முக்கியக் கருத்து
- தேவனுடைய ஆலயம் மகிழ்ச்சியை தரும் இடம்.
- தேவனுடைய ஆலயத்தில் ஐக்கியம் உண்டு.
- தேவனுடைய ஆலயத்தில் சமாதானம் உண்டு.
1. வச.1,2 - கர்த்தருடைய ஆலயத்தில் மகிழ்ச்சி
கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்து ஆராதிப்பதை தனது வாழ்க்கையில் தாவீது பெருமகிழ்ச்சியாகக் கொண்டிருந்ததை இந்த வசனங்களில் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கிறோம். சங்கீதம் 42:1,2 கர்த்தருடைய ஆலயத்திற்கு வருகிற எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டு. அந்த மகிழ்ச்சி இந்த உலகத்தில் மாத்திரம் நின்றுவிடாமல் நித்தியத்திற்கும் தொடரும் ஏசாயா 51:11, யூதா 24.
விசுவாசிகளாகிய நாம் எத்தனை பேர் மகிழ்ச்சியாக கர்த்தரை ஆராதிக்க ஆலயத்திற்கு கடந்து செல்கிறோம்?
2. வச.3,4,5 - கர்த்தருடைய ஆலயத்தில் ஐக்கியம்
தேவனுடைய ஆலயத்தில் நாம் மகிழ்ச்சியடைவதற்கு பல காரணங்கள் உண்டு என தாவீது உணர்ந்ததை எழுதியிருக்கிறான். விசுவாசிகளாகிய நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனுடைய ஆலயம் நமக்கு கர்த்தரோடும் சக விசுவாசிகளோடும் நெருக்கமான தொடர்பையும், ஆவியின் ஐக்கியத்தையும் அன்பையும் ஏற்படுத்திக்கொடுத்து உற்சாகத்தையும் மனோதைரியத்தையும், ஆத்துமாவிலே களிப்பையும் கொடுக்கிறது. இப்படி சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளதைத்தான் "எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது' என்று வச.3 இல் தாவீது எழுதியிருக்கிறான். மாத்திரமல்ல, தேவனுடைய ஆலயத்தில் கர்த்தரை மகிழ்ச்சியோடு ஸ்தோத்தரித்து தேவன் செய்த நன்மைகளை தேவ ஜனம் சாட்சியாக அறிவிக்கும்போது (வச.4) மற்ற விசுவாசிகளின் விசுவாசமும் உறுதிப்படுகிறது. அங்கே தேவன் தமது மக்களின் பிரச்சனைகளினின்று அவர்களை விடுவிக்க தமது நியாயத்தைக்கட்டளையிவார் (வச.5). தேவ மக்கள் தங்கள் ஐக்கிய ஜெபத்தின்மூலம் தேவனிடமிருந்து நீதி நியாயத்தை பெற்றுக்கொள்வார்கள். யோவான் 15:7-12 1 கொரி.12:12,13.
3. வச.6-9 - கர்த்தருடைய ஆலயத்தில் சமாதானம்
தேவனுடைய ஆலயத்திலே தேவ மக்களுக்கு தேவன் சமாதானத்தை கட்டளையிடுகிறார். இந்த உலக வாழ்க்கையில் பல சூழ்நிலைகள், பல சம்பவங்கள் நமது உள்ளான சமாதானத்தைக் கெடுக்கிறவைகளாக காணப்படுகிறது. தேவ சமூகத்தில் வந்து கர்த்தரை ஆராதிக்கும்போது, அவர் சர்வத்தையும் ஆளுகிறவரானபடியினாலும், நமது வாழ்க்கையின் எல்லா காரியங்களையும் அறிந்தவரானபடியினாலும் நமக்குக் கர்த்தர் சமாதானத்தை கொடுக்க வல்லவராயிருக்கிறார். இதை அனுபவித்த தாவீது கர்த்தருடைய ஆலயத்தினிமித்தம் அங்கு வருகிற அனைவருக்கும் சமாதானம் உண்டாக வாஞ்சிக்கிறதை எழுதியிருக்கிறான். லூக்கா 1:71,73-75, வெளி.7:4, 9,17. எழுத்தின்படியான எருசலேம் நகரத்தின் சமாதானத்திற்காகவும் தேவன் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலருக்காகவும் நாம் ஜெபிக்கும்படியாக இந்த வசனத்தில் தேவசித்தத்தை அறிவித்திருக்கிறதை வாசிக்கிறோம். சங்கீதம் 51:18, ஆதி.12:2,3, எண்.23:20,24.
Author: Rev. Dr. R. Samuel