முக்கியக் கருத்து
- நமது சுய மகிமையை தேடாமல் கர்த்தருக்கே மகிமை செலுத்த நாம் விரும்பவேண்டும்.
- நம் தேவன் பரலோகத்திலிருந்து அவரை நம்புகிறவர்களை ஆசீர்வதிக்கிறார்.
- வானங்களில் அவர் ஆளுகை செய்கிறார் பூமியையோ மனுப்புத்திரர் ஆளக் கொடுத்திருக்கிறார்.
1. (வச.1) நமக்கு அல்ல, தேவனுக்கே மகிமை
கர்த்தருக்கு நாம் செய்யும் ஊழியங்களிலும் பிறருக்கு நாம் செய்யும் உதவிகளிலும் நம்முடைய சுய மகிமையை தேடாமல் கர்த்தருக்கே மகிமையை செலுத்த விரும்பவேண்டும். அப்போது கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவோம்.
"நான் கர்த்தர், ... என் மகிமையை வேறொருவனுக்கும், ... விக்கிரகங்களுக்கும் கொடேன்' என்று ஏசாயா 42:8 ஆம் வசனத்தில் கர்த்தராகிய தேவனே கூறியிருப்பதால் இது தேவ கட்டளையாகி விடுகிறது. மேலும் நம்முடைய ஆண்டவரும் கூட "... பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. ... ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் ... உம்முடையவைகளே' என்று மத்தேயு 6:9-13 இல் ஜெபிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார். மேலும், 2 கொரி.10:17,18 இலும் "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்' என்றும் வாசிக்கிறோம். யோவான்ஸ்நானகன் கூட "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்' என்றார் யோவான் 3:30.
2. (வச.2,8,15,16) நம்முடைய தேவன் எங்கே என்ற புறஜாதிகளின் கேள்விக்கு சரியான பதில்
அவர்களுடைய தேவன் இப்போது எங்கே என்று புறஜாதிகள் கேள்வி கேட்கிறார்கள் (வச.2). நம்முடைய தேவன் இப்போது பரலோகத்திலிருக்கிறார். அங்கிருந்து தமக்கு சித்தமானவற்றை செய்து கொண்டிருக்கிறார். அதுமாத்திரமல்ல, அவர் வானத்தையும் பூமியையும் படைத்தவர்.தமது ஜனங்களை ஆசீர்வதிக்கிறார் என்பதே சரியான பதில் (வச.3,15). அவர் வானத்தை ஆளுகை செய்கிறார் பூமியையோ மனுப்புத்திரர் ஆள கொடுத்திருக்கிறார் (வச.16). ஆனால், இந்தக் கேள்வியைக் கேட்கும் புறஜாதிகளுடைய தேவர்களோ மனுஷருடை கைவேலையான வெறும் விக்கிரகங்கள். அவைகள் ஒரு கிரியையும் செய்ய முடியாதவைகள் என்பதும் புறஜாதிகளின் கேள்விக்கு ஏற்ற பதில். அசீரியா ராஜாவாகிய சனகெரிப் இவ்விதமாக ஜீவனுள் தேவனைக்குறித்து கேட்ட கேள்விக்கு யூதாவின் இராஜாவாகிய எசேக்கியாவின் பதிலும் இப்படியே இருந்தது. 2 இராஜா.19:9-19
3. (வச.9-14) நாம் மகிமை செலுத்த கர்த்தர் எவ்விதம் பாத்திரமாயிருக்கிறார்?
*நம்பத்தகுந்தவர் - துணையும் கேடகமுமாயிருக்கிறார் (9-11)
*நிச்சயமுள்ளவர் - நம்மை நிச்சயம் நினைத்து ஆசீர்வதிப்பார் (12,13)
*ஆதரிப்பவர் - நம்மையும் நம் சந்ததியையும் ஆதரித்து வர்த்திக்கச் செய்கிறவர் (14)
4. (வச.17,18) நமது பிரதிஷ்டை
ஆகவே, இப்படிப்பட்ட நம்பத்தகுந்த தேவனை இன்று முதல் என்றென்றைக்கும் இடைவிடாமல் ஸ்தோத்திரிப்பதே அவருடைய ஜனமாகிய நம்முடைய பிரதிஷ்டையும் குண நலனாகவும் இருக்கவேண்டும் (18). நாம் மாம்சத்தில் மரித்து, நம் சரீரம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிறகு நமது தொண்டையும் வாயும் அவரை துதிக்கும் தருணம் கடந்துபோய்விடும். ஆகவே, இப்பொழுதே கிடைக்கும் சமயத்தை பயன்படுத்திக் கொண்டு கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்து அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். சங்கீதம் 87, ஏசாயா 38:18-20, 1 தெச.5-18.
Author: Rev. Dr. R. Samuel