முக்கியக் கருத்து
- கர்த்தரை நம்புகிறவர்கள் ஒரு பர்வதத்தைப் போன்று உறுதியாக இருப்பார்கள்.
- நீதிமான்களை அநியாயக்காரர் மேற்கொள்வதில்லை.
- பின்மாரிப் போகிறவர்கள் ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்.
1. வச.1,2 - ஒரு பர்வதம் பலத்த காற்று மழை இவற்றால் பாதிக்கப்படாமல் நிலையாய் இருப்பதுபோல கர்த்தரை நம்புகிறவர்கள் வாழ்க்கையில் வீசும் சூறாவளி போன்ற பிரச்சனைகளுக்குக் கலங்காமல் திடமனதாயிருப்பார்கள். யோவான் 16:33. சீயோன் பர்வதம் நிலைத்திருக்கும் என்று இங்கே (வச.1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்தின்படியான சீயோன் பர்வதம் கர்த்தருடைய ஆயிரம் வருட அரசாட்சிவரை நிலைத்திருப்பதையும், ஆவிக்குரிய சீயோன் பர்வதமாகிய தேவனுடைய ராஜ்ஜியத்தின் தலைநகர் நித்தியமாக நிலைத்திருப்பதையும் குறிக்கிறது. ஏசாயா 51:6, 54:10, வெளி.14:1, யோவான் 3:16 எருசலேம் நகரம் பர்வதங்களால் சூழப்பட்ட நகரம் என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த பர்வதங்கள் எருசலேம் நகருக்கு பாதுகாப்பை அளிக்கின்றன.அதேபோல, கர்த்தர் தமது ஜனத்தைச் சூழ்ந்திருந்து பாதுகாப்பைக் கொடுக்கிறார் என்று (வச.2) நமக்கு உறுதியளிக்கிறது. ஏசாயா 25:4.
2. வச.3 - துன்மார்க்கர் நீதிமானை பாவஞ்செய்ய நிர்ப்பந்திக்க முடியாது. அநியாயக்காரர் நீதிமான்களை மேற்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கர்த்தர் நீதிமான்களுக்கு பாதுகாவலாயிருக்கிறார். மத்தேயு 6:13, 1 யோவான் 3:9.
3. வச.4 - நல்லவர்களுக்கும் செம்மையானவர்களுக்கும் கர்த்தர் நன்மைசெய்ய வேண்டுமென வேண்டுதல் ஏறெடுக்கப்படுகிறது. கர்த்தரால் நீதிமான்களாக்கப்படுகிறவர்களே நல்லவர்களும் செம்மையானவர்களும் என்று வேதம் சொல்லுகிறது. ரோமர் 3:23,24.
ஆகவே, கர்த்தரிடம் நன்மைபெற்றுக்கொள்ள நாம் இரட்சிக்கப்பட்டு அவரால் நீதிமான்களாக்கப்படவேண்டும்.
4. வச.5 - கர்த்தருடைய வழியை தெரிந்துகொள்ளாமல் கோணலான வழியை தெரிந்துகொள்ளுகிறவர்களுக்கோ கர்த்தருடைய நன்மை கிடைக்காமல் அக்கிரமக்காரோடே ஆக்கினைத்தீர்ப்பே கிடைக்கும். மத்தேயு 25:46, வெளி.19:20,21. கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட இஸ்ரவேலருக்கு தமது உடன்படிக்கையின்படி சமாதானத்தை தந்தருளுவார். கலாத்தியர் 6:16
Author: Rev. Dr. R. Samuel