முக்கியக் கருத்து
- அழிவினின்று காத்ததால் கர்த்தரில் அன்புகூறுகிறேன்.
- இரட்சிப்பின் பாத்திரத்துடன் கர்த்தரை தொழுதுகொள்வேன்.
- பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருக்கு அருமையானது.
- பொருத்தனைகளை நான் கர்த்தருக்கு நிறைவேற்றுவேன்.
1. (வச.1-9) - கர்த்தரில் நான் ஏன் அன்புகூறுகிறேன்
கர்த்தர் தன்னை பெரிய அழிவிலிருந்து காத்ததால் அவரில் அன்புகூறுவதாக சங்கீதக்காரன் சாட்சி பகருகிறான். விசேஷமாக தனது ஆத்துமாவை மரணத்தினின்று தப்புவித்ததை முக்கியப்படுத்தி அதுவே கர்த்தர் மேல் தனது அன்பை உண்டாக்கியதாக சங்கீதக்காரன் கூறும் காரணம் தனது ஆவிக்குரிய ஜீவியத்தைக்குறித்த கவனத்தையும் நமக்கு தெரிவிக்கிறது.மேலும், தான் கர்த்தரை நோக்கி கெஞ்சி தனது ஆத்துமாவை சுற்றிக்கொண்ட இடுக்கண், மரணக்கட்டுகள் இவற்றிலிருந்து விடுவிக்க ஜெபித்தபோது அவர் தமது நீதியினாலும், மன உருக்கத்தினாலும், கிருபையினாலும் தன்னை இரட்சித்தார் என்று சங்கீதக்காரன் கூறுவது முற்றிலும் தனது ஆத்தும இரட்சிப்பையும் தனது ஜெபத்தின் அவசியத்தையும் இங்கே வலியுறுத்தப்படுவதை விசுவாசிகளாகிய நாம் கவனமாக பார்க்கவேண்டும் (3,4).
நாம் கர்த்தரில் அன்பு கூறுகிறோம். அது காரணமின்றி அல்ல என்பதை சங்கீதக்காரன் தெளிவுபடுத்துகிறான். கர்த்தர் முதலில் நம்மை நேசித்து, இரட்சித்து, தூக்கி எடுத்து பராமரித்ததால் நாம் நிச்சயம் அன்புகூறவேண்டும்.
1 யோவான் 4;9,10,19, யோவான் 15:16
2. (வச.10-13) இரட்சிப்பின் பாத்திரத்துடன் தொழுதுகொள்வேன்
கர்த்தரில் அன்புகூறுகிறவர்கள் செய்யும் முக்கிய முதன்மையான செயல் கர்த்தரை ஆராதித்து அவரை தொழுது கொள்ளுவதுதான். தான் கர்த்தரை எப்படி தொழுது கொள்வேன் என்பதை எல்லா தேவமக்களுக்கும் கற்பிக்கும் வகையில் சங்கீதக்காரன், எழுதியிருப்பது ஆழமான சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.
"இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்' (13) என்பது கர்த்தர் மாத்திரமே ஆத்தும இரட்சிப்பை கொடுக்க வல்லவர் என்பதையும், கர்த்தர் கொடுக்கும் எல்லா ஆசீர்வாதங்களிலும் ஆத்தும இரட்சிப்பே மேலானது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதாக இருக்கிறது. நம்முடைய விசுவாச ஜீவியத்தில் நாம் இதை உணர்ந்திருக்கிறோமா? அல்லது உலக ஆசீர்வாதங்களுக்கு முதன்மை இடத்தை கொடுக்கிறோமா என்பதை சிந்திக்கவேண்டும்.
"விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; ...' (வச.10) என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் சிந்திக்கும்போது சங்கீதக்காரன் கர்த்தரை விசுவாசித்ததால் தான் பல இன்னல்களிலிருந்து வருத்தங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு அதனால் இப்போது சாட்சியாக பேசுவதையும் அழகாக அறிவிக்கிறது.
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்பவீர்கள்' என்று புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன் போதித்தது பழைய ஏற்பாட்டில் சங்கீதக்காரனுடைய சாட்சிக்கு ஒத்திருக்கிறது.
3. (வச.15,16) - பரிசுத்தவான்களின் மரணம் அவருக்கு அருமையானது
பரிசுத்தவான்களாகிய கர்த்தருடைய உண்மையான விசுவாசிகளுடைய வாழ்க்கையில் அவர்களை இரட்சித்து, பாதுகாத்து அவர்கள் மரிக்கும்போதும் அவர்களுடன் அங்கே இருக்கிறார். அவர்கள் உலக வாழ்க்கையை முடித்து தம்மிம் வந்தடையும்படி மரணம் என்ற வாசல் வழியாக கடந்து வருவதால் அவர்களுடைய மரணம் கர்த்தருக்கு அருமையானதாக இருக்கிறது.
பிலிப்பியர் 1:21, 2 கொரி.5:1,2,
4. (வச.14, 17-19) - கர்த்தருக்கு என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்
கர்த்தரில் அன்புகூறுவதும், அவரை தொழுதுகொள்வதும் ஒரு தேவ பிள்ளை தனது பொருத்தனைகளை கர்த்தருக்கு செலுத்தி அவற்றை உண்மையாக நிறைவேற்றுவதில் உறுதிப்படுகிறது. கர்த்தருடைய ஆலயத்தில் அவருடைய ஜனங்களுக்கு மத்தியில் என் போருத்தனைகளை செலுத்துவேன் என்று சங்கீதக்காரன் தான் கர்த்தரில் பாராட்டும் அன்பை உறுதிப்பத்துவதை பார்க்கிறோம். நாம் கர்த்தரில் பாராட்டும் அன்பும், அவரை தொழுதுகொள்வதின் உறுதியும் எவ்விதத்தில் உள்ளது. நமது நேரம், பொருள், வாழ்க்கை இவற்றில் முக்கிய பகுதிகளை கர்த்தருக்கு பொருத்தனை செய்து செலுத்துகிறோமா என்பதை வேதவசன அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.
லேவியராகமம் 7:11-15, மல்கியா 3:10, 2 கொரி.9:1-8, பிலிப்பியர் 3:7,11.
Author: Rev. Dr. R. Samuel