முக்கியக் கருத்து
- தேவன் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய தமது ஜனத்தின் மீது மாறாத கிருபையுடையவர்.
- தேவ ஜனம் அவ்வப்போது சிறுசிறு சோதனைகளிலும் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள்.
- மோசே போன்ற தேவ ஊழியர் தேவ ஜனத்தின் இரட்சிப்புக்காக மன்றாடி அழிவுக்கு தப்புவித்தார்கள்.
1. கர்த்தருடைய மாறாத கிருபை (வச.1-5)
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. தாம் தெரிந்தெடுத்த ஜனத்திற்கு நன்மையை செய்து கிருபை பாராட்டி மகிழச்செய்கிறார். அவர்களும் தங்கள் தேவனை துதித்து, பிரஸ்தாபப்படுத்தி அவருடைய நியாயத்தை எக்காலமும் கைக்கொண்டு பாக்கியவான்களாயிருக்கவேண்டும். சங்கீதக்காரன், இப்படிப்பட்ட பாக்கியமுள்ள ஜனத்தோடு தன்னையும் சேர்த்து கர்த்தர் ஆசீர்வதிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறான். தேவன் தெரிந்துகொண்டு இரட்சிக்கும் ஜனம் பாக்கியமுள்ளது. நீங்களும் நானும்கூட கர்த்தரால் இரட்சிக்கப்பட்ட கூட்டத்தோடு ஆசீர்வதிக்கப்பட விரும்புவோமா?
2. தேவஜனத்தின் மாறும் விசுவாசம் (வச.6-46)
* வனாந்திர யாத்திரையில் மாறிய விசுவாசம் (வச.6-34)
எகிப்தில் பல அற்புதங்களைச் செய்து பலத்த கரத்தினால் தங்களைத் தேவன் வெளியே கொண்டு வந்ததை பார்த்திருந்தும் கூட சிவந்த சமுத்திரத்தண்டை வந்தபோது, பயந்து, விசுவாசம் மாறி முறுமுறுத்தார்கள். தேவன் அற்புதமாய் சிவந்த சமுத்திரத்தை வற்றிப்போகப் பண்ணி சத்துருவை அழித்தபோது மீண்டும் விசுவாசித்து தேவனை துதித்தார்கள். இந்த விசுவாசம் சீக்கிரமாய் மாறிவிட்டது. வனாந்திர யாத்திரையில் அப்பத்திற்காகவும், தண்ணீருக்காகவும், இறைச்சிக்காகவும் தேவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளாமல் தங்கள் இச்சைகளுக்காக பொறுமையின்றி முறுமுறுத்து விசுவாசத்தைவிட்டு மாறிப்போனார்கள். தங்கள் இரட்சகரான தேவனை மறந்து தாங்கள் வழிபட கன்றுக்குட்டியையும் செய்துகொண்டு மிகுந்த பொல்லாப்பை செய்தார்கள். இவ்விதமாக, தேவ ஜனத்தின் விசுவாசம் நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறியதால் தேவ கோபம் அவர்கள்மேல் மூண்டது (வச.18,23). ஆனாலும் தேவ ஊழியனாகிய மோசே திறப்பின் வாசலில் நின்று தேவ ஜனத்திற்காக மன்றாடினான் (வச.23). மேலும், தேவ ஜனம் புறஜாதி தேவர்களால் கறைபடுத்திக் கொண்ட போதும், அவர்களை தேவன் அழிக்காதபடி தேவதாசன் பினெகாஸ் நின்று நியாயஞ்செய்தான் (30). ஆகவே, தேவன் தாம் நினைத்தபடி தமது ஜனத்தை அழிக்காமல் தமது மாறாத கிருபையினால் அவர்களை மன்னித்தார் (34).
இன்றைக்கும் சோதனைகளில் விழுந்தும், இச்சைகளுக்கு கீழ்ப்பட்டும் பின்மாறிப்போகும் அநேக தேவ ஜனத்திற்காக நீங்களும் நானும் திறப்பின் வாசலில் நின்று ஜெபிப்போமா? அப்போது தேவன் தமது ஜனத்தை அழிவுக்கு தப்புவிப்பார்.
யாக்கோபு 5:19-20.
* வாக்குத்தத்த தேசத்தில் மாறிய விசுவாசம் (வச.35-46)
வனாந்திர யாத்திரை முடிந்து, பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான வாக்குத்தத்த தேசத்தில் தமது ஜனத்தைத் தேவன் குடியேற்றினார். அந்த தேசத்தின் குடிகளைக் கர்த்தர் தமது ஜனத்திற்கு முன் தாழ்த்தினார். அவர்களுடைய தேவர்களாகிய விக்கிரகங்களை சேவிக்காமல் அவர்களுடைய அருவருப்பான வழியில் நடக்காதபடி எச்சரித்திருந்தார்.உபாகமம் 12:29,30. ஆனாலும், தேவ ஜனம் புறஜாதிகளுடன் கலந்து அவர்கள் கிரியைகளைக் கற்றுக்கொண்டு (வச.35) கானான் தேசத்து
விக்கிரகங்களுக்குப் பலியிட்டு (வச.38) கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள் (வச.40). கர்த்தர் தமது ஜனத்தை புறஜாதிகள் ஆளும்படி அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.
ஆனாலும், தமது ஜனம் கர்த்தரை நோக்கி மறுபடியும் கூப்பிட்டபோது, தமது மாறாத கிருபையால் அவர்களை சத்துருக்களின் கையினின்று விடுவித்து மீட்டார் (44-46). விசுவாசிகளாகிய நாமும் இவ்வுலகத்து மாறுபாடான சந்ததியைவிட்டு விலகி பரிசுத்தமாக நம்மைக் காத்துக்கொள்ளும்படியாக புதிய ஏற்பாட்டிலும் எச்சரிக்கப்படுகிறோம். அப்போஸ்தலர் 2:40, 2 கொரிந்தியர் 6:14-18.
3. எங்கள் தேவனாகிய கர்த்தாவே (வச.47,48)
இஸ்ரவேல் ஜனம் பலவாறு விசுவாசத்தில் விழுந்து எழுந்தாலும், யெகோவா தேவன் மாத்திரமே தங்கள் கர்த்தர், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர் என்பதை உணரும் நிலையில் கடைசியாக வந்தடைய தேவன் செய்தார் என்றும், அதுவே அவர்களுக்கு நல்லது என்றும் சங்கீதக்காரன் தனது கவிதையை முடிக்கிறார்.
Author: Rev. Dr. R. Samuel