முக்கியக் கருத்து
- கர்த்தர் தரும் சரீர பிரகாரமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக சாட்சியாக சபையில் துதிக்கத் தீர்மானம்.
- கர்த்தர் தமது கிருபை, உடன்படிக்கை, கற்பனைகள், பரிசுத்தம் இவற்றால் அறியப்படுகிறார்.
- அவருடைய ஜனங்கள் அவருக்கு பயப்படுதல், கீழ்ப்படிதல், செம்மையாய் நடத்தல், துதித்தல் இவற்றால் அறியப்படவேண்டும்.
1. வச.1-4,7,8 - கர்த்தர் தரும் ஆசீர்வாதங்களுக்காக அவரை துதிக்க தீர்மானம்
கர்த்தருடைய செயல்கள் மகிமையும் மகத்துவமாகவும் நீதி நிலைநிற்கும் விதத்தில் இருக்கிறது. கர்த்தர் தமது உருக்கமான இரக்கத்தால் அதிசயமான கிரியைகளைச் செய்கிறார். ஆகவே, செம்மையானவர்களாகிய தேவ மக்கள் சபையிலே அவரை சாட்சியாகத் துதிப்பேன் என்று சங்கீதக்காரன் தீர்மானம் எடுக்கிறார்.
செம்மையானவர்கள் யார்?
புதிய ஏற்பாட்டில், செம்மையானவர்கள் எனப்படும் நீதிமான்கள், கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுகிறார்கள் என்ற சத்தியம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.ரோமர் 3:10-12, 22-24, ரோமர் 5:1
ஆகவே, செம்மையானவர்களாக்கப்பட்ட விசுவாசிகளாகிய நாம் சபையில் கர்த்தர் செய்த நன்மைகளுக்காக சாட்சி சொல்லுவதும், துதிப்பதும் முக்கியமான செயலாகும்.
ஆராதனைப் பாட்டு
கர்த்தரின் நாள் இது இதிலே நாம் மகிழுவோம்
கர்த்தரின் நாமத்தை கீர்த்தனம் பண்ணுவோம்
கர்த்தரை பணிந்து நாம் ஆராதிப்போம்
அனுபல்லவி
பரிசுத்த ஆவிக்குள் பெலனடைந்திடுவோம்
பரிசுத்த ஆவிக்குள் களிகூர்ந்திடுவோம் - கர்த்தரின்
சரணம்
தேவ அன்போ மாறிடாதே
துதிசெய் மனமே நன்றியாய்
எத்தனையோ நன்மை நமக்கு செய்தார்
அத்தனையும் எண்ணி ஸ்தோத்தரிப்போம்
- பாட்டு சகோதரி சாராள் நவரோஜி
2. வச.5,6,9 - கர்த்தர் தமக்கு பயந்தவர்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்கள்
கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட ஜனமாகிய இஸ்ரவேலருக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்பவர்களோடு செய்த உடன்படிக்கையினிமித்தம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களை கொடுத்ததோடு, ஆத்தும மீட்பாகிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் வாக்குக்கொடுத்துள்ளார். பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்தை பொல்லாத ஜாதிகளின் வசத்தினின்று எடுத்து தமது ஜனத்திற்கு சுதந்திரமாக கொடுத்தார். உபாகமம் 31. அவர்கள் கர்த்தருக்கு பயந்த தேவ ஜனமாக இருந்தபடியால் ஆகாரம் மாத்திரமல்லாமல் எல்லாவித தேவைகளையும் பூர்த்தி செய்தார். விசுவாசிகளாகிய நமக்கும் கர்த்தர் நிச்சயமாக எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து ஆசீர்வதிப்பார்.
3. வச.10 - தேவமக்களின் பதில்
இவ்விதமாக கர்த்தர் தமது கிருபை, உடன்படிக்கை, நீதி, பரிசுத்தம் இவற்றால் அறியப்பட்டவராக தேவ மக்களுக்கு சகல நன்மைகளையும் செய்யும்போது தேவ மக்கள் பதிலாக அவருக்கு பயந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரைத் துதித்து செம்மையானவர்களாக வாழவேண்டும். இதுவே அவர்களுக்கு ஞானத்தையும், புத்தியையும் புகழ்ச்சியையும் கொடுத்து நித்திய உடன்படிக்கையின்மூலம் சரீர ஆத்தும மீட்பையும் கொடுக்கும்.
Author: Rev. Dr. R. Samuel