முக்கியக் கருத்து
- மிகவும் பெரியவராகிய கர்த்தர் பூமியையும் அதிலுள்ளவற்றையும் படைத்ததோடல்லாமல் அவற்றைப் பராமரிக்கும்படியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.
- இப்படிப்பட்ட மகிமையான தேவனை தியானிப்பது இனிமையானது, மகிழ்ச்சியை தருகிறது.
- இந்த பூமியைக் கெடுக்கும் பாவிகள் இராமற்போகும்படி நிர்மூலமாக்கப்படுவார்கள்.
1. (வச.1-23) கர்த்தருடைய சிருஷ்டிப்பின் குறைவின்மை.
மிகவும் பெரியவராகிய தேவன் மகிமையும் மகத்துவமுமானவர். அவரை என் ஆத்துமா ஸ்தோத்தரிக்கக் கடமைப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் இந்தப் பூமியை குறைவின்றி படைத்திருக்கிறார். தாம் படைத்த இந்த பூமியில் காணப்படும் மலைகள்,
பள்ளத்தாக்குகள், நீர்நிலைகள், ஆழங்கள் எல்லாமே அற்புதமாக இயங்கும்படியாக செய்திருக்கிறார், மேலும், பூமியில் தேவன் படைத்த மனிதன், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் ஜந்துகள். இவை அனைத்திற்கும் தேவையான ஆகாரம், தங்க இடம் இவற்றைத் தாராளமாக உற்பத்தி செய்ய சகலவிதமான பயிர், புல், மரங்கள் இவற்றைப் படைத்துள்ளார். மனிதனுக்கு மகிழ்ச்சி தரும் திராட்சை போன்ற பழங்களையும் கர்த்தர் உருவாக்கி இருக்கிறார். பலமுள்ள சிங்கம் போன்ற மிருகமாகிலும், பெலனற்ற குருவிகளாகிலும் எல்லா ஜீவராசிகளுக்கும் ஆகாரமும், தங்கும் இடமும் இப்பூமியில் உண்டு. மனிதனின் இருதயத்தை மகிழ்ச்சியாக்கி, முகக்களையும் உண்டாக்கும். எண்ணெயும் விளையும். பகல், இரவு என்ற காலங்களும் ஜீவராசிகளின் வாழ்க்கைக்கு ஆதரவாக மாறிமாறிவர சூரியன் சந்திரன் இவை காலக்குறிப்புகளை காட்டி இயங்கிக் கொண்டிருக்கும்.
(ஆதியாகமம் 1, யோவான் 1:1-15, எபிரெயர் 11:3).
மேலும், தமது கிரியைகளை இந்தப் பூமியில் கிரமமாக நடப்பிக்க தமது தூதர்களை காற்றுகளாகவும் அக்கினி ஜுவாலைகளாகவும் வல்லமையுள்ள ஊழியர்களாகவும் செய்திருக்கிறார் (வச.4).
2. (வச.24-32) சிருஷ்டிப்பில் கர்த்தருடைய ஆளுகை
கர்த்தர் தமது சிருஷ்டிப்பு எல்லாவற்றிலும் தமது ஆளுகையை ஸ்தாபித்து அவற்றில் மகிழுகிறார் (31). அவர் அளிக்க எல்லா ஜீவ ராசிகளும் தங்கள் தேவைகளை பெற்றுக்கொள்கிறது. அவர் மறைக்க அவைகள் திகைக்கிறது (28,29). மனிதர்கள், ஜீவராசிகள் இவற்றின் ஆயுட்காலத்தையும் தேவன் நிர்ணயிக்கிறார் (29).
கர்த்தர் ஒழுங்கற்று வெறுமையாய், இருளால் மூடப்பட்டிருந்த பூமியை புதிதாக்கி இப்போதுள்ள சகலமும் நிறைந்த பூமியை உருவாக்கினார் (30,24) ஆதி.1:1,2.
3. (வச.33-34) கர்த்தரின் தியானம் இனிமையானது
இப்படிப்பட்ட வார்த்தைகளால் விவரிக்க முடியாத கர்த்தரின் தியானம் இனிமையானது. நம் உயிர் உள்ளவரை அவரைப் பாடவேண்டும்.
4. (வச.35) பூமியை கெடுப்பவர்கள் அழிவார்கள்
இப்படிப்பட்ட நிறைவான பூமியை பாவத்தால் கறைப்படுத்தி கெடுக்கும் பாவிகள், துன்மார்க்கர் முற்றிலும் இல்லாதபடி அழிக்கப்படுவார்கள். அப்போது தேவனுடைய முழுமையான திட்டம் நிறைவேறும். பூமி பூரணப்பட்டதாயிருக்கும். வெளி.20,21,22.
Author: Rev. Dr. R. Samuel