முக்கிய கருத்து :
- இரண்டு விதமான மக்கள்
- வேதத்தை தியானிப்பவனின் பலன்கள்
- துன்மார்க்கனின் அழிவு
சங்கீத புத்தகத்தின் இந்த முதல் அதிகாரத்திலேயே இரண்டு வித மக்களைக்குறித்த வித்தியாசங்கள் எடுத்துக்காட்டி பேசப்பட்டுள்ளது. நீதிமான், துன்மார்க்கன் என்பதே இவ்விருவகையாகும். இவ்விருவகை மக்களின் பாக்கியம் துர்ப்பாக்கியம் பற்றியும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை சத்தியம் சங்கீத புத்தகத்தின் எல்லா அதிகாரங்களிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
மூன்று முக்கிய சத்தியங்கள் இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன :
1. நீதிமான் துன்மார்க்கனுடன் அவனுடைய வழிகளில் சேரக்கூடாது (வச.1).
2. நீதிமான் எப்போதும் வேதத்தை தியானிப்பதால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு செழிப்பாயிருப்பான் (வச2,3-6).
3. துன்மார்க்கன் தனது தீய வழிகளின் காரணமாக அழிவை சந்திப்பான் (வச4,5,6). பழைய புதிய ஏற்பாடுகளிலும் இவ்வடிப்படை சத்தியங்கள் போதிக்கப்படுவதைப் பார்க்கலாம்.
பழைய ஏற்பாடு
தேவனைத் தொழுதுகொள்ளும் தேவ ஜனம் பெரிய ஜாதி என்று உபாகமம் 4:7 என்ற பகுதியிலும், தேவனை ஆராதிக்காமல் விக்கிரகங்களையும் வீணாக உலக பொருட்களையும் வணங்குபவர்கள் புற ஜாதியென்று எரேமியா 10 ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
மேற்கூறிய இவ்விரண்டு அதிகாரங்களிலும் தேவ ஜனம் புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்களுடன் சம்பந்தம் கலக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாடு
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் விசுவாசிகள் என்றும், விக்கிரகங்களை வழிபடுகிறவர்கள் அவிசுவாசிகள் என்றும் விசுவாசிகள் அவிசுவாசிகளுடன் அவர்களுடைய வழிகளில் பிணைக்கப்படக் கூடாது என்றும் 2 கொரிந்தியர் 6:14-18 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். மேலும், அப்போஸ்தலர் 2:40 ஆம் பகுதியிலும் தேவ பிள்ளைகள் மாறுபாடானவர்களை விட்டு விலக வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக முடிவில் இயேசு கிறிஸ்து ஒரு ஜாதி மக்களை நித்திய பரலோக ராஜ்ஜியத்திற்கும் மற்ற ஜாதி மக்களை நித்திய நரக அக்கினிக்கும் பிரித்தனுப்புவார் என்று மத்தேயு 25:31-46 இல் வாசிக்கிறோம்.
நமது தமிழ்நாட்டின் பண்டைய புலவராகிய ஒளவையார் 'ஜாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி' என் தர்மம் செய்பவன் பெரிய ஜாதி என்றும் தர்மம் செய்யாதவன் தாழ்ந்த ஜாதியென்றும் மனித வர்க்கத்தில் இரண்டே ஜாதிகள் தவிர வேறில்லை என்று திண்ணமாக உரைத்துள்ளார்.
வேத புத்தகத்திலுள்ள பழைய புதிய இவ்விரண்டு ஏற்பாடுகளிலும் நீதிமான், துன்மார்க்கன் (அல்லது) விசுவாசி, அவிசுவாசி என்ற இரண்டு வித ஜாதி (மக்கள்) தவிர வேறு இன வித்தியாசங்கள் இல்லை என்றும் தேவ ஆவியானவர் தெளிவுபட வெளிப்படுத்தியிருக்கிறார்.
Author: Rev. Dr. R. Samuel