முக்கியக் கருத்து
- உலக அகங்காரிகளிடமிருந்து விடுவிக்கப்பட பரலோக தேவனையே நோக்கி ஜெபிக்கவேண்டும்.
- வேலைக்காரர் எஜமானின் கட்டளையையும், உதவியையும் நோக்குவதுபோல தாழ்மை மனப்பான்மையுடன் தேவனை நம்பிக்கையோடே பார்க்கவேண்டும்.
1. (வச.1) நமது உதவிகளுக்காக பரலோகத்தின் தேவனையே நம் கண்கள் நோக்க வேண்டும். அவரே வல்லமையின் உறைவிடம். ஆண்டவராகிய இயேசுவும் அதையே நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார் மத்.6:9. ஏனென்றால்? "நன்மையான எந்த ஈவும் .... பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவிடத்திலிருந்து இறங்கிவருகிறது' என்று யாக்கோபு 1:17 ஆம் வசனத்திலும் வாசிக்கிறோம்.
2. (வச.2) நமது தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவுகள் அநேக வித உறவுகளாக வேதத்தில் பல இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த இடத்தில் வேலைக்காரர், எஜமான் என்ற உறவு காட்டப்பட்டுள்ளது. இந்த விதமான உறவில் வேலைக்காரரை போன்று நாம் நமது எஜமானாகிய தேவனை நோக்கிப் பார்ப்பதில் பல சத்தியங்கள் அடங்கி உள்ளன. நாம் தாழ்மையோடும், நம்பிக்கையோடும் அவரை நோக்கிப் பார்க்கவேண்டும். எஜமானிடம் கட்டளைகளை எதிர்பார்க்க வேண்டும். அவற்றை உத்தமும் உண்மையுமாய் நாம் நிறைவேற்றி முடிக்கும்போது எஜமான் நமக்கு வெகுமானம் கொடுத்து வாழவைப்பார் என்பது நிச்சயம். மேலும், எஜமானிடமிருந்து உதவி பெறும்வரை அவரை விடாது நோக்கிப் பார்க்கவும் வேண்டும். ஆதி.32:26, 1 தெச.5:17.
3. (வச.3,4) இந்த உலகத்திலே பல அகங்காரிகளும் பொல்லாதவர்களும் தேவ பக்தியாய் நடப்பவர்களை துன்பப்படுத்துவது தொடர்ந்து நடந்து வந்தாலும், தேவமக்கள் அவர்களிடமிருந்து விடுபட தேவனிடம் தாழ்மையாக ஜெபிக்கலாம் என்று இந்த வசனங்கள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. 2 தீமோத்.3:12,13
இவற்றினிடையே நாம் நமக்கு போதிக்கப்பட்ட வார்த்தைகளில் நிலைகொண்டிருக்க வேண்டும். பொல்லாதவர்கள் நிலைப்பதில்லை என்று வசனம் நமக்கு உறுதியளிக்கிறது. 2 தீமோத்.3:9,10. இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து நிரந்தரமாக நாம் விடுபட்டு தேவபிரசன்னத்தில் நித்தியமாக வாழும் நாளை எதிர்பார்த்து ஏறெடுக்கும் ஜெபமாகவும் இந்த கதறல் காணப்படுகிறது. தீத்து 2:13
Author: Rev. Dr. R. Samuel