முக்கியக் கருத்து
- கபடும் பொய்யும் நிறைந்தவர்களிடமிருந்து விடுவிக்கப்பட ஏறெக்கும் ஜெபம்.
- சமாதானத்தை நாடுகிறவனின் ஜெபத்தை கேட்டு கர்த்தர் விடுவிக்கிறார்.
வச.1,2 - தனது நெருக்கத்தில் ஜெபித்தபோது கர்த்தர் ஜெபத்தைக் கேட்டதாக சங்கீதக்காரன் சாட்சி கூறுகிறான். இவனுடைய நெருக்கம் என்னவென்றால், கபடு பொய் பேசும் நாவுடையவர்கள் தன்னை சுற்றி இருக்கிறார்கள் என்பதே. பொய்யும், வஞ்சகமும் நிறைந்த உலகத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் சபையின் நிலமையை இந்த சூழ்நிலை காட்டுகிறது. இப்படிப்பட்ட பாவ உலகின் கறைகளிலிருந்து தன்னை தப்புவித்து காத்துக்கொள்ள சபை இவ்விதமாக ஜெபிக்குமா? பிலிப்பியர் 1:11.
வச.3,4 - கபடு,பொய் நாவின் பலன் அழிவு என்பதை சங்கீதக்காரன் முழுமையாக அறிந்திருப்பதை எடுத்துக்கூறுகிறான்.
கிறிஸ்துவின் சபைக்கு இந்த முழுமையான அறிவு உண்டா? விசுவாசிகள் இதை அறிக்கையிடுவார்களா? யாக்கோபு 3:6.
வச.5,6,7 - மேசேக்கு, கேதார் என்ற பொய்யை விரும்பி சமாதானத்தைப் பகைக்கும் பொல்லாத இஸ்மவேல் போன்ற புறஜாதிகளின் மத்தியில் வாசம் செய்ய வேண்டியிருந்த நாட்களை சங்கீதக்காரன் தன் முழு உள்ளத்தோடு வெறுத்ததை வெளிப்படையாக காட்டுகிறான். தேவ மக்கள் இந்த உலகத்தின் அக்கிரமங்களை இவ்விதமாக முழுமையாக வெறுப்பார்களா? "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்' என்று 1 தெச.4:7 ஆம் வசனத்தில் பவுல் எழுதியிருப்பதுபோல விசுவாசிகள் கூறுவார்களா? சங்கீதக்காரன் தான் சமாதானத்தை நாடி அதை பெற்றுக்கொண்டதாகத்தான் இந்த சங்கீதம் அறிவிக்கிறது.
தேவ மக்களும் கபடத்தையும், பொய்யையும் முழுப்பகையாய் வெறுத்து தங்களை இந்த உலகின் அசுத்தங்களிலிருந்து விலக்கிக்காக்க ஊக்கமாகவும் உண்மையாகவும் ஜெபித்தால், நிச்சயம் கர்த்தர் தேவ ஜனத்தைக் காத்து பரிசுத்தமாக காத்துக்கொள்வார். 2 கொரிந்தியர் 1:12,14.
Author: Rev. Dr. R. Samuel