்மையிலும் வளரவேண்டும்.
- வாழ்வின் எல்லா உயர்வுகளுக்காகவும் நம்பிக்கையோடே கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும்.
வச.1,2 - விசுவாசிகள் தங்கள் விசுவாச ஜீவியத்தில் வளரும்போது இறுமாப்பு, மேட்டிமை போன்ற வீம்பும் பிரயோசனமற்றதுமான குணங்கள் தானாக அப்புறப்படுத்தப்பட்ட வேண்டும். இவற்றிற்கு மாறாக தாழ்மை, ஒழுக்கம் போன்ற பயனுள்ள, கர்த்தருக்குப் பிரியமான குணங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பால் மறந்த குழந்தையின் உதாரணத்தை சங்கீதக்காரன் பயன்படுத்துகிறார். ஒரு சிறு பாலருந்தும் குழந்தை தனது பசி, தூக்கம் போன்ற தேவைகளுக்காக அழுது தனது தேவையை தெரியப்படுத்தும். ஆனால், பால் மறந்த குழந்தை ஒரு வளர்ந்த நிலைக்கு வந்திருப்பதால் தாயின் சொற்கேட்டு ஒழுக்கமாக தன் தேவைகளை கேட்டு பெற்றுக்கொள்ளும். பிலிப்பியர் 4:5,6 1 பேதுரு 5:6 2 பேதுரு 1:4-8.
வச.3 - இவ்விதமாக படிப்படியாக தங்களது திவ்ய குணங்களில் வளரும் தேவஜனம் என்றென்றைக்கும் தங்கள் எல்லா தேவைகளுக்கும் கர்த்தரையே நம்பியிருக்கும். இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக என்ற ஆலோசனை, நிச்சயம் கர்த்தர் இஸ்ரவேலுக்கு எந்நாளும் சகாயம் செய்வார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
Author: Rev. Dr. R. Samuel